பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் .கோலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் உமாதேவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த 2006ம் ஆண்டு தனக்கு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும். இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கணவரை பிரிந்து விட்டு மீண்டும் ராஜ்குமார் என்பவரை மறுமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதைத்தொடரந்து பேறுகால விடுப்பு கேட்டு, தருமபுரி மாவட்ட கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்தபோது , மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான தகுதியின் அடிப்படையில், இரண்டு குழந்தைகளை மட்டுமே கொண்ட பெண் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் மறுமணத்தின் காரணமாக 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான விதி இல்லை என மறுத்துவிட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ள உமாதேவி, தான் 2017-ம் ஆண்டில் தான் அரசு பள்ளி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தேன். எனவே எனக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, மகப்பேறு பலன்களைப் பெறுவதற்காக குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத வரை, வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைக்கு எந்த தடையையும் விதிக்க முடியாது. எனவே மனுதாரருக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், தாய்மையின் முக்கியத்துவத்துவம் மற்றும் ஆழமான புரிதலாலும் புதிதாகப் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திய தமிழக அரசை இந்த உயர் நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.