உலகில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதே சமயம் வானில் பறக்கும் விமானங்களும் அவ்வப்போது விபத்துக்களில் சிக்குகின்றன. உலகில் வேறு எந்த வகையான விபத்துக்களுடன் ஒப்பிடும்போதும் விமான விபத்துக்கள் அரிதானவை தான். எனினும் ஒரு விமானம் விபத்தில் சிக்கினால் கூட, அது உலகையே உலுக்கி விடுகிறது.
விமான விபத்துக்கள் தொடர்பான செய்திகளை படித்தாலே நம்மை அறியாமல் நம் உடலில் நடுக்கம் பரவி விடுகிறது. விமான விபத்துக்களினால் அதிக அளவிலான பொருள் சேதாரமும், உயிர் சேதமும் ஏற்படுகிறது. சாலையில் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவதற்கான பெரும்பாலான காரணங்கள் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் விமானங்கள் விபத்துக்களில் சிக்குவது எதனால்? என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது. விமானங்கள் விபத்துக்களில் சிக்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் வானியல் துறை வல்லுனர்களால் முன்வைக்கப்படும் பொதுவான ஐந்து காரணங்களை பார்க்கலாம்.
பைலட்களின் தவறு:
விமானங்கள் விபத்தில் சிக்குவதற்கு பொதுவான காரணம் பைலட்களின் தவறுதான். விமான விபத்துக்களுக்கு 55 சதவீதம் காரணம் பைலட்கள் செய்யும் தவறுதான் என தெரிவிக்கப்படுகிறது. என்னதான் அதிநவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் கூட விமானங்களை இயக்குவது என்பது மிகவும் சிக்கலான காரியம். அவ்வாறான ஒரு கடினமான வேலையை தான் பைலட்கள் செய்து வருகின்றனர். விமானம் பறக்கும்போது பல்வேறு விஷயங்களை பைலட்கள் மானிட்டர் செய்தாக வேண்டும். அவர்கள் ஏதேனும் ஒரு சிறு விஷயத்தை தவறாக கணக்கிட்டால் கூட, அதன் விளைவு கொடூரமானதாக இருக்கும். ஆனால் அனைத்து விபத்துக்களுக்கும் பைலட்கள்தான் காரணம் என குற்றம்சாட்ட முடியாது. விமான விபத்துக்களுக்கு இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
ஏர் டிராபிக் கண்ட்ரோலர்களின் தவறு:
வானில் பறக்கும்போது இன்ஃபர்மேஷன் மற்றும் உதவிக்காக ஏர் டிராபிக் கண்ட்ரோலர்களைதான் பைலட்கள் சார்ந்திருக்கின்றனர். ஏர் டிராபிக் கண்ட்ரோலர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு விமானங்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானங்களின் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்கை ஷெட்யூல் செய்யும்போது வெதர், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய மிக முக்கியமான பணியை செய்யும் ஏர் டிராபிக் கண்ட்ரோலர்கள் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்திலும், விமானங்கள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வெதர்:
மோசமான வானிலையின் போது சாதாரண சாலையில் வாகனம் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானதோ, அதே போன்றுதான் விமானங்களை இயக்குவதும். விமானங்கள் விபத்துக்களில் சிக்குவதற்கு 13 சதவீத காரணம் மோசமான வானிலை தான் என விமான போக்குவரத்து துறை வல்லுனர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இயந்திர கோளாறுகள்: அறிவியலின் மிகப்பெரிய சாதனை விமானம். விமானங்கள் நூற்றுக்கணக்கான தனி அமைப்புகளால் ஆனவை. இவற்றில் ஏதேனும் ஒரு சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டால் கூட, விமானம் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இயந்திர கோளாறு காரணமாக 17 சதவீத விமான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்ற காரணங்கள்:
இவை தவிர விமான விபத்துக்களுக்கு இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், நாச வேலையும் ஒன்று. விமான விபத்துக்களுக்கு 8 சதவீதம் நாசவேலை காரணமாக இருக்கிறது. இதுதவிர மோசமான ஓடுதள (Runway) பராமரிப்பும் கூட விமான விபத்துக்களுக்கு ஒரு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கே பறவைகளையும் நிச்சயமாக குறிப்பிட்டே ஆக வேண்டும். விமானங்கள் விபத்துக்களில் சிக்குவதற்கு பறவைகளும் கூட ஒரு காரணமாகவே உள்ளன. ஒரு பெரிய பறவை விமானத்தின் விண்டு ஸ்க்ரீன் அல்லது இன்ஜின் மீது மோதினால், சேதாரம் ஏற்படும். இது விமானங்கள் விபத்தில் சிக்குவதற்கு வழிவகுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.