ஆசிரியர் -இரா.முருகவேள்
பதிப்பகம் -ஐம்பொழில்
ஆசிரியரின் நாவல்கள் சிலவற்றை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். எடுத்துக்கொண்ட கதைக்களங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக, வேறுபட்ட கோணங்களில் சொல்லப்பட்ட நாவல்களாக இருக்கும்.ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்த புத்தகம்.மொத்தம் இருபது சிறுகதைகளைக் கொண்டது. இதிலும் ஒவ்வொரு சிறுகதையும் தனித்துவம் பெற்றதாக,நம்மை யோசிக்க வைப்பதாக,மனிதர்களின் உளவியலைப் பேசுவதாக,கூடவே சமூக அக்கறையையும் கலந்து கதைகளாகத் தந்திருக்கிறார்.
"தளையறுத்தல்"மனிதர்களுக்கு மட்டும்தானா சுதந்திரமும் உணர்வுகளும்..விலங்குகளின் உணர்வுகளைப் பற்றி அவற்றின் விருப்பங்களைப் பற்றி என்றாவது நாம் யோசித்து இருப்போமா என்ற கருவைக் கொண்டது இந்தக் கதை.
இந்தக் கதையில் வரும் சிபி, கம்பீரமான காளை மாடு.அதை வாங்கியதிலிருந்து அதன் ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு வளர்த்துபவர் குமரன்.ஒரு கட்டத்தில் அவரே உணர முடியாத அவரின் சுயநலம்,சிபியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியமல், தன் தோட்டத்திற்காக அதை அவர் விருப்பத்திற்கேற்ப மாற்றி சிபியின் வேதனையை புரிந்து கொள்ளாத ஒரு கட்டத்திற்கு வந்து விடுகிறார். தன் தேவையை, விருப்பத்தை குமரனுக்குக் காட்டுவதற்காக சிபி கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறது.பாய்ச்சல் மாடாக மாறிவிட்டது இனி,அதை தோட்டத்திற்குள் வைத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு அவரைத் தள்ள சிபி பல தருணங்களை உருவாக்கும்.ஆனால் அவர்கள் இருவருக்குமான நெகிழ்ச்சியான பந்தம் நமக்கு சொல்லப்பட்டு கொண்டேயிருக்கும்.இனி என்ன செய்வார் என்று நாம் யோசிக்கும் போது,குமரன் தன் தன் தவறை உணர்ந்து கண்ணீர் விடுவதும்,சிபி தன் இயலாமையால் கண்ணீர் விடுவதும் நம்மையும் கலங்க வைக்கும்.தனக்குத் தகுந்தவாறு அனைவரையும் வளைக்கும் மனிதன்,மிருகங்களிடமும் அதைச் செய்யும்போது ஏற்படும் விளைவைச் சொல்கிறது இந்தக் கதை.
"ஆதோனி"இந்த கதையும் சுயநலத்தை மையமாக வைத்து தான் சொல்லப்படுகிறது.ஆனால் இது மனிதர்களுக்குள் நடக்கும் போராட்டம்.ஒரு வழக்கறிஞருக்கும்,
அவரின் கட்சிக்காரருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள்.அவரவர் நியாயங்களுக்கேற்ப தாங்கள் செய்வது சரி என்று நடந்து கொள்ளும் கதாபாத்திரங்கள்.ஒரு விற்பனை வியாபாரம்,அதற்கு பின்னால் இருக்கும் ஏமாற்று வேலை காவல் நிலையம், நீதிமன்றத்தைத் தாண்டி நடக்கும் சமரசங்கள், பஞ்சாயத்து அதில் ஏற்படும் நஷ்டம்,
இப்படி ஒரு கதைக்குள் ஒரு நாவலுக்கான விஷயங்கள் இருக்கிறது.உணர்வுபூர்வமாக ஒரு வழக்கை அணுகும்போது அதன் விளைவு என்ன என்பதைத்தான் இந்தக் கதை சொல்கிறது.
"மரபெழில் வாய்ந்த மயானம்"
கொரோனா காலகட்டத்தை நம் கண் முன்கொண்டு வருகிறது இந்தக்கதை.ஒரு மின் மயானம்,
அளவுக்கு அதிகமாக தினசரி எரிக்கப்படும் பிணங்கள்.அந்த அதிகபட்ச வேலையைத் தாங்க முடியாமல் அங்கிருக்கும் புகை போக்கியில் சிறு கசிவு ஏற்படுகிறது. முழு கவச உடையில் பெரும் சிரமத்தோடு அங்கு வேலை செய்பவர்,அந்த மின் மயானத்தை நடத்தும் தனியார் அமைப்பின் தலைவர் நேரிடும் பிரச்சனை,அந்த மயானத்திற்கு சற்று தள்ளி இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்ட் வாசிகள் இந்த புகை கசிவு சமயத்தில் நேரிடும் தொந்தரவு,முழு அடைப்பு காலத்தில் நடக்கும் இந்த பிரச்சனையில் தவிக்கும் அனைத்து தரப்பில் இருக்கும் மக்களையும் நம் முன்னே நடமாட விட்டிருக்கிறார் ஆசிரியர்.கையை மீறி ஒரு விஷயம் நடக்கும் போது அதன் பாதிப்பு எத்தனை பேரை துயரத்திற்கு உள்ளாக்குகிறது என்று பல வகையிலும் நம்மை யோசிக்க வைக்கும் இந்தக் கதை.
"ஈவில் ஜீனியஸ்"இந்த கதையில் ஒரு வீட்டில் திருட்டு நடக்கிறது.அது எந்தப் புள்ளியில் தொடங்கி எப்படி முடிகிறது என்பதை ஒவ்வொரு முடிச்சை அவிழ்ப்பது போல் சில நிகழ்வுகளால் சொல்லியிருப்பார் ஆசிரியர்.அதுவும் அந்த இரவு அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் காட்சிகள்,
இரவுக் காட்சி சினிமா முடிந்து வரும் கூட்டம்,அவர்களுக்காகவே அந்த நேரத்தில் நடத்தப்படும் கடை,இரவு நகர சோதனைக்குச் செல்லும் காவலர்கள்,அரசு அதிகாரிகளின் வீடுகளுக்கு கொடுக்கப்படும் சிறப்பு கவனம்,இதையெல்லாம் மீறி அந்த வீட்டிற்குள் நுழையும் திருடன்,இந்தத் திருட்டை காவலர்கள் விசாரிக்கும் முறை என விறுவிறுப்பாகச் செல்கிறது இந்தக் கதை.இந்தத் திருட்டுக்கான திட்டம் எங்கே தொடங்கியது என்பதில்தான் சுவாரசியம்.
"உலகம் திருச்செங்கோட்டை ஆய்வு செய்கிறது"இந்தக் கதை திருச்செங்கோட்டின் அனைத்து கோணங்களையும் நம்முள் காட்டுகிறது.லாரி பாடி கட்டும் பட்டறைகள் அதிகமாக உள்ள இடம்,
அதற்குப் பின்னிருக்கும் வியாபார யுக்திகள்,இந்தத் தொழிலில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முதலாளிகளின் போராட்டம் இப்படி பல தகவல்கள் இருக்கிறது.கூடவே அந்த நிலத்தின் தன்மை மாறியது, மாறக் காரணம்,தண்ணீர் பஞ்சம்,
வேலைக்காகப் போராடும் மனிதர்கள்,பிடித்த உணவை உண்பதற்காக அவர்களின் மெனக்கெடல்,போன்ற அந்த மண்ணின் கதையை அருகிருந்து நாம் பார்ப்பது போலவே கதை நகர்கிறது.
"சர்ரியல் இரவு"சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள்தான்,ஆனால் இரவு நேரத்தில் நேரிடும் போது ஒரு மனிதன் அதை எப்படி எதிர்கொள்வான் என்பதைச் சொல்கிறது.தங்களின் இளம் வயதில் ஒரே கட்சியில் இருந்த நண்பர்கள்.போலீசுக்கு பயந்து இருவரும் ஒரே இடத்தில் தங்குகிறார்கள்.அப்போது நடக்கும் சில விஷயங்கள்,பல வருடங்களுக்குப் பிறகு அதே போலத் தொடரவும் செய்கிறது.
மனதில் பதிந்து கிடக்கும் பழைய நினைவுகளை மறக்க முடியாமல்,
கூடவே ஒரு காதல் தோல்வியும் சேர்ந்து கொண்டால் தன்னிலை மறந்த ஒருவன் அதை இரவில் தன் ஏமாற்றத்தை எப்படி வெளிப்படுத்துகிறான்,விடிந்தபின்
இருவரும் ஒன்றுமே நடக்காததைப் போல எப்படி இயல்பாக மாறிவிடுகிறார்கள் என்பதைச் சொல்கிறது இந்தக் கதை.
"ஊழ்"ஒரு பெண்ணின் ஆழ் மனதுக்குள் பதிந்து போகிற சில துயர நிகழ்வுகள் அவளின் வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதைச் சொல்கிறது இந்தக் கதை.அவள் அமுதா.அவளின் தந்தை மரணப்படுக்கையில் கிடக்கிறார்.
அந்த சூழ்நிலைக்கு முற்றிலும் மாறாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள் அமுதா.காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனுடன் சண்டை,தோணுகிற எந்த நேரத்திலும் பூஜை,எதையும் பெரிய அளவில் செய்து அந்தத் தருணத்தை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளத் தவிப்பவளைப் போல,அவள் செய்கிற அனைத்தும் வித்தியாசமாக இருக்கிறது. அதற்குப் பின் இருக்கும் காரணம் இரண்டு மரணங்கள்.ஏன் எதற்கு என்பதை ஒவ்வொன்றாகச் சொல்லி,அமுதா அந்த அசாதாரணமான சூழ்நிலையில் இருந்து எப்படி வெளிவந்து இயல்பானவளாகிறாள் என்பதாகக் கதை முடிகிறது.
ஆன்மீக அரசியல்,சாதிய வேறுபாடு,குடும்பச் சிக்கல்கள் இவை அனைத்தும் ஒரு பெண்ணை எப்படி உளவியல் பிரச்சனைக்குள் தள்ளுகிறது என்பதைக் கதை சொல்கிறது.
சர்ரியல் என்றால் அசாதாரணமான கனவு போன்று நிகழும் விஷயங்கள்,மாயமாகத் தோன்றும் உருவங்கள் இரண்டும் இணைந்திருக்கும் தருணம் என்பது பொருளாம்.அதுபோலவே இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கதைகள் சர்ரியல் இரவில் நடக்கும் கதைகளாக இருக்கிறது.கூடவே சில கதைகள் வித்தியாசமாக நீதிமன்ற வளாகத்தில் நடப்பவை.பெண்களின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளையும் சில கதைகள் சொல்கின்றன.முற்றிலும் வேறுபட்ட கதைக்களமும்,கதை எழுதப்பட்ட விதமும் சரளமான எழுத்து நடையும் சுவாரசியத்தைக் கூட்டி புத்தகத்தை கீழே வைக்க முடியாதபடி வாசிக்க வைக்கிறது.அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பு.இந்த புத்தகம் தம்பி Sachin Karuna வின் அன்புப் பரிசு.
நன்றியும் அன்பும் கருணா.