ஜாதிமல்லிப்பூ சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகிறது. மற்றவர்கள் இதை வைத்துக்கொள்ளக் கூடாது. ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் ஆயிரம் பூ எடுத்து அர்சித்ததற்கு சமம்.
சோழ நாட்டில் திருக்கடவூர் என்ற ஊரில் அபிராமி பட்டர் அவதரித்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். சிறுவயதிலிருந்தே இவர் அபிராமியின் மேல் அளவற்ற பக்தி கொண்டு பித்தனைப் போல திரிந்தார். இவருக்கு வேண்டப்படாதவர்கள் இவரைப்பற்றி சரபோஜி மன்னரிடம் தவறாக கூறிவிட்டார்கள். பட்டரை அழைத்த மன்னர் ‘இன்று என்ன திதி?’ என கேட்டார். சதா சர்வகாலமும் முழுநிலவு போன்ற அபிராமி முகத்தின் நினைப்பிலேயே இருந்ததால், ‘இன்று பவுர்ணமி திதி,’ என கூறிவிட்டார். ஆனால், அன்று அமாவாசை திதி.
மன்னருக்கு கோபம் வந்து விட்டது. ‘இன்று இரவு நிலா வராவிட்டால், நீ கழுவேற்றப்படுவாய்,’ என கூறிச் சென்று விட்டார். கோயில் வாசலில் நெருப்பு வளர்க்கப்பட்டு, அதன் மேல் உறி கட்டி அபிராமி பட்டரை நிறுத்தி உறியைத் தொங்கவிட்டனர்.
அப்போது அம்மனை வேண்டி அபிராமி பட்டரால் பாடப்பட்டது தான் ‘அபிராமி அந்தாதி‘. இவர் அந்த அந்தாதியில் 79ம் படல் பாடி முடித்ததும் அம்மன் வானில் தோன்றி, தன் காதிலிருந்த தாடகத்தை வானில் வீசி எறிந்தாள். தாடகம் நிலவாய் மாறி ஒளிர்ந்தது. மன்னனும் அபிராமி பட்டரை விழுந்து வணங்கினான்.
அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை மலர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.
இத்தலம் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றது.
பாடியவர்கள்:
அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம்
சடையுடை யானும்நெய் யாடலானும் சரிகோவண உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனும் கடையுடை நன்னெடு மாடமோங்கும் கடவூர் தனுள் விடையுடை யண்ணலும் வீரட்டானத் தரனல்லனே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 47வது தலம்.
திருக்கடையூர் தல வரலாறு:
மிருகண்டு முனிவர் – மருத்துவதி தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைச் செல்வம் இல்லாமல் இருந்தது. முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தினை மெச்சிய சிவன், ”உனக்கு அறிவுள்ள குழந்தை பிறந்தால் 16 ஆண்டுகளே உயிர் வாழும். அறிவற்றவன் பிறந்தால், நீண்டநாள் வாழும், இதில் எந்தக் குழந்தை வேண்டும்?” எனக்கேட்டார்.
மிருகண்டு திகைத்தார். அறிவுள்ள குழந்தையே வேண்டும் என்றார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். மார்க்கண்டேயனுக்கு 16 வயது வந்தது. மார்க்கண்டேயன் சிவத்தலங்கள் சென்றார். 107 சிவத்தலங்கள் சென்ற மார்க்கண்டேயன் 108வது திருத்தலமாக திருக்கடையூர் வருகிறார். இவரது கடைசி நாளும் வந்து விடுகிறது. உயிரைப்பறிப்பதற்காக எமன் கோயிலுக்கே வந்து விடுகிறார். எமனைக்கண்ட மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிக்கொண்டார். இருந்தாலும் எமன் விடவில்லை.
மார்க்கண்டேயரது உயிரைப்பறிப்பதற்காக எமன் பாசக்கயிறை வீச, அந்தக்கயிறு சிவலங்கத்தின் மீது விழுகிறது. கோபம் கொண்ட சிவன், ”என்னையும் சேர்த்தா பாசக்கயிறால் இழுக்கிறாய், இத்துடன் ஒழிந்து போ” என எமனை அழித்து விடுகிறார்.
இதனால் பூமியில் இறப்பே இல்லாமல் போனது; உயிர்கள் பெருகின. பூமி பாரம் தாங்காத பூமாதேவியின் வேண்டுதலால் சிவன் மனமிறங்கி எமனுக்கு உயிர் தருகிறார். எமன் பாசக்கயிறு வீசியதால் ஏற்பட்ட தழும்பு இன்னமும் சிவனின் திருமேனியில் காணலாம்.
சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்கார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார்.
சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இத்தலத்தில் காலசம்காரமூர்த்தி சன்னதியிலும் ஒரு ரகசியம் இருக்கிறது. ஆம்! சுவாமிக்கு வலதுபுற மதிலில் இயந்திர தகடு ஒன்று உள்ளது. இதனையே, “திருக்கடையூர் ரகசியம்‘ என்கிறார்கள்.
இந்த தகட்டிற்கு முன்பாக அகத்தியர் பூஜித்த பாபகரேசுவர லிங்கம் இருக்கிறது. முதலில் பாபகரேசுவரரையும், பின் இறைவனையும், அடுத்து இயந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
எமதர்மனை எருமை வாகனத்தின் மீது, கம்பீரமான கோலத்தில்தான் காணமுடியும். ஆனால், இத்தலத்தில் காலசம்காரமூர்த்தி சன்னதிக்கு நேர் எதிரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.
இத்தலத்தில் காலசம்கார மூர்த்தி, இடது காலை ஆதிசேடன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர்.
காலசம்கார மூர்த்தியை தரிசிக்கும்போது, எமனைப் பார்க்கமுடியாது.
சுவாமிக்கு பூசை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை சம்கார கோலம் என்றும், எமனுடன் இருப்பதை உயிர்ப்பித்த கோலம் என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் இங்கு “சம்கார” மற்றும் “அனுக்கிரக மூர்த்தியை” தரிசிக்கலாம்.
திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேசுவரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேசுவரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேசுவரருக்குத் தனி சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூசித்த பாபகரேசுவரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேசுவரரை வணங்க வேண்டும்.
பிரம்மாவிற்கு ஞான உபதேசம் செய்த சிவன், ஆதி வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆவார். தினமும் மாலை பூசையின்போது மட்டும் இவருக்கே முதல்பூசை செய்யப்படுகிறது.
இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேசுவரருக்கு அபிடேக தீர்த்தம் எடுக்கச் சென்ற பாதாள குகை இருக்கிறது.
ஒருநாள் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படும் கங்கா தீர்த்தம்:
மார்க்கண்டேயர் சிவபூசைக்காக காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன், திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீசுவரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூசை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு திருமுழுக்காட்டு செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.
இத்தல நாயகி அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் தன்னை வந்து வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்குகிறாள். அமிர்தகடேசுவரரை வழிபட்டால் துயரங்கள் போக்கி இன்பம் தருகிறார்.
வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியனவும் தந்தருள்கிறார். இருதய நோய் உள்ளவர்களும், நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலத்திற்கு வந்து சப்த திரவிய மிருத்ஞ்ய ஹோமம் செய்து வழிபட்டு பலனடைகிறார்கள்.
அமிர்தகடேசுவரர் பெயர்க்காரணம்:
ஒரு முறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, அசுரர்களுக்கு தெரியாமல் தேவர்கள் சிறிது அமுதத்தை ஒரு கலயத்தில் எடுத்து மறைத்து விட்டார்கள். எந்த காரியம் செய்தாலும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும் என்பது நியதி.
ஆனால் தேவர்கள் அப்படி செய்யவில்லை. கோபம் கொண்ட பிள்ளையார் அமுத கலசத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டார். சிவன் மூலம் இந்த விஷயம் தேவர்களுக்கு தெரிய வந்தது. பிள்ளையாரிடம் சென்று மன்னிப்பு கேட்டார்கள் தேவர்கள்.
பிள்ளையாரும் மன்னித்து அமுத கலசத்தை கொடுத்து விட்டார். பெற்றுக்கொண்ட தேவர்கள் அந்த கலசத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நீராடச் சென்றார்கள். திரும்பி வந்து எடுத்தபோது அந்த கலசம் வரவில்லை. அது சிவலிங்க திருமேனி ஆகி அமிர்தகடேசுவரர் என்ற பெயர் பெற்று விட்டது.
திருக்கடையூரில் பூர்ணாபிடேகம் (100வயது பூர்த்தி), கனகாபிடேகம் (90 வயது), சதாபிடேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுள் நீடிக்க யாகம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த பூசை செய்பவர்கள் கோயிலில் கட்டணம் செலுத்த வேண்டும். இதுதவிர, அர்ச்சகர்கள் பூசையைப்பொறுத்து குறைந்தபட்சம் ரூ.3500ல் இருந்து தனியே கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாகனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை.
தற்பொழுது அர்ச்சகர்கள் முறைப்படி சாந்தி செய்வதில்லை. ஒருவர் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே விட்டுவிட்டு அடுத்தவரிடம் சென்றுவிடுவார். இன்னொருவர் பின்னர் வரும் மந்திரங்களைத் தொடருவார். எல்லாம் வியாபாரமயமாகி விட்டது.
திருக்கடையூரில் 60, 80ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது.
சஷ்டியப்த பூர்த்தி தலம்: 59 வயது முடிந்து 60 வயது தொடங்குபவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும், 60வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும், 69 வயது முடிந்து 70 வயது தொடங்குபவர்கள் பீமரதசாந்தி பூஜையும், 80வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமமும் செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம்.
பாற்கடலில் கிடைத்த அமுதத்தை திருமால் தேவர்களுக்கு பகிர்ந்தளிக்குமுன், சிவபூசை செய்ய எண்ணினார். சிவ பூசையின் போது அம்பிகையையும் பூசிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, திருமால் தனது ஆபரணங்களைக் கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூசை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார்.
திருமால் மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை. அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், திருமாலை அபிராமியின் அன்னையாகவும் கருதலாம்.
திருவிழா: எம சம்காரம் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 6ம் நாள் கால சம்கார மூர்த்தி வெளியே வருகிறார். கார்த்திகை சோமவாரத்தில் 1008 சங்காபிடேக வழிபாடு, நவராத்திரி, மார்கழி விவிதபாதம்,
ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. தவிர தை அமாவாசையன்று அபிராமி அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேஷம்.
இத்தலத்து மூலவர் அமிர்தகடேசுவரரின் லிங்க உருவத்தில் எமன் வீசிய பாசக் கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும்.
மாங்கல்ய தோடம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூசித்து, அதை வாங்கி கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
காலசம்கார மூர்த்தி சன்னதியிலுள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இருகரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரசுவதி இருக்கின்றனர்.
பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி “குகாம்பிகை“யாக, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் இருக்கிறாள்.
இங்குள்ள “கள்ளவாரண விநாயகர்‘ துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார்.
திருக்கடையூர் கோயில் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில், 26 கி.மீ., தூரத்தில் இருக்கிறது. இத்தலத்துக்கு காரைக்கால், சிதம்பரம், சீர்காழி,
தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறையிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளது.
காலை 6 முதல் மதியம் 1 மணி வரை – மாலை 4 முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – அமிர்தகடேஸ்வரர், சுயம்பு மூர்த்தி
உற்சவர்: – காலசம்ஹாரமூர்த்தி
அம்மன்: – அபிராமியம்மன்
தல விருட்சம்: – ஜாதிமல்லி
தீர்த்தம்: – அமிர்தகுளம், கங்கை தீர்த்தம்
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – திருக்கடவூர்
ஊர்: – திருக்கடையூர்
மாவட்டம்: – நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு