Breaking News :

Thursday, November 21
.

அகிலாண்டேஸ்வரி - திருச்சி மாவட்டம் திருவானைக்காவல்


யானை பூஜித்ததால் இது யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் சம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

1752-ல் இங்கு தங்கியிருந்த பிரெஞ்சு தளபதி ஒருவர், ஜம்புகேஸ்வரர் குறித்து அரிய நூல் ஒன்றை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார்.

காஞ்சிப் பெரியவர் அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த சிவ சக்ரம், ஸ்ரீ சக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

 மூன்றாம் பிராகாரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒருங்கிணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பத்தை தரிசிக்கலாம்.

குறத்தி மண்டபம் எனும் குறை தீர்த்த மண்டபத்தில் நடன மங்கையர், குறி சொல்லும் குறத்தி போன்றோரின் சிற்பங்கள் அழகு மிளிர காட்சி தருகின்றன.

இத்தலத்தில் 108 பிள்ளையார்கள் அருள்கின்றனர். அதில் அகிலாண்டேஸ்வரி சந்நதியில் உள்ள பிரசன்ன விநாயகரும், தனிச் சந்நதி கொண்டருளும் வல்லப விநாயகரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

அம்மன் சந்நதியின் பின்பக்கமுள்ள ஆயிரங்கால் மண்டபத் தூண் ஒன்றில் தொந்தியில்லாத, புலிக்காலுடன் கூடிய வியாக்ர விநாயகரை தரிசிக்கலாம்.

இத்தல ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ரிஷபகுஞ்சர சிற்பம் விசேஷமானது. காளையைக் காணும்போது யானையும், யானையைக் காணும்போது காளையும் தெரியாது.

வீணை இல்லா சரஸ்வதி, மேதா தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக விநாயகர் போன்றோரும் இத்தல சிறப்பு மூர்த்திகள்.

ஜம்புகேஸ்வரர் சந்நதிக்கு அருகில் நின்ற நிலையில் விஸ்வரூப மகாலட்சுமியையும், இரண்டு தேவியருடன் சந்திரனையும், இரண்டு நந்தி தேவர்களையும் தரிசிக்கலாம்.

இங்கு எழுந்தருளியுள்ள சனி பகவான், பால சனியாக குதிரை முகத்துடன் அன்னை சாயா தேவி மற்றும் மனைவியுடன் காட்சி தருகிறார்.

வெள்ளை நாவல் பழம் பழுக்கும் வெண் நாவல் மரம் தல விருட்சம்.

20 கோஷ்ட தேவதைகளைக் கொண்ட சிவன் சந்நதி உள்ளது இந்தத் தலம் ஒன்றில்தான்.

கருவறைக்கு முன்பாக ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரம் உள்ளது. இதன் வழியாக மூலவரை தரிசிப்பதே சிறப்பு.

பிரசன்ன விநாயகர் சந்நதி சேர்த்து அகிலாண்டேஸ்வரி சந்நதி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இச் சந்நதியை தினம் 12 முறை 48 நாட்கள் வலம் வந்தால் இல்லத்தில் செல்வம் செழிக்கும்.

அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது.

51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. பௌர்ணமி தோறும் அகிலாண்டேஸ்வரி சந்நதியில் உள்ள மஹாமேருவிற்கு நவாவரண பூஜை நடக்கிறது.

இத்தலத்தில் 5 மணி நேரம் தங்கி அகிலாண்டேஸ்வரியின் மந்திரங்களை உச்சரித்து வந்தால் எடுத்த காரியங்கள் வெற்றியடையும் என்பது சித்தர்கள் வாக்கு.

உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனை பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம்.

அகிலாண்டேஸ்வரியின் அருள்பெற்ற, மடப்பள்ளியில் பணியாற்றிய சிப்பந்தியே கவி காளமேகம் எனும் புலவராக பெயரும் புகழும் பெற்றார்.

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!

சௌஜன்யம்.. !
அன்யோன்யம் .. !
ஆத்மார்த்தம்..!
தெய்வீகம்..!.. பேரின்பம் ...!
அடியேன்
ஆதித்யா

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.