Breaking News :

Thursday, November 21
.

தடைகளை நீக்கும் திருமீயச்சூர் லலிதாம்பிகை, மயிலாடுதுறை


சிவனுக்கு சக்தியாகத் திகழ்பவள் பராசக்தி. உலகின் எல்லா ஆற்றலுக்கும் காரணகர்த்தாவாகவும் கிரியா ஊக்கியாகவும் இருந்து செயல்படச் செய்யும் சக்தி, அனைத்து பெண் தெய்வங்களுக்கு உண்டு. அவற்றில் ஒன்று தான் திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில். இது காவேரி ஆற்றின் தென்கரையில் உள்ள 173 வது தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலம் மற்றும் சோழநாட்டின் 56 வது கோவிலாகும். பாடல் பெற்ற சிவன் கோயிலில் இதுவும் ஒன்று என்றாலும், இக்கோயில் லலிதாம்பிகை கோயில் என்றே அழைக்கப்படுகின்றது. இக்கோயில் பல சிறப்புக்களையும், வித்தியாசமாக வழிபாட்டு முறையையும் கொண்டது.

இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அகிலம் சிறக்கத் தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய ஸ்தலம் திருமீயச்சூர். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் அழகிய தமிழில் இயற்றி அம்பாளுக்கு அர்ப்பணித்தார்.

இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் பாராயணம் செய்து அம்பாளை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த கோயிலில் நடக்கும் நெய்க்குள தரிசன உற்சவம் மிகவும் பிரசித்த பெற்றதாகும். ஒரு ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இந்த தரிசனத்தைக் காண முடியும். இந்த தரிசனம் காண்பவருக்கு மறு பிறவி என்பதே கிடையாது என்பது நம்பிக்கை. இதனால் இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்படையில் இத்தலம் “மீயச்சூர்’ என அழைக்கப்படுகிறது.

புராணங்களில் லலித்தாம்பிகை:

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். துன்பங்களுக்கு ஆளான தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருவடியைச் சரணடைந்தனர். பண்டாசுரனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் சிவனார்.

பண்டாசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் கடும் உக்கிரத்துடன் தோன்றினார். பின் அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தார். ஆனாலும் அவரது உக்கிரம் தணியவில்லை. உக்கிரமாக இருந்த லலிதாம்பிகையை சமாதானம் செய்வதற்காக, ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து லலிதாம்பிகை ஸ்ரீபுரத்துக்கு வந்து தவம் செய்து சாந்தமானார். லலிதாம்பிகை தனக்குள் இருந்த வசின்யாதி வாக் தேவதைகளை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட, அவருடைய விருப்பத்தின் பேரில் லலிதாம்பிகையின் திருநாமங்களை மந்திரங்களின் வாயிலாகப் பாடினார்கள் இதுவே “ஸ்ரீ மாத்ரே’ எனத் துவங்கும் ‘லலிதா சகஸ்ரநாமம்’ என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. பிறகு இங்கு இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டார்.

ஸ்தல சிறப்பு:

இக்கோயிலுக்குப் பல சிறப்புகள் உள்ளன. இத்தலத்தில் பூஜை செய்து சூரியன் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்படையிலேயே மீயச்சூர் எனப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ம் தேதி முடியச் சூரிய கிரணங்கள் உதயமாகும் நேரத்தில் இவ்வாலயக் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும்.
சூரியன், அருணன், காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநதை ஆகியோர் இத்தலத்திலிருந்து சிவபெருமானை வழிபட்டனர். இத்தலத்தில் சனீஸ்வரன், அருணன், கருடன், வாலி மற்றும் சுக்ரீவன் மற்றும் யமன் பிறந்தனர்.

யமன் இத்தலத்தில் பிறந்து எந்நேரமும் சிவ சிந்தனையுடன் இருந்து பூஜித்தார். அவர் 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, யமனின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தன்று, பிரண்டை (அவர் பூமிக்குக் கொண்டு வந்த புனிதப் புல்லரி) அரிசியை நெய்வேத்தியமாகப் படைத்தார்.

ஹயக்ரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரிக்க அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் “ஸ்ரீலலிதா நவரத்தின மாலை” என்ற பாடலையும் அழகிய தமிழில் இயற்றி பாடினார்.

ஒருமுறை ஸ்ரீலலிதாம்பிகையை தரிசனம் செய்ய வந்த காஞ்சி மஹா பெரியவா, ‘’இது சாதாரண ஸ்தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம்” என்று கூறி, அம்பாளை விட்டுச் செல்ல மனம் வராமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் பெருமைக்கு ஒரு சான்றாகும்.

ஸ்தல அமைப்பு

இந்தக் கோவில், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதற்கான கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கோயிலின் உள்ளேயே இளங்கோயில் அமைந்துள்ளது. ஆகவே இரண்டு ஸ்தலங்களைத் தரிசித்த புண்ணியமும் கிடைக்கிறது.
திருமீயச்சூர் கோயிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடன் காணப்படுகின்றது. இராஜகோபுரத்திற்குப் பிறகு பலிபீடம், த்வஜஸ்தம்பம், நந்தி அமைந்துள்ளது.

கோயிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடன் காணப்படுகின்றன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சந்நிதி உள்ளது. இவருக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது.
கருவறையில் ஐந்து அடி உயரத்தில் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் தெற்கு நோக்கி வலது காலை மடக்கி, இடது காலை தொங்க விட்ட நிலையில், அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் சாந்த ஸ்வரூபியாக அருளாட்சி செய்கிறார்.
இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படித்து வழிபட்டால், அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்குச் செய்வது சிறப்பு. இங்குள்ள கருவறையின் விமானம் கஜ பிரிஷ்டம் எனப்படும் சிறப்புக் கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.

முதலில் திருமீயச்சூர் கோயிலில் எழுந்தருளியுள்ள மேகநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். உட்பிரகாரத்தின் தென் பகுதி பிரதிஷ்டைகள், சேக்கிழார் போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூதலிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில் அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், லிங்கங்களும் உள்ளனர்.

இக்கோவில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தில் க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதைப் போலவும் தெரியும்.

க்ஷேத்திர புராணேஸ்வரரை பார்த்து விட்டு அப்படியே சுற்றிவரும்போது தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர் ஆகியோர் திருவுருவங்களைக் காணமுடிகின்றது. இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், தூண்களும் அழகு சேர்க்கின்றன. இக்கோவிலின் வடப்பக்கத்திலே இளங்கோயிலை தரிசனம் செய்யலாம். இத்திருக்கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று கவனித்தால் ஒரே நேரத்தில் ஐந்து கோபுரங்களையும் தரிசிக்கலாம். கோபுர தரிசனத்திற்குப் பின்னர் அங்கேயே சற்று தள்ளி, இளங்கோயிலின் சுற்று லிங்கோத்பவர், பிரம்மா, மகா விஷ்ணுவாகிய மும்மூர்த்திகளை தரிசிக்கலாம்.

இக்கோயிலின் பிரகார சுவற்றில் தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, சது சண்டிகேஸ்வரர் உள்ளனர். தல விநாயகர், சண்டிகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், சூரிய பகவான், ஆகாச லிங்கம், வாயுலிங்கம் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.
ஸ்தல விருட்சம் : வில்வ மரம்
ஸ்தல தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி

கிளியுடன் துர்க்கை:

இக்கோயிலில் துர்க்கை அம்மன் கோஷ்டத்தில் உள்ளார். இக்கோயிலில் உள்ள துர்கா தேவியின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவர் கையில் ஒரு கிளி உள்ளது, மேலும் துர்கா தேவிக்கு நாம் செய்யும் பிரார்த்தனைகள் இந்தக் கிளி மூலம் பக்தர்களின் கோரிக்கையைத் துர்க்கை மூலமாக லலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கை சந்நிதியிலிருந்து லலிதாம்பிகை சந்நிதிக்கு சென்று வருவதைக் காணலாம்.

வழிபாட்டுப் பலன்கள்:

லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வார். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வார்.

வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக இக்கோவிலில் அம்பாளுக்கு நேர்த்திக்கடனான கொலுசு வாங்கி அணிவிக்கும் வழக்கம் இங்கு உண்டு.

இத்தலத்தில் தாமரை இலைகளில் சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட் சத்திரத்தில் குறிப்பிட்ட ஹோரையில் சிவபெருமானை பூஜித்து, அத்தாமரை இலையிலே அன்னத்தை படைத்து, ஏழைகளுக்கு அன்னதானமளித்து தாமும் உண்டால் எக்கடுமையான நோய்களால் துன்பப்பட்டாலும் அந்நோயிலிருந்து நிவாரணம் பெற்று நீண்ட ஆயுளோடு வாழக் காலனும், சிவபெருமானும் அருள் புரிவர் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்:

இங்கு ஆடிப்பெருக்கு, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், தையில் ரதசப்தமி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, ஸ்கந்த சஷ்டி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சிவபெருமான் மற்றும் அம்பாளுக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கிறது.

இக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி தினம், நவராத்திரி விழா கொண்டாடப்படும் இறுதி நாளான விஜயதசமி, மற்றும் மாசி மாதத்தில் அஷ்டமி யும், நவமியும் இணையும் நாட்களில் நெய்குள தரிசனம் நடத்தப்படுகிறது.
தமிழ் மாதமான தை மாதத்தில் வரும் "ரதசப்தமி" இக்கோயிலில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான திருவிழாவாகும்.

நெய்க்குள தரிசனம்:

இக்கோயிலில் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே இந்த நெய்க்குள தரிசனம் நடைபெறும். வைகாசி மாத பவுர்ணமி தினம், நவராத்திரி விழா கொண்டாடப்படும் இறுதி நாளான விஜயதசமி, மற்றும் மாசி மாதத்தில் அஷ்டமி யும், நவமியும் இணையும் நாட்களில்
நெய்க்குள தரிசனம் நடத்தப்படுகிறது. இந்த நாட்களில் லலிதாம்பிகை சந்நிதி முன்பாக 15 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளைப் பரப்பி, அதன் இரு மருங்கிலும் மட்டை மற்றும் தென்னை ஓலைகளைக் கொண்டு அணைபோடுவார்கள். பிறகு இந்த 15 அடி நீளப் பகுதி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அம்பாளின் சந்நிதி முன்பாக அமைந்த முதல் பாகத்தில் சர்க்கரைப் பொங்கல், இரண்டாம் பகுதியில் புளியோதரை, மூன்றாம் பாகத்தில் தயிர்ச் சாதம் என நிரப்பப்படும். முதல் பாகமான சர்க்கரைப் பொங்கலின் நடுவே பள்ளம் அமைத்து, அதில் அதிக அளவு நெய்யை ஊற்றுவார். இதனால் அதற்கு 'நெய்க்குளம்' என்று பெயர். அதற்குப் பிறகு லலிதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, திரையிடப்படும். அலங்காரங்கள் முடிந்து திரை விலக்கப்படும் போது, நெய்க்குளத்தில் அம்பாளின் அலங்கார ரூபம் தெரியும். இதனை 'நெய்க்குள தரிசனம்' என்கிறார்கள். இந்த தரிசனத்தைக் காணும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது என்பது ஐதீகம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கோயிலுக்குச் செல்லும் வழி:

மயிலாடுதுறையிலிருந்து சுமார் 18 கி.மீ உள்ள பேரளம் சென்று அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் திருமீயச்சூர் அடையலாம் . பேரளம் வரை பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன .அங்கிருந்து ஆட்டோவில் இக்கோயிலுக்குச் செல்லலாம்.

மயிலாடுதுறை – திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் இரயில் நிலையத்தில் இருந்து கோவில் 1 கி.மி. தொலைவில் உள்ளது.

தடைகளை நீக்கும் திருமீயச்சூர் லலிதாம்பிகையை தரிசனம் செய்து அருளைப் பெறுவோம்!
ஓம் சக்தி..!! பராசக்தி…!!!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.