Breaking News :

Thursday, November 21
.

அன்னை மதுரை மீனாட்சி வரலாறு!


கந்தர்வ லோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.

அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, என்ன வரம் வேண்டும் கேள்! என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.

அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.

மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர்.

ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள்.

இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’ என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சிஅம்மனின் புகழ் கொடிகட்டிப்பறக்கிறது.

கிளி ஏந்திய காரணம்

ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன?

பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.

அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்.

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி
ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருவடிகள் போற்றி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.