Breaking News :

Sunday, December 22
.

சூரிய பூஜை நடக்கும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில்!


சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய பூஜை நடக்கிறது. பொங்கல் மற்றும் ரதசப்தமியன்று இத்தலத்தை தரிசனம் செய்வது சிறப்பு.

சூரியபகவானின் மனைவியான சமுக்ஞாதேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். சாயாதேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். இதையறிந்து கோபம் கொண்ட சூரியன், சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்றார்.

வழியில் பிரம்மா யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடும் மனநிலையில் இருந்த சூரியன், பிரம்மாவைக் கவனிக்கவில்லை.

தன்னை சூரியன் அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார்.
இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அவருக்கு காட்சி தந்த சிவன் சாபவிமோசனம் கொடுத்தருளினார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால் "ரவீஸ்வரர்' (ரவி-சூரியன்) என்று பெயர் பெற்றார்.
தினமும் சூரியபூஜை: இக்கோயிலில் சிவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

இவரது சன்னதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையிலுள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும்.
சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில் சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர்.

இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது.

ஒளிபட்ட பிறகே, காலை பூஜை செய்கின்றனர். சிவன் சன்னதி முன்மண்டபத்தில் சூரியன் இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை, உத்தராயண, தெட்சிணாயண புண்ணிய கால துவக்கம், பொங்கல், ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

திருமண வரம் தரும் அம்பிகை: முற்காலத்தில் இங்கு சிவன் சன்னதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை.

தனக்கு அப்பாக்கியம் தரும்படி சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார்.
அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள்.

அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். சிவன் அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார்.  பின், அம்பாளுக்கு சன்னதி எழுப்பப்பட்டது.

சிவன் அம்பிகையை திருமணம் செய்த வைபவம் ஆனி பிரம்மோற்ஸவத்தின் போது நடக்கிறது. நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொள்ள தடை நீங்குவதாக நம்பிக்கை.    .
 
வியாசர்பாடி பெயர்க்காரணம்: வேதங்களை இயற்றிய வியாசர் வழிபட்ட தலம் இது.

இத்தலம் அவரது பெயரால் "வியாசர்பாடி' எனப்படுகிறது. சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் இவருக்கு சன்னதி இருக்கிறது. புலித்தோல் மீது, பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இவரது சிலை வடிக்கப்பட்டிருக்கிறது.

வலதுகையில் சின்முத்திரை காட்டி, இடது கையில் சுவடி வைத்திருக்கிறார். பவுர்ணமியன்று இவருக்கு வில்வமாலை அணிவித்து விசேஷ பூஜை செய்கின்றனர்.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், இவரிடம் வேண்டிக் கொண்டால், கல்வி சிறக்கும். தை ரதசப்தமியன்று, வியாசர் இங்கு சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.

வியாசர் சன்னதி அருகில் "முனைகாத்த பெருமாள்' சன்னதி இருக்கிறது. வியாசர் மகாபாரதக் கதையைச் சொன்னபோது, விநாயகர் தனது தந்தத்தை உடைத்து எழுதினார்.

அப்போது, தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாமல் இந்த பெருமாள் காத்தருளினார். எனவே இவர், "முனை காத்த பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

சிறப்பம்சம்: சிவன் சன்னதி மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டுள்ளது கட்டடக்கலைக்குச் சான்று.

மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். கோயிலுக்கு எதிரே சூரிய தீர்த்தம் இருக்கிறது.   

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.