அறுபடை வீட்டினில் வாழ்கின்றவன்
வடிவேல் முருகன் அழகைப் பாடு
முருகன் மகிமைகளைத் தொகுத்து
தீந்தமிழில் குழைத்து இறை உணர்வில் திளைத்துப் பாடு
சரவணப் பொய்கையில் அருள்கின்ற முருகனைத்
தாங்கிடும் தாமரையாக்கு
என்னைப் படைத்திட்ட முருகனின் திருவடிப் பணிந்தேன்
பாக்கள் பாட இசை ஞானம் எனதாக்கு
திருச்செந்தூரின் திருக்குமரன்
இவன் மூத்தவனோ அந்த யானைமுகன்
சிவபாலன் இவன் உமையாளின் மகன்
முருகா ... என அழைத்திடவே
மெழுகா ... மனம் கரைகிறதே
முருகா ... முருகா ... முருகா)
குன்றிருக்கும் இடம் குமரன் இருப்பிடம்
அங்கு மலைமகளின் மகனாட்சி
அந்த சுவாமிமலை ஞானப் பழனிமலை
அந்த மருதமலையுமே அதன் சாட்சி
தெய்வயானை ஒருபுரம் வள்ளி ஒருபுரம்
நடுவில் முருகன் அந்த திருக்காட்சி
அதைக் கண்டு மனம் குளிரும் கண்கள் கசிந்துருகும்
எங்கும் பக்தி பரவசமாட்சி
அறுபடை வீட்டினில் வாழ்கின்றவன்
ஓமெனும் பிரணவ மந்திரப் பொருளை
சிவனுக்கெடுத்துறைத்த பெருமானே
சிவன் செவிமடுக்க மகன் பொருளுறைக்க
நீ குருபரன் ஆனாயே
சக்தி வேல் கொடுத்து நீ போர்தொடுத்து
அந்த சூரனை நீதான் அழித்தாயே
அந்த மகிழ்ச்சியை அளித்த ஐயன்,
ஐயப்பன் சோதரன் முருகன் நீதானே