சமீபத்தில் கும்பகோணம் திருக்கோவில்களுக்கு சென்றபோது அம்பகரத்தூர் அஷ்டபுஜ பதரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.
திகிலான தலவரலாறு கேள்விப்பட்டோம்.
மகாகவி பாரதியாரின் யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடல் மனதில் ஒலித்தது.
உயிர்பலி மறுத்த அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி
அம்பரன்- அம்பன் என்ற இரண்டு அசுரகுல சகோதரர்களில், அம்பரனை அழித்த பத்ரகாளி அம்பகரத்தூர் தலத்தில் அஷ்டபுஜ பத்ரகாளியாகக் காட்சி தருகிறாள்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இந்த அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் ஆலயம், காரைக்கால் மாவட்டத்தில், சனி பகவானின் திருத்தலமான திருநள்ளாறிலிருந்து மேற்கே சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
காளியம்மன் வடதிசை நோக்கிக் காட்சி தருகிறாள்.
நீண்ட பற்கள், கோபமுகம். வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி; இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியுள்ளாள். வலப்பாதத்தை மடித்து இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி, திரிசூலம் கொண்டு அவனது மார்பைப் பிளப்பது போன்ற கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறாள்.
பத்ரகாளியம்மனுக்கு 18 மீட்டர் அளவில் எப்பொழுதும் வெள்ளைத் துணி அணிவிப்பது இத்தலத்தில் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
இந்தத் துணியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
நெடிய தோற்றம் கொண்ட இந்த அன்னையின் உருவத்தை அருகில் சென்று காணும்போது மிகவும் அற்புதமாக இருக்கிறது.
மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் அழகிய சுதை வடிவங்கள் வரவேற்கின்றன...
முன்பாக உள்ள மண்டபத்தில் பலிபீடம், மகிஷபீடம் ஆகியவை உள்ளன. எருமை வடிவெடுத்த அம்பரனை தேவி அந்த இடத்தில்தான் சம்ஹரித்தபடியால் அந்த இடம் மகிஷபீடம் எனப்படுகிறது.
காளியம்மனுக்கு இடப்புறம், வலக்கரத்தில் அரிவாளும் இடக்கரத்தில் பெரிய தடியும் ஏந்தி கிழக்கு முகமாகப் பெத்தார்ணர் கோவில் கொண்டுள்ளார்.
அவருக்கு அருகில் பெரியாச்சியம்மன் உள்ளாள்.
முன்னாளில் இந்த ஆலயத்தில் எருமைக்கடா பலி நடந்து வந்தது. அப்போது பூசாரி இந்த பெத்தார்ணரிடம் அனுமதிபெற்று அவரிடம் அரிவாள் வாங்குவாராம்!
ஆலயத்தில் சித்திரை மாதக் கடைசி யில் பெருவிழா நடைபெறுகிறது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாடும் பௌர்ணமியில் சிறப்பு வழிபாடும் நடைபெறு கிறது.
அப்பொழுது அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபடுகின்றனர்.
தற்போது இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.
முற்காலத்தில் வைகாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் எருமைக்கடா பலி கொடுக்கும் நாளில், அந்த நேரத்துக்கு மதியம் 12.00 மணிக்கு ஏதாவது ஒரு கடா கட்டவிழ்த்துக் கொண்டு ஓடிவந்து சந்நிதிக்கு முன்பாக நிற்குமாம்!
ஒருமுறை சிதம்பரத்திலிருந்து பெரிய முரட்டு எருமைக்கடா ஒன்று தானாக கட்டவிழ்த்து, வைகாசி இரண்டாவது செவ்வாய்க்கிழமை நாளில் பகல் 12.00 மணிக்கு அன்னையின் சந்நிதி முன்பு வந்து நின்று, வெட்டு ஏற்று வீடு பேறு பெற்றதாகச் செவி வழிச் செய்தியொன்று உள்ளது.
1964-ஆம் ஆண்டு அரசு வழங்கிய உத்தரவுப்படி இந்த கடா வெட்டு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுவிட்டது.
அதற்கு மாற்றாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மதியம் 12.00 மணிக்கு மகிஷாசுர சம்ஹார நினைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த அம்பகரத்தூரில் பார்வதீஸ்வரி சமேத பார்வதீஸ்வரர் சிவாலயமும்; அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் ஆலயமும்; மகாமாரியம்மன் ஆலயமும் உள்ளன.
இந்த மகாமாரியம்மனின் பூச்சொரி விழாவையடுத்து இந்த பத்ரகாளியம்மன் ஆலய விழா காப்புக் கட்டலுடன் ஆரம்பிக்கிறது.
Sri BhadraKali Temple
Address Ambagarathur, Tamil Nadu
Phone +91 4368 251 515,
Monday 06:30-12:30, 16:00-20:00
Tuesday 06:30-12:30, 16:00-20:30
Wednesday 06:30-12:30, 16:00-20:00
Thursday 06:30-12:30, 16:00-20:00
Friday 06:30-12:30, 16:00-20:00
Saturday 06:30-12:30, 16:00-20:00
Sunday 06:30-12:30, 16:00-20:00,