திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது.
பெருமாள், ராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர்.
இதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது.
கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.
பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது.
ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.
சிவ வடிவமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் உகந்தது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமன் ஜெயந்தியன்று சன்னதி முன் மண்டபம் முழுதும் பூக்கள், பழம் மற்றும் வடைகளால் அலங்காரம் செய்துவிடுவர்.
தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடக்கும். பெரும்பாலான ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது.
ஆனால், இங்கு கிரக, ஜாதக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டுகின்றனர்.
இளநீரின் மேற்பகுதியில் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியைக் குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்துவிடுவர்.
அர்ச்சகர் அதை அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆஞ்சநேயரின் வாலில் கட்டிவிடுவார். ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம்.
வாலைக் கொண்டு சீதைக்கு துன்பம் செய்தவர்களின் ஊரையே அழித்தது போல, நமக்கு தொல்லை தரும் கிரகதோஷங்களையும் எரித்து விடுவார் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.
தலவிருட்சமான பலாவின் கீழ், ராமலிங்கசுவாமி காட்சி தருகிறார். பவுர்ணமி மற்றும் பிரதோஷ வேளையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும்.
இவருக்கு பின்புறம் வேணுகோபாலர் சன்னதி உள்ளது. ரோகிணி நட்சத்திர நாளில் இவருக்கு திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கிறது.
திண்டுக்கல் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.