Breaking News :

Thursday, November 21
.

சக்கரத்தாழ்வாரும் நரசிம்மரும் இணைந்து இருப்பது ஏன்?


பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னிதி உண்டு. அவரின் பின்புறத்தில் கண்ணாடி வழியாக பார்க்கும்போது யோக நரசிம்மரும் காட்சி தருவார்.

அது ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அதைப் பற்றி இனி அறிவோம்.

யார் இந்த சக்கரத்தாழ்வார்?:

பெருமாளின் கைகளில் ஐந்து முக்கியமான ஆயுதங்கள் வைத்திருப்பார். அதில் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கும், சுதர்சன சக்கரமும் மிகவும் முக்கியமானவை. பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு பெருமாள் சென்று அவர்களை காப்பாற்றும் முன் அவரது கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் விரைவாக சென்று அவர்களின் துன்பம் தீர்க்கும் என்பது ஐதீகம்.

16 திருக்கரங்களைக் கொண்டவர் சக்கரத்தாழ்வார். பகவான் தனது ராமாவதாரத்தில் அவருடைய உடன் பிறந்த தம்பிகளில் ஒருவன் பரதன். அவரே சக்கரத்தாழ்வாராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

நரசிம்ம பெருமாள்:

திருமாலின் பத்து அவதாரங்களில் தாயின் கருவில் தோன்றாமல் அவசரகதியில் தூணில் இருந்து தோன்றியவர் நரசிம்மர். ‘இந்தத் தூணில் உனது நாராயணன் இருக்கிறாரா?’ என்று இரணியன் கேட்டு அதை பிளப்பதற்கு முன்பு அவசரமாக நரசிம்ம அவதாரம் எடுத்து அதற்குள் சென்றவர் நரசிம்மர். அதனால் நரசிம்ம அவதாரத்தை, ‘அவசர திருக்கோலம்’ என்று அழைப்பார்கள்.

சக்கரத்தாழ்வாரும் நரசிம்மரும் இணைந்து இருப்பது ஏன்?

பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி சென்று அவர்களைக் காப்பது சக்கரத்தாழ்வார் வழக்கம். அதுபோல பிரகலாதன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள்புரிந்த நரசிம்மர்,
பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கும் உடனே ஓடோடி வருவார்.

மனம் உருகி வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு நாராயணனின் கையில் இருக்கும் சக்கரம் சுழன்று ஓடோடி பக்தனைக் காப்பது போல அவருக்கு பின்னால் யோக நிலையில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் உடனடியாக ஓடி வந்து பக்தர்களின் குறை தீர்ப்பார் என்பது ஐதீகம். அதனால்தான் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.

சக்கரத்தாழ்வாரை நம்பி வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும். அதேபோல நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து காக்கக்கூடிய தெய்வம் அவர்.

எனவே, அவர்கள் இருவரையும் ஒருசேர வணங்கி அருள்பெறுவது மிகவும் சிறப்பு.

ஓம நமோ நாராயணா.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.