தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், இலஞ்சி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.
இக்கோயில் குற்றாலத்திலிருந்து 4.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
"முருகா' எனும் திருப்பெயரில் மும்மூர்த்தி யரின் திருவருளும் அடங்கும். `மு' - முகுந்தனா கிய திருமாலையும், `ரு' - ருத்ரனயும், `க' கமலத் தில் வீற்றிருக்கும் பிரம்மனையும் குறிக்கும்.
இலஞ்சி என்ற சொல்லுக்கு ஏரி, குளம், மடு, பொய்கை, மதில், மகிழ மரம் என பல பொருள் உண்டு என இலஞ்சி தல புராணம் குறிப்பிடுகிறது.
"இலஞ்சி" என்ற சொல்லை பல கவிஞர்கள் தங்கள் கவிப்பாக்களில் பயன்படுத்தி உள்ளனர். "இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே" என அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தை குறிப்பிடுகிறார். அது போல மதுரைக் காஞ்சியில் "ஒளிறு இலஞ்சி" என்றும் மலைபடுகடாகத்தில் " சுடர்ப்பூ இலஞ்சி" என்றும் சிறப்பிக்கப் பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் நிறைந்த இலஞ்சி என்னும் இந்த ஊரானது மா, பலா, வாழை, கமுகு, தென்னை போன்ற மரங்கள் மற்றும் நெல் வயல்கள் சூழ்ந்த சோலையாக திகழுகிறது.
இலஞ்சி குமரன் கோவில் என்றே இத்தலம் அழைக்கப்பட்டாலும் இங்கு ஈசனே நடுநயமாக காட்சித் தருகிறார்.
*முருகன் சன்னதி சுவாமி பெயர்: திருவிலஞ்சிக்குமாரர்.
*சிவன் சன்னதி சுவாமி பெயர்: இருவாலுக நாதர்.
*அம்மை பெயர்: இருவாலுக ஈசர்க்கினியாள்.
*திருக்கோவில் விருட்சம்: மகிழ மரம்.
*தீர்த்தம்: சித்ரா நதி
பாடியவர்கள்: அருணகிரிநாதர்
திருவிலஞ்சி
இத்தலத்திற்குரிய பாடல்கள் :
நான்கு (971 – 974)
தனந்த தனதன தனந்த தனதன
தனந்த தனதன …… தனதான
கரங்க மலமின தரம்ப வளம்வளை
களம்ப கழிவிழி …… மொழிபாகு
கரும்ப முதுமலை குரும்பை குருகுப
கரும்பி டியினடை …… யெயின்மாதோ
டரங்க நககன தனங்கு தலையிசை
யலங்க நியமுற …… மயில்மீதே
அமர்ந்து பவவினை களைந்து வருகொடி
யவந்த கனகல …… வருவாயே
தரங்க முதியம கரம்பொ ருததிரை
சலந்தி நதிகும …… ரெனவான
தலம்ப ரவமறை புலம்ப வருசிறு
சதங்கை யடிதொழு …… பவராழி
இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப
னிரண்டு புயமலை …… கிழவோனே
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
இலஞ்சி மருவிய …… பெருமாளே.
கொந்தள வோலை குலுங்கிட வாளிச்
சங்குட னாழி கழன்றிட மேகக்
கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் …… பனிநீர்சேர்
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக்
கண்கயல் மேனி சிவந்திட கோவைக்
கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் …… கடலூடே
சந்திர ஆர மழிந்திட நூலிற்
பங்கிடை யாடை துவண்டிட நேசத்
தந்திட மாலு ததும்பியு மூழ்குற் …… றிடுபோதுன்
சந்திர மேனி முகங்களு நீலச்
சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச்
சந்திர வாகு சதங்கையு மோசற் …… றருள்வாயே
சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்
கொண்டுநல் தூது நடந்தவ ராகத்
தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் …… சிவகாமி
தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்
சங்கரி மோக சவுந்தரி கோலச்
சுந்தரி காளி பயந்தரு ளானைக் …… கிளையோனே
இந்திர வேதர் பயங்கெட சூரைச்
சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக்
கின்புற மேவி யிருந்திடு வேதப் …… பொருளோனே
எண்புன மேவி யிருந்தவள் மோகப்
பெண்திரு வாளை மணந்திய லார்சொற்
கிஞ்சியளாவு மிலஞ்சிவி சாகப் …… பெருமாளே.
சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
துரந்தெறி கின்ற …… விழிவேலால்
சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு
சுருண்டும யங்கி …… மடவார்தோள்
விரும்பிவ ரம்பு கடந்துந டந்து
மெலிந்துத ளர்ந்து …… மடியாதே
விளங்குக டம்பு விழைந்தணி தண்டை
விதங்கொள்ச தங்கை …… யடிதாராய்
பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற
பொலங்கிரி யொன்றை …… யெறிவோனே
புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள்
புரந்தரன் வஞ்சி …… மணவாளா
இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
குரும்பைம ணந்த …… மணிமார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
இலஞ்சிய மர்ந்த …… பெருமாளே.
மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை யநங்கன் …… மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்து
வாடை யெறிந்த …… அனலாலுங்
கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி …… தளராமுன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவு மின்று …… வரவேணும்
கால னடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த …… முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
காத லிரங்கு …… குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
சூழு மிலஞ்சி …… மகிழ்வோனே
சூரிய னஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற …… பெருமாளே.
__அருணகிரிநாதர்
ஆதி காலத்தில் திரிகூடாசல மலையின் அடிவாரத்தில் கபில முனிவர், துர்வாச முனிவர், காசிப முனிவர் ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள். அவர்களின் சந்திப்பின் போது பல ஆன்மீக கருத்துக்களை பற்றி உரையாடிக் கொண்டிருக்க, மூம் மூர்த்திகளில் நிமித்த காரண கடவுள் யார் என்ற சந்தேகம் தோன்றுகிறது. காசிப முனிவரோ படைக்கும் கடவுளான பிரம்மனே என்றும், துர்வாச முனிவரோ காக்கும் கடவுளான திருமாலே என்றும், கபில முனிவரோ அழிக்கும் கடவுளான சிவனே என்றும் மாறுபட்ட கருத்துக்களை கூறினார்கள். அப்போது துர்வாச முனிவர் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வணங்கி தங்கள் ஐயம் தீர்த்து வைக்க பணிகிறார். அவரின் வேண்டுகோளை ஏற்ற முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும், ஆடகப் பொன் மேனியும் கொண்ட கட்டிளமை கோலத்தில் தோன்றி பிரம்மாவாகவும், திருமாலாகவும், ருத்திரனாகவும் இணைந்த மும்மூர்த்தி வடிவில் காட்சியருளி தாமே நிமித்த காரண கடவுள் என்பதை தெளிவுபடுத்தியதாகவும், அந்த தரிசனத்தை கண்டு தங்கள் ஐயம் தீர்ந்த முனிவர்கள் தங்களுக்கு காட்சியளித்தது போலவே இத்தலத்தில் எழுந்தருளி இங்கு வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டதற்கு இணங்க, இங்கு முருகப் பெருமான் வரதராஜ குமரனாக அருள்பாலிப்பதாக இலஞ்சி தல புராணம் கூறுகிறது.
இருவாலுக நாயகர் (சிவன்) வரலாறு:
முற்காலத்தில் கைலாயத்தில் நடைபெற்ற சிவன் - பார்வதி திருக்கல்யாணம் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், சகல ரிஷிகளும், முனிவர்களும் மற்றும் பிற கடவுளர்களும் அங்கு கூடியதால் வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்து விட, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து தென் திசை சென்று பூமியை சமநிலைபடுத்தும்படி கட்டளையிடுகிறார். அப்போது தான் திருமணத்தை தரிசிக்க முடியாதே என வருந்திய முனிவருக்கு, தெற்கே பொதிகை மலையில் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பதாக கூறி அருளுகிறார். இதனை ஏற்ற அகத்திய முனிவரும் தென் திசை நோக்கி பயணித்து வருகிறார்.
அப்போது திருக்குற்றாலம் என்னும் தலத்திற்கு அவர் வந்து அங்குள்ள கோவிலுக்குள் நுழையும் போது, அங்கிருந்த வைணவர்கள் சைவரான அகத்தியரை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.
இதனால் மனம் வருந்தி கால் போன போக்கில் நடந்த அகத்திய முனிவர் திருவிலஞ்சி தலத்திற்கு வருகிறார். அங்குள்ள திருவிலஞ்சிக் குமரனை தரிசித்து குற்றாலத்தில் தனக்கு நேர்ந்த அவமானங்களை கூறி வருந்துகிறார். தமிழ் முனிவராகிய அகத்தியரின் வருத்தத்தை தீர்க்கும் பொருட்டு முருகப்பெருமான் காட்சியளித்து, வஞ்சகர்களை வஞ்சகத்தால் வெல்க என்று கூறி சிவாகமங்களையும் உபதேசித்து அருளுகிறார். அதன் படி சித்ரா நதிக்கரையில் வெண் மணல் எடுத்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்குகிறார். பின்னர் முருகப்பெருமான் கூறியபடி குற்றாலம் சென்று வைணவர் வேடத்தில் திருக்கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த விஷ்ணுவை வணங்கி அவரது தலையில் கை வைத்து அழுத்தி சிவலிங்கமாக மாற்றியருளினார் என்று வரலாறு விவரித்து கூறுகிறது.
ஆக அகத்தியர் திருக்குற்றாலம் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டி இங்கு சிவபூசை செய்த வெண் மணல் லிங்கமே இத்தலத்தின் ஈசனான இருவாலுக நாயகர் ஆகும்.
*சுவாமி திருவிலஞ்சி குமரன் :
இங்கு எழுந்தருளி உள்ள வரதராஜ குமரன் என்று சிறப்பிக்கப்படும் திருவிலஞ்சி குமரன் நான்கு கரங்கள் கொண்டு வேல் தாங்கியும், மயிலை வாகனமாக கொண்டபடியும், நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சியருள்கிறார்.
*சுவாமி இருவாலுக நாயகர்:
இரு என்ற சொல்லுக்கு பெருமை என்று பொருள், வாலுகம் என்ற சொல்லுக்கு வெண் மணல் என்று பொருள். ஆக அகத்தியர் பிரதிஷ்டை செய்த பெருமை மிக்க வெண் மணல் லிங்கம் என்பதால் இத்தல ஈசன் இருவாலுக நாயகர் என்ற பெயரில் கருவறையில் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவருக்கு மருந்து சாத்தி, குவளை அணிவிக்கப்பட்டுள்ளது. இவர் மணல் லிங்கம் என்பதால் அபிஷேகம் கிடையாது.
அம்மை இருவாலுக ஈசர்க்கினியாள்:
இத்தல அம்மை இருவாலுக ஈசர்க்கினியாள் என்ற அழகிய பெயர் கொண்டு கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை தொங்கவிட்ட படியும், சிரித்த முகத்தவளாக, இடை நெளித்து நின்ற கோலத்தில் தெற்கு திசை நோக்கி காட்சித் தருகிறாள்.
*இலஞ்சி குமரன் திருக்கோவில் அமைப்பு :
இயற்கை எழில் சூழ்ந்த வயல்கள் மற்றும் சோலைகளுக்கு நடுவே, சித்ரா நதியும், ஐந்தருவியாறும் சங்கமிக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ள இத் திருக்கோவிலுக்குள் செல்ல கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இரண்டு வாயில்கள் உள்ளன.
கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் உள்ளே அழகிய நந்தவனம் நம்மை வரவேற்கிறது. நந்தவனத்தை தாண்டினால் சரவண மண்டபம் என்னும் பெயரில் அழகிய முன் மண்டபம் அமையப் பெற்றுள்ளது. இந்த மண்டபத்தை தாண்டி செல்லும் உள் வாயிலின் தென்புறம் தல விநாயகர் காட்சியளிக்கிறார். அவரை வணங்கி உள்ளே நுழைந்தால் நேராக கிழக்கு நோக்கிய இருவாலுக நாயகர் சன்னதி. கருவறையில் உறையும் இருவாலுக நாயகருக்கு எதிராக வெளியே அவருடைய வாகனமான நந்தி, கொடி மரம், பலி பீடம் ஆகியவைகள் அமையப் பெற்றுள்ளன. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் தனி சன்னதியில் இருவாலுக நாயகருக்குரிய உற்சவ சோமாஸ்கந்தர் மற்றும் அம்பாள் அருள்பாலிக்கிறார்கள். அதே முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் இத்தல அம்மையான இருவாலுக ஈசர்க்கினியாள் காட்சித் தருகிறாள்.
சுவாமி இருவாலுக நாயகர் சன்னதிக்கு தெற்கே தனி சன்னதியில் காட்சியளிக்கிறார் இத்தல நாயகனாக விளங்கும் திருவிலஞ்சிக்குமார சுவாமி. அவருக்கு இருபுறமும் முறையே வள்ளியும், தெய்வானை அம்மைகளும் காட்சித் தருகிறார்கள். இவரது சன்னதிக்கு எதிரே இவருடைய வாகனமான மயில் மற்றும் தனி கொடிமரம், பலிபீடம் ஆகியவையும் இருக்கிறது.
இந்த இரண்டு சன்னதிகளையும் ஒருங்கிணைத்து விளங்கும் பிரகாரங்களில் முறையே பரிவார மூர்த்திகளாக அதிகார நந்தி, சூரியன், சுரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், கன்னி மூல கணபதி, உற்சவர் திருவிலஞ்சி குமாரர், வேணு கோபாலர், காசி விசுவநாதர் - விசாலாட்சி, திருக்குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை, அய்யனார், அகத்தியர், சப்த கன்னியர்கள், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சண்முகப்பெருமான், நடராஜர், பைரவர், சந்திர பகவான் ஆகியோர் காட்சித் தருகிறார்கள்.
திருக்கோவிலின் வெளிப் பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது. இந்த நந்தவனத்தில் இத்தல விருட்சமான மகிழ மரம் மற்றும் நாகலிங்க மரம், வில்வ மரம், மா மரம் போன்ற எண்ணற்ற மரங்களும், பூச்செடிகளும் நிறைந்து காணப்படுகிறது.
*இலஞ்சி குமரன் திருக்கோவில் சிறப்புக்கள்:
இங்கு முருகப் பெருமான் அழகிய இளமைக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இக்கோவிலில் முறையே திருவனந்தல், விளா பூஜை, கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய ஆறுகால வழிபாடுகள் நித்தம் நடைபெற்று வருகிறது.
இந்த கோவில் மகுட ஆகப்படி முறையே கருவறை, அர்த்த மண்டபம், மணி மண்டபம், மகா மண்டபம் ஆகிய அங்கங்களை கொண்டு அமையப் பெற்றுற்ளது.
இந்த தலத்தின் இலஞ்சிக் குமரனே திருக்குற்றாலத்தின் துவார சுப்பிரமணியராகவும், பிரத்யேக பஞ்ச மூர்த்திகளுள் ஒருவராகவும் திகழ்வது சிறப்பு.
இந்த இலஞ்சி தலம் முன்னர் தென் ஆரிய நாட்டின் ஆளுகையில் இருந்ததாக குற்றால குறவஞ்சியிலும், திருவிலஞ்சி உலா என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னர் தொண்டைமான் மன்னர் இங்கு கோட்டை மற்றும் கொத்தளங்கள் அமைத்து ஆட்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சாட்சியாக கோட்டை கிணறு, யானை கட்டிய கட்டுத்தறி, கோட்டை கிணறு, தொண்டைமான் குளம் ஆகியவைகள் இன்றும் வழக்கத்தில் காணப்படுகிறது.
*இலஞ்சி குமரன் கோவில் பூஜை நேரம்:
காலை 6.30 மணி முதல் 12:30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
*இலஞ்சி குமரன் முக்கிய திருவிழாக்கள்:
இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி இருவாலுக நாயகரும், இலஞ்சிக் குமரனும் காட்சித் தருவார்கள். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும்.
ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவும் இங்கு விமரிசையாக நடைபெறும். இவ் விழாவின் முதல் நாள் பிரம்மனாகவும், இரண்டாம் நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் சிவனாகவும், நான்காம் நாள் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் சதாசிவனாகவும் காட்சித்தரும் இத்தல குமரன் ஆறாம் நாள் வெள்ளி மயிலேறி சென்று சூரனை சம்காரம் செய்து அருள்பாலிப்பார்.
தை மாதம் இத்தல குமரன் திருக்குற்றாலம் எழுந்தருள, குற்றாலநாதர் உடன் சித்ர சபை எதிரிலுள்ள திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
மாசி மாதம் மேலகரத்தில் நடைபெறும் நாள் கதிர் கொள்ளும் திருவிழாவுக்கு தென்காசி மற்றும் திருக்குற்றாலம் திருக்கோவில் அஸ்திரதேவருடன் இத்தல அஸ்திரதேவரும் எழுந்தருளி சிறப்பு சேர்ப்பார்.
இது தவிர திருக்குற்றாலத்தில் நடைபெறும் சித்திரை விசு மற்றும் ஐப்பசி விசு திருவிழாவுக்கு இத்தல திருவிலஞ்சி குமரன் எழுந்தருளி விழாவின் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை பத்து நாட்களும் குற்றாலத்தில் தங்கி இருந்து சிறப்பு சேர்ப்பார்.
புராண வரலாறு:
இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை மதில் மகிழமரம் எனப்பல பொருள்படும்.இலக்கியங்களில் கவிகள் எத்தணையோ இடங்களில் இச்சொல்லை ஆண்டிருக்கிறார்கள். இப்போது பேச்சு வழக்கில் இப்பொருள்கள் காணப்படவில்லை, ஊரைக் குறிக்கும் ஆகுபெயராகவே வழங்குன்றது.
திரிகூட மலையின் வடகீழ்த் திசையிலே சந்தித்த காசிப முனிவர், கபில முனிவர், துருவாசமுனிவர் ஆகிய மூவரும் தத்துவ ஆராயச்சி செய்து கொண்டு இருந்தனர், அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட வினாவிற்கு (இவ்வுலகம் உள் பொருளா இல் பொருளா ? )
முருகக் கடவுள், தன் என்றும் மாறா இளமை அழகுடன் தோன்றி ”தானே மும்மூர்த்தியாகி மூவினையும் செய்வோம் ”என்று கூறி அவர்களது ஐயத்தை தீர்த்தார். மூன்று முனிவர்களும் இங்கேயே எழுந்தருளியிருந்து வழிபடுவோர் யாவருக்கும் ஞானம் அளித்து விரும்பும் வரத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.அதன்படி குமாரக் கடவுள் இத்தலத்தில் எழுந்தருளினார்.
வரதராஜக்குமாரரென பெயர் இத்தல முருகனுக்கு. இன்றும் வேண்டுவார் வேண்டும் வரங்கொடுத்து அருள்கிறார். என்கிறது ஒரு புராணக் கதை, சிவபெருமான் உமா தேவியார் ஆகியோரது திருமணத்தைப் பார்க்க யாவரும் இமயத்தில் கூடியதால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்து விட்டதை சரிசெய்ய அகத்தியரை தென்னாடு செல்லப்பணித்தார்.
அகத்தியரை, குற்றால நன்னகரியில் மாயவனாகிய நம்மைச் சிவனாக்கி பூசனை செய், அங்கே உனக்கு மணக்கோலமும், நடனமும் காட்டுகிறோம் என்று சொல்லி அனுப்புகிறார். அகத்தியர் தன்னால் முடியாத போது முருகனின் உதவியை வேண்டுகிறார். அவர் சொன்னபடி விஷ்ணுவை சிவனாக்கி வழிபட்டார், சிவார்ச்சனை செய்ய 28 ஆகமங்களை ஓதி வைத்தார் அகத்தியருக்கு.
அகத்திய முனிவர் பூஜை செய்ததும் அருணகிரிநாதரால் பாடப்பெற்றுதுமான வரலாற்று சிறப்பு வாய்ந்தது
இங்கு நடக்கும் கந்த சஷ்டி விழாவைப்பற்றி மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில் பாடி இருக்கிறார்.
திருக்குற்றாலத் தலபுராணத்தில் வெற்றிவேற் குமரன் விரும்பி அமர்ந்த தலம் என்றும் , பிரம்மா, இந்திரன் குமரனை அர்ச்சித்து வாழ்ந்த இடம் என்று குறிப்பிடுகிறது.
அருணகிரிநாதர் திருப்புகழ் நான்கு உள்ளது.
”கரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
துரந்தெரிகின்ற விழிவேலால்”
என்ற பாடல்,
”கொந்தள ஓலை குலுங்கிடவாளி”
என்று ஆரம்பிக்கும் பாடல்,
”கரங்கமலின் தரம்பவளம்வளை”
என்று ஆரம்பிக்கும் பாடல்
”மாலையில் வந்து மாலை வழங்கு”
என்று ஆரம்பிக்கும் பாடல் ஆகியவற்றின் மூலம்
இலஞ்சிக் குமரனின் பெருமைகளை அறியலாம்.
இலக்கியச் சிறப்பு:
நீரும்,தாமரையும் நிறைந்த இடம் எனப் பொருள் கொண்ட இலஞசி என்னும் இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் திரு இலஞசிகுமாரரை அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழில் பாடிப்பணிந்து வணங்கியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்பு:
புராண காலத்திலேயே இத்திருத்தலத்தை கி.பி 14 ம்நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகரபாண்டியன் புதுப்பித்துச் செப்பனிட்டுக் கட்டுவித்தான்.இத்திருக்கோயிலன் சுற்று மதில் சுவரை 15ம் நூற்றாண்டில சொக்கம்பட்டி ஜமீன்தாரரான காளத்திய பாண்டியன் கட்டுவித்துச் சிறப்புச் செய்துள்ளார்.
தனிச்சிறப்பு:
இத்திருக்கோயில் இருவாலுக ஈசர் என்றும் இருவாலுக ஈசர்க்கினியாள் என்றும் சிவத்தலமாக இருந்த போதிலும் திரு இலஞ்சி குமாரர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலிக்கிறார்.
அம்மை அப்பருடன் எழுந்தருளி உள்ளதால இங்கு திருமணம் செய்வது விசேஷம்.ஆகவே இங்கு அதிக அளவில் திருமணம் நடப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.
அமைவிடம் :
தென்காசி மாவட்ட நகருக்கு மேற்கே சுமார் 5 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது இலஞ்சி.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்துகள் மூலம் தென்காசி சென்று இறங்கி, அங்கிருந்து நகரப்பேருந்துகள் மற்றும் தனியார் கட்டண வாகனங்களில் ஏறி இலஞ்சி கோவிலை சென்றடையலாம்.