அட்சய திருதியை நன்னாளில், முடிந்த அளவுக்கு தானம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். ஆகவே, தானம் செய்யுங்கள். அதனால், வீட்டில் சகல சுபிட்சங்களும் நிறைந்திருக்கும். ஐஸ்வரியம் பெருகும். கடனில்லாத வாழ்க்கையை வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
'அட்சய’ என்றால் வளருதல் என்று அர்த்தம். அதனால்தான் அள்ள அள்ளக் குறையாமல் இருக்கிற பாத்திரத்தை, அட்சயப் பாத்திரம் என்று அழைத்தார்கள். ஆக, அட்சயம் என்றால் வளருதல். சயம் என்றால் கேடு என்று அர்த்தம். அட்சயம் என்பது, கேடு இல்லாத, அழிவு இல்லாத பொருள் என்று பொருள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். திருதியை என்பது மூன்றாம் நாள். அமாவாசையில் இருந்து வரும் மூன்றாம் நாள் திருதியை எனப்படுகிறது. சித்திரை மாதத்தின் அமாவாசையின் மூன்றாவது நாளே அட்சய திருதியை நாள் என்று போற்றப்படுகிறது.
கடவுளை வணங்குங்கள்...
முதலில், அட்சய திருதியை நாளில் செய்யவேண்டியது வழிபாடு. இறைவனை வழிபட வழிபட, நாம் இன்னும் இன்னும் செம்மையாவோம். புத்தியில் தெளிவும் மனதில் திடமும் பேச்சில் இனிமையும் உடலில் வேகமும் பெறுவோம். இறைசக்தியின் நல்ல நல்ல அதிர்வுகள் யாவும் நமக்குள் வளர்ந்துகொண்டே இருக்கும். இது... அட்சய திருதியை எனும் நன்னாளின் மகத்துவம்!
இந்த நாளில், ஹோமம் செய்து பூஜிக்கலாம். ஜபங்கள் செய்து வணங்கலாம். பாராயணம் செய்து, கடவுளை ஆராதிக்கலாம். வீட்டில் தீபமேற்றி, சுவாமி படங்களுக்கு பூக்கள் அணிவித்து, பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி என இனிப்புகள் படைத்து, வேண்டிக் கொள்ளலாம்.
தானம்... தானம்... தானம்..!
அட்சய திருதியை நாளில், பொன்னும்பொருளும் வாங்கவேண்டும் என்கிறார்களே என்பதுதான் பலரின் கேள்வி. உண்மையில்... அந்தநாளில், அட்சய திருதியை நாளில், உப்பு வாங்குங்கள். உங்கள் வீட்டில் செல்வம் கடாக்ஷத்துடன் திகழும் என்பதை அடுத்தடுத்த காலகட்டத்தில் நீங்களே உணருவீர்கள்.
அதேபோல்... நாம் இந்தநாளில் செய்யவேண்டியது... தானம். அட்சய திருதியை நாளில்., தானம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது சாஸ்திரம். முடிந்தவர்கள், தங்கமோ வெள்ளியோ ஆச்சார்யர்களுக்கு தானமாக வழங்கி நமஸ்கரிக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு, நம்மால் முடிந்த தாலியோ தாலியில் கட்டிக்கொள்ளும் காசோ வழங்கலாம்.
’தங்கத்துக்கும் வெள்ளிக்கும் எங்கே போறது’ என்று அலுத்துக்கொள்கிற மிடில்கிளாஸ் அன்பர்கள், எவருக்கேனும் குறிப்பாக வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். இன்னொருவருக்கு செருப்பு வழங்குங்கள். வீட்டு வாசலில் ஒரு பானை வைத்து ஜில்லென குடிநீர் வழங்குங்கள். ‘அடிக்கிற வெயிலுக்கு ஒரு மோர் கொடுத்தா நல்லாருக்குமே’ என்று நினைத்தால், நீர்மோர் வழங்குங்கள், இனிப்பும் குளுமையும் தருகிற பானகம்வழங்குங்கள்.
மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்,பேனா, பென்சில், ஸ்கெட்ச் பேனா, டிராயிங் நோட்டு வழங்குங்கள். பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் மல்லிகைப்பூவும் வழங்குங்கள். முடிந்தால், ஜாக்கெட் பிட் வழங்கலாம்.
சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு, பாய், போர்வை வழங்குங்கள். ஆடை வழங்குங்கள். ஒரு பத்துபேருக்காவது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். இவையெல்லாம் செய்யச் செய்ய, இந்த தானங்களை வழங்க வழங்க... உங்கள் வீட்டில் செல்வமும் வளமும், காசும்பணமும், தங்கமும் வெள்ளியும் பன்மடங்கு புண்ணியங்களாகச் சேரும் என்பது ஐதீகம்; நம்பிக்கை!
ஆகவே, அட்சய திருதியை நாளில், தானம்தான் செய்யவேண்டும். உங்களால் முடிந்த அளவுக்கு தானங்களைச் செய்யுங்கள். அந்த தானத்தின் தருமம்... உங்களின் ஏழேழு தலைமுறையையும்
காக்கும் என்பது சத்தியம்!