முன்னவனாகிய ஆனை முகத்தவனே! பொன்னவனாகிய தேவ குருவின் பொற்பாதங்களைப் புகழ்ந்து குற்றமில்லாத புத்திர தோஷமதைப் போக்குகின்ற கவிகளைப் புனைவதற்கு ஆராய்ந்து என்னுடைய சித்தமதில் வந்து அருள்புரிவாயாக.
வியாழ குருவே!முத்தைப் போன்று விளங்குகின்ற முல்லை மொட்டுகள் விரிந்த மலர்களைத் தூவி, தென்முகக் கடவுளின் திருப்பாதங்களைத் தகுதியுடன் பூஜித்து வந்த அன்பர்களுக்கு உள்ள புத்திர தோஷத்தை போக்கி,
அவர்களைப் புகழுடன் வாழ வைப்பாய். மேலும் மங்கள நிகழ்ச்சிகள் பலவற்றையும் நடத்தி வைப்பாய். உனக்கு நமஸ்காரம்.
நேயம் மிகுந்த தேவேந்திரனின் குற்றங்கள் பலவற்றையும் பொறுத்தாட் கொள்கின்ற கோதற்ற குருவே! புறத்திலும் அகத்திலும் தூய்மை கொண்டு விளங்கும் புண்ணிய சீலர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பேறுகளைத் தந்து உன்னுடைய நிறைந்த அருளையும் தந்து காப்பாயாக! உனக்கு நமஸ்காரம்.
வானவர் குருவே! பெரிய வானவெளியில் உலவுகின்ற பெரிய கோளாகிய உன்னை விரும்பி, நல்ல நெய் தீபங்களை ஏற்றி, வியாழக்கிழமை விரதத்தை மேற்கொண்ட மெய்யன்பர்களுக்கு திருமகள் பார்வை யோகமும்,திருமணம் கூடும் யோகமும் வருமாறு திருவருளை செய்வாய்! உனக்கு நமஸ்காரம்.
அமரர்களுடைய குருவே! அணிமா, மகிமா, லஹிமா, கரிமா, ப்ராப்தி,பிரகாமியம் ஈசத்துவம், வசித்துவம் எனும் எட்டு வகையான சித்திகளையும் கொடுக்கின்ற அறிஞனே! அன்பர்களுக்கு எந்நாளும் பட்டமும், மேலான பதவியும், செல்வமும் பாரில் உள்ள நல்ல யோகமும், தந்து விருப்பம் போல் அவர்களை வாழ வைக்கின்ற எந்தையே!
எதற்கு தானோ எட்டாம் இடத்து குருவாகவும் ஆனாய்? உனக்கு நமஸ்காரம். (அட்டமத்து குரு துன்பம் செய்யும் என்பதாம்)
அறிவுச்சுடர் வீசுகின்ற குருவே!
எங்களுடைய இல்வாழ்வு மறையவர் வகுத்தவாறு அமையப்பெற்றும், குழந்தைகள் இல்லாத வாழ்வானது குறையுடைய வாழ்வே என்று உலகோர் கூறுவர்.
ஆகையால் எங்களுடைய அரிய தவமாகிய பூசனையை ஏற்றுக்கொண்டு குறையென்னும்" புத்திர தோஷம்" ஆகிய கொடுமையை தீர்த்தருள்வாயாக! உனக்கு நமஸ்காரம்.
வானமாகிய வீதியில் வலப்பக்கமாக சுற்றி வருகின்ற வியாழ தேவனே! மோனயோகத்தில் இருக்கின்ற மூர்த்தியே! மூன்று உலகத்திலும் (வானுலகு,பூவுலகு, நாகலோகுஎன்பன) தானத்தையும் தவத்தையும் தளிர் விடுமாறு செய்கின்ற உன்னுடைய ஞானமாகிய பார்வையை எனக்கு விரும்பி அருள்வாயாக! உனக்கு நமஸ்காரம்.
புண்ணிய மிகுந்த குருவே! புத்திர காரகனும் பொன் ஒழியை வீசும் வியாழ கிரகமும், சித்திகளைச் செய்யத் தூண்டுகின்ற சிந்தனையைத் தருகின்ற செல்வனும் நீயாவாய்.ஆகையால் புத்தியும் மனமும் ஒன்றுபட்டு வழிபட்ட மாந்தர்களுக்கு அன்றோ! உன்னுடைய புத்திர தோஷம் அதை போக்குவாய்! உனக்கு நமஸ்காரம்.
வியாழக் குருவே! வாழ்வில் வெற்றியைச் சேர்க்கும். வறுமையை இல்லாமல் ஆக்கும். தாழ்ந்த நிலத்தில் கிடந்த கல்லைத் தங்கமாக மாற்றும். முன் செய்த பழைய வினைகளை எல்லாம் போக்கிவிடும்.
உன்னுடைய (5 - 9 ஆம் ராசிப்) பார்வை என்றால் இந்த ஏழையின் மேல் மட்டும் உன்னுடைய பார்வை ஏன் இல்லை? உனக்கு நமஸ்காரம்.
தேவகுருவே! வியாழன் தோறும் நோன்பு இருந்தவர்களுக்கு குறையாத மக்கட் பேற்றினையும், குரு பாதத்தைச் சேவித்தவர்களுக்கு குன்றாத செல்வ வாழ்வினையும்,குருவாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு நீதி தவறாத நல்ல வாக்கினையும், குருவாகவே வந்து அருள் செய்கின்ற உன்னுடைய பாதங்களுக்கு என்னுடைய நமஸ்காரம்.
சாந்த குணம் நிறைந்த தேவ குருவே!
செந்திலம் பதிக்குச் சென்று முருகப்பெருமான் திருவருளைப் பெற்று வந்த உன்னை நினைத்து நாடோறும் உன் அருளாகிய பார்வைக்காக, கந்தனின் கவசத்தைப் பாடி உள்ளம் கசிந்து உன்னை பணிந்தோம்.
ஆகையால் எங்களுடைய சந்ததிகளைப் பிழைக்க வைப்பாயாக! உனக்கு நமஸ்காரம்.