தீய சக்திகளிடமிருந்து உலகை காக்க சிவபெருமான் தனது அம்சமாக தோன்றச் செய்த தெய்வம் தான் பைரவர். சிவனிடமிருந்து மொத்தம் 64 வகையான பைரவர்கள் தோன்றியதாக சிவபுராணம் கூறுகிறது. இதில் 8 வகையான பைரவ மூர்த்திகளே பக்தர்கள் அதிகம் பேரால் வழிபடப்படுகின்றனர். அதில் ஒருவர் தான் காலபைரவர்.
பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது.திருமணத்தடை அகலும்.சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். பைரவ மூர்த்தி சனியின் குரு.ஆகவே ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, ஜென்மச் சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் பைரவ வழிபாட்டால் குறையும் என்பது நம்பிக்கை.
சகல லோகங்களையும் அச்சுறுத்தி வந்த தீய சக்திகளான அரக்கர்களை அழிக்க, ஈசனின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவரே பைரவ மூர்த்தி.
இவரே பிரம்மனின் ஆணவத்தை அழிக்க, ஒரு தலையைக் கொய்து, நான்முகனாக மாற்றியவர். இவரே அந்தகாசூரனை அழித்த ருத்ர வடிவினர்.
அன்னபூரணியிடம் தானம் பெற்று, காசிராஜனாக, காலதேவனாக வீற்றிருப்பவரும் பைரவரே. காலமெனும் எமனின் அதிகாரத்தைக் குறைத்து, தம்மை சரணடையும் பக்தர்களுக்கு அபயம் அளித்து நீண்ட ஆயுள் வழங்கும் தெய்வமும் இவரே என்கின்றன புராணங்கள். பெருமைகள் மிகுந்த கால பைரவர் அவதரித்த தேய்பிறை அஷ்டமி நாளிலும், ஞாயிறு ராகு காலத்திலும் வணங்குதல் சிறப்பு.
தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்தது .அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது. காரணம் இந்த நாளில் தான் பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் தன் சக்திகளில் ஒன்றாக காலபைரவரை தோற்றுவித்தார். 'அகந்தையை அழித்து உலகில் நன்மையை நிலை நாட்டும் சக்தியாக காலபைரவர் என்றும் அருள்கிறார்', என்பது ஐதீகம்.