Breaking News :

Monday, August 11
.

காஞ்சியில் அரூப லட்சுமி!


நகரேஷூ காஞ்சி என்று காஞ்சியம்பதியைச் சொல்வார்கள். அதாவது, நகரங்களில் சிறந்தது காஞ்சி நகரம் என்று அர்த்தம். இத்தனை பெருமை மிக்க காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்கிறாள் ஸ்ரீகாமாட்சி அம்பாள். இவளின் திருக்கோயிலில், அரூபலட்சுமியாக இருந்து அருள்பாலிக்கிறாள் ஸ்ரீமகாலக்ஷ்மி!

'பாக்கறதுக்கு மகாலட்சுமி மாதிரி இருக்கா' என்று அழகும் தெய்வாம்சமும் உள்ள பெண்களைச் சொல்வார்கள். 'அப்படியென்றால் அழகில் சிறந்தவள் நானே' என கர்வம் கொண்டாள் ஸ்ரீமகாலட்சுமி.
'இந்த கர்வம் உலகத்துக்கு நல்லதல்ல. கர்வமே ஒருவருக்கு எதிரி என்பதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும்' எனத் திருவுளம் கொண்டார் மகாவிஷ்ணு.

 மனைவி என்றும் பாராமல் மகாலட்சுமியைச் சபித்தார். அவ்வளவுதான். அவளின் அழகு மட்டுமின்றி, உருவமே இல்லாது போயிற்று. மகாலட்சுமி, அரூபலட்சுமியானாள். 'கர்வமே சத்ரு என்பதை உணர்ந்தேன்; தெளிந்தேன். சாபத்துக்கு விமோசனம் தந்தருளுங்கள் ஸ்வாமி' எனக் கதறினாள்.

பிறகு, மகாவிஷ்ணுவின் ஆணைப்படி, இங்கே காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்பாள் சந்நிதிக்கு வந்து, இங்குள்ள காயத்ரீ மண்டபத்தில் அமர்ந்து, உமையவளை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள்.
அவளின் தவத்தில் மகிழ்ந்த காமாட்சி அம்பாள், கருணையே உருவெனக் கொண்டு, பிலாகாஸம் எனும் பகுதியில் இருந்து வெளிப்பட்டு, மகாலட்சுமிக்கு எதிரில் வந்து நின்று, காட்சி தந்தருளினாள். உருவமே இல்லாமல் இருந்தவளின் முன்னே உலகத்துக்கே அன்னையானவள் நின்றதும், மகாலட்சுமியின் சாபம் மொத்தமும் காணாமல் போனது.

'என் குழந்தைகள், அரூபலட்சுமியாக இருக்கிற உன் மீது குங்குமத்தை வைத்துவிட்டு, எடுத்துச் செல்வார்கள். இழந்த சௌந்தர்யத்தை மீண்டும் பெறுவாய். என் குழந்தைகளும் இழந்ததையெல்லாம் பெறுவார்கள். சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்' என அருளினாள் காமாட்சி அம்பாள்.
இன்றைக்கும் காஞ்சி காமாட்சி அம்பாள் சந்நிதியில் தரப்படுகிற குங்குமப் பிரசாதத்தை, காயத்ரி மண்டபத்தில் உள்ள ஸ்ரீஅரூபலட்சுமியின் மேல் வைத்துவிட்டு, அவளையும் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீமகாலட்சுமி சாப விமோசனம் கிடைக்கப் பெற்ற காஞ்சி புரத்துக்கு வந்து, அவளுக்கு விமோசனம் தந்த ஸ்ரீகாமாட்சி அம்பாளை மனமுருக வேண்டுங்கள். இழந்தது அனைத்தையும் பெறுவீர்கள்.

காஞ்சி காமாக்ஷி சரணம் !

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub