Breaking News :

Thursday, November 21
.

கிழவிக்கு மஹா பெரியவரின் நன்றிக் கடன்!


‘‘மஹா பெரியவரை அவர் தாயார் பிரசவித்த காலத்தில், உடன் உதவிக்கு இருந்த மருத்துவச்சி)(இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’-பெரியவா

 

வாரியாரும் அனந்தராம தீட்சிதரும் வியப்பு மேலிட... கண்களில் நீர் மல்க  மஹா பெரியவாளை நமஸ்கரித்தனர்.

 

நன்றி-சக்தி விகடன்-26-05-2006

 

திருமுருக கிருபானந்த வாரியார்ஸ்வாமிகள் 1965-ஆம் ஆண்டு சென்னை நகரில் ஒரு பள்ளி ஆண்டு விழாவின்போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ- மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினார். பின்னர், ஆசி வழங்கிச் சிறப்புரை ஆற்றியபோது, மனிதன் மனிதனாக வாழ வேண்டிய முறைகளையும் குருவின் மேன்மையைப் பற்றியும் விளக்கினார். அதற்கு உதாரணமாக அவர் சொன்ன சம்பவம் இதுதான்:

 

மனிதன் முதலில் வணங்க வேண்டியது மாதா. இரண்டாவது பிதா. மூன்றாவது குரு. நான்காவதாக தெய்வம். அப்படி ஒரு சம்பவம்...

 

சங்கராச்சார்ய மஹா ஸ்வாமிகள் அப்போது காஞ்சிபுரத்தில் இருந்தார். வாரியார் அவரை தரிசனம் செய்யச் சென்றார். மஹா ஸ்வாமிகள் பூஜையில் இருந்ததால், வாரியாரால் அவரை தரிசிக்க இயலவில்லை. அவரது பூஜை முடிவதற்குள் காமாட்சி அம்மனையும் மற்ற கோயில்களையும் தரிசித்துவிட்டு வரலாம் என்று கிளம்பினார் வாரியார்.

 

தரிசனம் முடிந்து திரும்பி வரும் வழியில் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரைச் சந்தித்தார் வாரியார். இருவரும் கோயிலின் ஒரு மூலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் எண்பது வயது மதிக்கத் தக்க மூதாட்டி ஒருவர் ஊன்றுகோலுடன் மெதுவாக நடந்து வந்து, தீட்சிதரை வணங்கினார். பின்பு அவரிடம், ‘‘எனக்கு ஒரு ருத்திராட்ச மாலை கொடுங்களேன்!’’ என்று கேட்டார். அதற்கு தீட்சிதர், ‘‘என்னிடம் தற்போது ருத்திராட்ச மாலை எதுவும் இல்லையே’’ என்றார்.

 

உடனே அந்த மூதாட்டி, ‘‘காஞ்சிப் பெரியவரிடம் சொல்லி வாங்கித் தாருங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு தீட்சிதர், ‘‘பெரியவாளிடம் என்னவென்று சொல்லி ருத்திராட்சம் கேட்க வேண்டும்?’’ என்றார். அந்த மூதாட்டி தன் பெயரைக் கூறி, ‘‘மஹா பெரியவரை அவர் தாயார் பிரசவித்த காலத்தில், உடன் உதவிக்கு இருந்த மருத்துவச்சி கேட்டதாகச் சொல்லுங்கள்!’’ என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கிளம்பினார்.

 

வாரியாரும் தீட்சிதரும் பேசியவாறு மடத்தை அடைந்தனர். அன்று மஹா பெரியவர், பூஜையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு மாலை ஏழு மணி அளவில் வேத விற்பன்னர்களுக்கு ஆகமத் தேர்வு நடத்தினார். அதில் வெற்றி பெற்றவர் களுக்கு விருது, சால்வை ஆகியவை அளித்து அனுப்பி வைத்தார்.

 

இரவு சுமார் ஒன்பது மணியளவில் வாரியாரும் மஹா பெரியவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். மடத்துச் சீடர் அந்த அறையைச் சுத்தம் செய்ய வந்தார். அப்போது ஒரு சால்வையும் ருத்திராட்ச மாலை ஒன்றும் அங்கு இருந்தன. அந்தச் சீடரை அழைத்த மஹா ஸ்வாமிகள், ‘‘உடனே சேங்காலியை (அனந்தராம தீட்சிதரை) அழைத்து வா!’’ என்றார். சீடர் அப்படியே செய்தார்.

 

ஸ்வாமிகள் தீட்சிதரிடம், ‘‘இந்த சால்வையும் ருத்திராட்ச மாலையும் உனக்குத்தான்!’’ என்று அழுத்தமாகக் கூறினார். தீட்சிதருக்கு எதுவும் புரியவில்லை. பெரியவர் சிரித்துக் கொண்டே, ‘‘நீ இந்த மாலையையும் சால்வையையும் என்ன செய்யப் போகிறாய்?’’ என்று வினவினார்.

 

தீட்சிதர் மௌனமாக இருந்தார். உடனே மஹா பெரியவர் அவரிடம், ‘‘இவற்றைப் பேசாமல் (பெயரைச் சொல்லி) அந்தக் கிழவியிடம் சேர்த்துவிடு. இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’ என்று கூறினார். வாரியாரும் தீட்சிதரும் சிலிர்த்துப் போனார்கள்.

 

பிறகு மடத்துப் பிரசாதங்களுடன் ருத்திராட்ச மாலையையும் சால்வையையும் சீடனிடம் கொடுத்து தீட்சிதர் மூலம் அவற்றை அந்தக் கிழவியிடம் கொடுக்கச் செய்தார். வாரியாரும் தீட்சிதரும் வியப்பு மேலிட... கண்களில் நீர் மல்க மஹா பெரியவாளை நமஸ்கரித்தனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.