பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
நல்லதைச் சொல்லென்றும் நல்லதே செய்யென்றும்
நயம்படச் சொல்லும் தாயே
நச்சு எண்ணம் கொண்டே இச்சையாய் அலைவாரை
நசுக்கிடும் அன்னை நீயே
பொல்லாத செயலினை பொடிப்பொடியாக்கிடும்
பொன் சுடர் தீபம்நீயே
புகழுடைய வாழ்விற்குப் பொன்முடி சூட்டியே
பூத்தூவி வாழ்த்துவாயே
கல்லாத மாந்தரின் கண்ணீரை நீக்கிடும்
கருவண்ண அன்னைநீயே
கற்றோரின் நெஞ்சத்தில் கலங்கரை விளக்கான
காவியச் சுடரும் நீயே
வில்லாக வேலாக வினைதீர்க்கும் மருந்தாக
விளங்கிடும் சக்தி நீயே
வேண்டிடும் நல்வரம் விரைவாகத் தந்திடும்
வெட்டுடை காளியுமையே!
சிவன் பிட்சாடனாராகவும், மகாவிஷ்ணு மோகினியாகவும் அவதாரம் எடுத்தபோது, அவர்களது இணைப்பில் உருவானவர் ஐயப்பன். இவரையே மக்கள் சாஸ்தா என்றும், அய்யனார் என்றும் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர்.
முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார்.
ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர்.
ஒரு சமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு "வெட்டுடையார் காளி" என்றே பெயர் ஏற்பட்டது.
காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே தலம் அழைக்கப்பெற்றது. ஆரம்பத்தில் இந்த ஊரில் அய்யனார் கோயில் தான் இருந்தது.
இதை ஸ்தாபித்தவர் யார் என்பது தெரியவில்லை. அய்யனாரை ஒரு குடும்பத்தினர் பூஜித்து வந்தனர். அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் இருவர். மூத்தவர் காரிவேளார். இளையவர் கருப்ப வேளார். இருவரும் முறை போட்டு அந்த கோயிலின் பூஜையை செய்து வந்தனர்.
ஒரு முறை அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் காரிவேளார் கேரளா சென்று மாந்திரீக வித்தைகளை கற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். தான் கற்ற வித்தைகளை நடத்த சில தேவதைகளை பயன்படுத்தினார்.
இவர் அய்யனாருக்கு பூஜை செய்து வரும் காலங்களில் சன்னதிக்கு முன் மணல் பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. இது யாவும் காளிக்கு உரியது என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில் காளியை பிரதிஷ்டை செய்தார். இவர் தோற்றுவித்ததே வெட்டுடையாா் காளியம்மன்.
ஈசச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காரணத்தால் அய்யனாருக்கு வெட்டுடையாா் அய்யனார் என்றும், காளிக்கு வெட்டுடையாா் காளி என்றும் பெயர் வந்தது.
நேர்த்திக் கடன் :
பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.
திறக்கும் நேரம் :
காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும். பௌணர்மி நாட்களில் இரவு 10.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
கூடுதல் பிரார்த்தனை :
ஒன்றுக்கும் இல்லாத சிறிய விஷயம், தானே பெரியவர் என்ற குணத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதான தலம் இது. பிரச்சினையால் பிரிந்து விட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு கூடுதல் வழிபாடு என்னும் பிராத்தனை செய்கின்றனர்.
பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின் பிரச்சினை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் அம்பிகை முன் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.
சிறப்பம்சம் :
அதிசயத்தின் அடிப்படையில்: கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலது கையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடது காலை தொங்க விட்டு அமர்ந்துள்ளாள்.
இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது.
காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.
திருக்கோயில்:- சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கையில் இருந்து 13 கி.மீட்டர் தூரத்தில் தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தில் இருந்து தெற்கே 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அரியாகுறிச்சி என்ற இடத்தில் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
அருகில் உள்ள பேருந்து நிலையம்:-
சிவகங்கை - திருக்கோயிலிலிருந்து 15 கி.மீட்டர்.
காளையார்கோயில் - திருக்கோயிலிலிருந்து 7 கி.மீட்டர்.
அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் :-
சிவகங்கை - திருக்கோயிலிலிருந்து 15 கி.மீட்டர்.
அருகில் உள்ள விமானம் நிலையம்:-
மதுரை - திருக்கோயிலிலிருந்து 85 கி.மீட்டர்.
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!