பணக்கார கடவுள் என சொல்லப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்தது குபேரர் தான்.
திருப்பதி கோவிலில் உள்ள குபேர கிணற்றின் மகிமையால் தான் திருப்பதி கோவில் உண்டியலில் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட குபேரரின் அருள் இருந்தால் நம்முடைய வீட்டிலும் செல்வம் செழிக்கும்.
செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரனுக்கு பல்வேறு பெயர்கள் இருந்தாலும் அவரை நினைவூட்டுவது என்னவோ அவர் கையில் வைத்திருக்கும் பணம் தான். பணம், பொருள், நகைகள் போன்ற அத்தனை செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய குபேரனுக்கு உகந்த கிழமை வியாழக்கிழமை ஆகும்.
வெள்ளிக்கிழமையில் எப்படி மகாலட்சுமியை வேண்டி வழிபடுகிறோமோ, அதேபோல வியாழக்கிழமையில் குபேர வழிபாடு செய்வது சிறப்பு.
குபேரர் செல்வத்தின் கடவுள் என்பதால், அவரை வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும், பணத்தட்டுப்பாடு நீங்கும் என்பது நம்பிக்கை.
குபேர விளக்கு பூஜை வழிபாடு :
வியாழக்கிழமையன்று காலை குளித்து முடித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும்.
வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.
விளக்கு ஏற்றும் போது வீட்டு வாசலின் இடது புறத்தை சுத்தம் செய்து, குபேர விளக்கை வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, ஐந்து கற்கண்டுளை சேர்த்து விளக்கு ஏற்றவும்.
பின்னர் வீட்டில் எப்போதும் விளக்கேற்றும் பூஜை அறையில் குபேரன் படத்தை வைத்து, தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
இந்த குபேர தீபத்தை குபேரன் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டே ஏற்றலாம்.
'குபேரன் காயத்ரி மந்திரம்
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி!
தந்நோ குபேர ப்ரசோதயாத்'
நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே குபேர பூஜையின் பொழுது கட்டாயம் நெல்லிக்கனியை வைத்து வழிபட வேண்டும் என்பது சிறப்பிற்குரியது.
பிறகு அவலுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஏனென்றால் குபேரருக்கு மிகவும் பிடித்த உணவு அவல் ஆகும்.
இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குபேரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று இந்த விளக்கு பூஜையை நாம் செய்ய வேண்டும்.
எனவே இந்த சிறப்பு மிக்க பூஜையை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று குபேர காலமான மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செய்யவும். வாரம் ஒரு முறை இந்த பூஜையை தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். அந்த அளவிற்கு இந்த பூஜை உங்களுக்கு நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும்.
குபேர விளக்கை தினமும் பூஜை அறையில் ஏற்றி வரலாம். குபேரருக்கு உகந்த திசை வடக்கு. ஆகையால் பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும்
குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்க, பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு மற்றும் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்க வியாழனில் குபேர வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.
வீட்டில் குபேரர் சிலையை எந்த பக்கம் வைக்க வேண்டும்?
குபேரர் செல்வத்திற்கு அதிபதி. இவர் வடக்கு திசைக்கு உரிய காவல் தெய்வம் ஆவார். இவர் வடக்கு திசையில் இருந்து உலகை பாதுகாக்கிறார். இவர் பூமியில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்திற்கும் அதிபதி. இவர் பிரம்மாவின் பேரனான விச்வரஸ் என்பவருக்கு மகனாக பிறந்தவர்.
வடக்கு திசையானது குபேரனுக்காக இருப்பதால் வீடுகளில் பணம் அல்லது நகைகள் வைக்கும் பெட்டி அல்லது 'பீரோ' வடக்கு திசை பார்த்து திறப்பது போல இருக்கவேண்டும்.
தென்கிழக்கு பகுதியில் உள்ள அறை அல்லது மற்ற அறைகளில் உள்ள தென்கிழக்கு மூலையில் பணம் அல்லது நகைப்பெட்டியை வைக்க கூடாது.
அக்னி பாகம் தவிர மற்ற அறைகளில் பணம் வைக்கும் 'பீரோவை' வைப்பதென்றால், அதன் தென்மேற்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கியபடி வைக்க வேண்டும்.
குபேரரின் திசையான வடக்கு திசையில் குபேர சிலையை வைத்து வழிபடுவது மேலும் செல்வம் சேர வழிவகுக்கும்.
குபேர வழிபாட்டின் பலன்கள்:
குபேரரின் அருளால் வீட்டில் பணம், பொருள், நகைகள் போன்ற செல்வங்கள் பெருகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கடன் பிரச்சனைகள் நீங்கி பண வரவு அதிகரிக்கும்.
மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
மன அமைதி மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.
செய்கின்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும்.