செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் லட்சுமி குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர்.
அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். தாமரை மலர் ஏந்தி, வரத முத்திரை காட்டி, வருபவர்களை செல்வச் செழிப்பாக மாற்றுபவர். வெண் குதிரை இவரது வாகனம். இவரது மடி மீது கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும்.
ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.
மனைவி சித்திரரேகையோடு இணைந்து அன்பர்களுக்கு அருளாசி வழங்குபவர். நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் குபேரனுக்கு இருக்கிறார்கள்.
சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக இவர் வர்ணிக்கப்படுகிறார். பத்ம நிதி, மஹாபத்ம நிதி, மகர நிதி, கச்சப நிதி, குமுத நிதி, நந்த நிதி, சங்க நிதி, நீலம நிதி, பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர். இதில் பதும நிதி, சங்க நிதி ஆகிய தெய்வ மகளிரின் கணவரும் இவர்தான்.
ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம் ஸ்ரீம் கும் குபேராய நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ!
குபேரன் தோன்றிய நாள்: வியாழக்கிழமை
ஜனன நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம்
குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
பிடித்த நைவேத்தியம்: ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த பால், வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகள்.
இந்தியாவில் குபேர விக்ரகம் உள்ள இடம்: நாசிக்
தமிழகத்தில் குபேர விக்ரகம் உள்ள இடம்: மதுரையிலுள்ள திருமங்கலத்தில்தான் முனீஸ்வரர் கோயிலில் குபேர விக்ரகம் தனியாக உள்ளது.
தனிக்கோயில்: சென்னை அருகே,வண்டலூரில் இரத்தின மங்களத்தில் குபேரருக்கென்றே பிரத்தியேகமாக கோயில் அமைந்துள்ளது மேலும் பிள்ளையார் பட்டி அருகிலும் தனிக்கோவில் உள்ளது.
குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்கு நோக்கி வைப்பது சிறப்பு. குபேரரின் அருளால் தொழிலில் லாபமும், செல்வ வளமும் பெருகும். புதன்கிழமை சிறப்பானது. பச்சை நிறம், பாசிப்பயறு குபேரனுக்கு பிடித்தமானது.
குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வ செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துகளை கீரி விரட்டுவது போல, பணகஷ்டத்தால் நமக்கு வரும் இடையூறுகளை நீக்குவதை குறிக்கும் விதத்தில் கீரியை தாங்கியிருக்கிறார் குபேரர்.
சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழைகளால் ஆன அவலை குபேரர் விரும்பி சாப்பிடுவதாக ஐதீகம்.
லட்சுமி குபேரர் படத்துடன் குபேர யந்திரத்துடன் 48 நாட்கள் பூஜிக்க செல்வம் பெருகும். பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். பணம் பெட்டியில் மளமளவென பெருகுவதைக் காணலாம்.
லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும்.
லட்சுமி குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப் பாடு இருக்காது.வட இந்தியாவில், தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.
எந்த பூஜை செய்தாலும், முதலில் வீடு, வாசலை சுத்தம் செய்ய வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு, பூஜையறையில் குபேரர் கோலமிடவேண்டும்.மஞ்சள் பிள்ளையார் மற்றும் குலதெய்வத்தை மனதார வேண்டி, பூஜையில் ஆவாகனம் செய்வது மிக முக்கியம். பிள்ளையாரின் மூல மந்திரம் மற்றும் அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டபிறகு, குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும். சாதாரணமாக வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
இப்படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.
பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியது தான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும்.
அதன்பின் குபேர மந்திரங்கள் (அ) “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.
பூஜையில் லட்சுமி குபேரரின் திருவருளால் அனைத்து செல்வங்களும்- அதாவது தனம், தான்யம், மக்கட்செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத் தையும் பெறவேண்டுமென சங்கல்பம் செய்யவேண்டும்.
இதைத்தொடர்ந்து, குபேரனுக்கும் கலசத்துக்கும் உதிரிப் பூக்களைப் போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும், வாழைப்பழம், காய்ச்சிய பசுப்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்தியம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை மஞ்சள் துணியில் முடிந்து பணப் பெட்டி அல்லது மணிப் பர்ஸில் வைப்பது சிறப்பு.
இந்த பூஜை மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளித் திருநாளில் நமது இல்லம் தேடிவருவதாக ஐதீகம்.
எனவே, தீபாவளியன்று மாலை 6.00 மணிக்கு முன்பே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது. ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளின் பிரதோஷ வேளையி லும், கோதூளி லக்ன காலத்திலும் செய்ய வேண்டும். சூரியனும் சந்திரனும் இணையும் அமாவாசைத் திதியில் துலா மாதத்தில் லட்சுமி குபேரனை வழிபாடு செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.
பூஜை முடிவில் ஆரத்தி எடுக்கையில்-
"ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே
நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே
ஸமேகமான் காம காமாய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவனோ ததாது
குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:'
என்னும் மந்திரத்தைக்கூறி வழிபட, பூஜைப் பலன் எளிதில் வசப்படும்.
பின் நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள் வைக்கப்பட வேண்டும். அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம்.
சிலர் தாம்பூலங்களையும், காசுகளையும் தானமாக வழங்கிடுவர். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்.
குபேரனின் அருள் பெற்றால் நல்ல மனோபலம், செல்வம், வளம், வியாபாரத்தில் லாபம் என்று பல நன்மைகள் கிடைக்கப் பெறுவோம்.