Breaking News :

Saturday, April 12
.

அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில், நன்னிலம்


இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவாரூரில் இருந்து நன்னிலம் ஆலயம் செல்லும் வழி வரைபடம்

கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏற முடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோவிலும் அத்தகைய ஒரு மாடக் கோவில். சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை பெருங்கோயில் என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்துப் பாடியுள்ளார். தனது பதிகத்தின் கடைசி பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது எனபதையும் குறிப்பிட்டுள்ளார்.

கோவில் அமைப்பு : முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோவில் 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்டது. கோவிலின் இராஜகோபுரம் 2 நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து வெளிப் பிரகாரத்தை அடையலாம். நேர் எதிரில் பிரமன் வழிபட்பிரம்ம்புரீஸ்வரர் சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இந்த பிரகாரம் வலம் வரும்போது சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. நன்னிலத்து துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறாள்.

மூலவர் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. படிகளேறி மேலே செல்லவேண்டும். கட்டுமலை மீதுள்ள பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாகவுள்ளது. மூலவர் மதுவனேஸ்வரர் சதுர ஆவுடையார் மீது சற்றுயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. விசேஷ காலங்களில் குவளை, நாகாபரணம் சார்த்தப்படுகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளார்கள். இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

பிருஹத்ராஜனின் கோரிக்கைக்கு இணங்கி, சிவபெருமான் ஆலயத்தின் வடக்கே தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினாராம். இது சூலதீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மது தீர்த்தம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜலந்திரன் என்ற அசுரனை எம்பெருமான் வதம் செய்தபோது வீசிய சக்கரம், இத்தலத்தினருகில் விழுந்ததாம். அங்கு உருவான தீர்த்தம் சக்கரக்குளம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இது ஆலயத்தின் கிழக்கே சற்று தொலைவில் உள்ளது.
தல வரலாறு: துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.

அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச் செய்து லிங்க வழிபாடு செய்யும்படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் "மதுவனேஸ்வரர்" என்றும் அம்மன் "மதுவன நாயகி"' என்றும் பெயர் பெற்றனர். தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் மதுவனம் என்று பெயர் பெற்றது. இப்போதும் சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.

ஒருசமயம் தேவர்களின் சபையில் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். வாயுபகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். வாயு பகவான் மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்துச் செல்லும் போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாக தல புராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610105

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.