மகா சிவராத்திரி. எத்தனையோ இரவுகள் இருக்க ஒரு குறிப்பிட்ட இரவு மட்டும் சிவனுக்கு உகந்ததாக ஏன் ஆனது? அதுவும் மாசி மாத சதுர்த்தசி இரவு மட்டும் ஏன் மகாசிவராத்திரி ஆனது? என்று நம் மனதில் பல யோசனைகள் எழும்.
சக்திக்கு ஒன்பது ராத்திரி... அது நவராத்திரி... சிவனுக்கு ஒரு ராத்திரி... அது சிவராத்திரி... சிவராத்திரி என்பதற்கு 'சிவனுக்கு உகந்த இரவு' என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது.
சிவனுக்கு உகந்த இரவு என்று சொல்லக்கூடிய சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்கிறார்கள்.
சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திர தோஷம், திருமணத்தடை என அனைத்து துன்பங்களும் நீங்கும்.
சிவராத்திரி அன்று கண் விழிப்பது ஏன்?
அன்னையானவள் சிவபெருமானிடம், சிவராத்திரியன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை (சிவனை) பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும், மோட்சங்களையும் அளிக்க வேண்டும், அருள் புரியுங்கள் என்று வேண்டிக் கொண்டாள்.
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள்புரிந்தார். அந்த இரவே 'சிவராத்திரி' என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
எனவே சிவராத்திரியன்று சரியான முறையில் கண் விழித்து இருப்பது நன்மை பயக்கும்.
சிவராத்திரி இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும்.
அதன்பின் தீட்சை தந்த குருவை பூஜை செய்துவிட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணருக்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
கண் விழித்தலின் புண்ணியம் :
அறிந்தோ அறியாமலோ கூட ஒருவர் சிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிடைக்கும்.
மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களிலோ, மற்ற கோயில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டும், தான தர்மங்கள் செய்தும், சிவபெருமானின் புகழ் பாடியும் புண்ணியம் அடையலாம்.
சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாம பூஜை வழிபாடுகளின்போது லிங்க தரிசனம் செய்தால் நன்மை உண்டாகும்.
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். மேலும் நினைத்த காரியங்கள் நடக்கும்.
மகாசிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படும்.
நான்கு ஜாம பூஜைகள் :
முதல் கால பூஜை (6PM-9PM) :
முதல் கால பூஜை பிரம்மன், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் உடலில் இருந்த பிரச்சனைகள் பூரணமாக குணமாகும்.
இந்தக்கால பூஜையில் சிவபெருமானுக்கு பஞ்சகவ்யத்தால் (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம்) அபிஷேகம் செய்து, சந்தனம் பூசி, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து, வில்வ இலை மற்றும் தாமரைப்பூவால் அலங்காரம் செய்து, பாசிப்பருப்பு பொங்கலை நிவேதனமாக படைத்து, ரிக்வேதம் மற்றும் சிவபுராணத்தை பாராயணம் செய்து நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும்.
இரண்டாவது கால பூஜை (9PM-12AM) :
இரண்டாவது கால பூஜை திருவடி தேடி சென்ற பரம்பொருள் விஷ்ணு அவர்களால் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும், செல்வம் பெருகும், திருமாலின் அருள் கிடைக்கும்.
இந்த காலத்தில் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், பச்சைக்கற்பூரம் மற்றும் பன்னீர் சேர்த்து அரைத்து பூசி, வெண்பட்டாடை அணிவித்து அலங்காரம் செய்தும், வில்வ இலை, துளசியால் அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசத்தை நிவேதனமாக படைத்து, யஜூர் வேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் கீர்த்தி திருவகவலை பாராயணம் செய்தும் நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை நடைபெறும்.
மூன்றாவது கால பூஜை (12AM-3AM) :
மூன்றாம் கால பூஜை என்பது அம்பாள் அவர்கள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் சிவபெருமானுக்கு விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை நெருங்காது.
மேலும், இந்த காலத்தில் சிவபெருமானுக்கு தேனால் அபிஷேகம் செய்தும், பச்சைக்கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதிமல்லி பூவினை கொண்டு அர்ச்சனைகள் செய்தும், கற்கண்டு சாதத்தை நிவேதனமாக படைத்தும், சாமவேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் திருவண்டகப் பகுதியை பாராயணம் செய்தும் நெய் தீபத்துடன் பூஜை நடைபெறும்.
நான்காவது கால பூஜை (3AM-6AM) :
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் என அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பது நான்காவது கால பூஜையாகும்.
இந்த காலத்தில் சிவபெருமானுக்கு குங்குமப்பூ சாற்றி, கரும்புச்சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், பச்சை அல்லது நீல வண்ண வஸ்திரம் அணிவித்தும், நந்தியாவட்டை பூவால் அலங்காரம் செய்தும், சுத்தமான அன்னத்தை நிவேதனம் படைத்து, அதர்வண வேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் போற்றி திருவகவலை பாராயணம் செய்தும் தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும்.
மகாசிவராத்திரி விரதமுறை :
சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.
விரதம் மேற்கொள்ளும்போது உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். சில கோயில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருப்பார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும்போது தான் எளிதாக வசப்படும். நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காக தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டற கலந்து நிற்க வேண்டும்.
மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்து கொள்ளலாம்.
சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவனை வழிபடும்போது சிவாயநம என உச்சரிக்க வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. முடியாதவர்கள் எளிய உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும் முறை :
வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவங்க வேண்டும்.
மாலை 6.00, இரவு 9.00, நள்ளிரவு 12.00, அதிகாலை 3.00 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாயநம நமசிவாய என மந்திரத்தை சொல்லலாம்.
சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம்.
வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிக்கலாம் அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.
மகாசிவராத்திரி மகத்துவங்கள் :
சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.
சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.
மகாசிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கி ஆலயத்திற்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.
சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனையும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனையும் தரவல்லது.
சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மையை தரும்.
சிவனுக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு :
சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாற்றினால் சிவலோக பதவியும், இரண்டு சாற்றினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். மூன்று சாற்றினால் அவனின் அருள் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாற்றினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பது ஐதீகம்.
பாவங்களை போக்கி புண்ணியங்களை தருவது வில்வம் ஆகும். அஞ்ஞானத்தை வளர்ப்பது வில்வம் ஆகும். வில்வ தழையினால் அர்ச்சனை செய்யும் போது சிவபெருமான் மனம் மகிழ்ந்து சுகம், ஐஸ்வர்யம், புலன்ஒழுக்கம், சந்தானம், வேத, ஆகம, சாஸ்திரஞானம் இவற்றை எல்லாம் அருள்கின்றார்.
வில்வ தழையினால் அர்ச்சனை செய்பவருக்கு கிட்டாத பலன் எதுவுமே கிடையாது. சதுர்த்தி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, திங்கட்கிழமை, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வில்வ இலைகளை பறிக்கக்கூடாது. பிற நாட்களில் தூய்மையாக பறித்து ஓலைக் கூடையில் வைக்க வேண்டும்.
வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இலைகளையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ இலைகளும் உள்ளன.
பூஜைக்குப் பயன்படுத்துகின்ற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்வது உத்தமம்.
தினமும் சிவனாருக்கு வில்வம் சாற்றி வழிபடுவது சிறப்பு. மகாசிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சாற்றி சிவனாரை தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!