(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச
.ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)
கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர்,
ஒரு சமயம் மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக வந்திருந்தார்.
அவர் யார்? எங்கேயிருந்து வரார்ங்கறதெல்லாம் தெரியாது.
ஏன்னா,
அவர் மடத்துக்கு அடிக்கடி வர்ற ஆசாமி இல்லை.
அவர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்ததுகூட ஏதோ
வேலையா மடத்துப் பக்கமா வந்தவர், அப்படியே எட்டிப்
பார்த்துட்டுப் போகலாமேன்னுதான். வந்தவர் வரிசையில்
நின்னார்.
தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு
நமஸ்காரம் பண்ணினார்.
எல்லாம் கடனேன்னு செய்யறமாதிரிதான் இருந்தது.
நமஸ்காரம் செஞ்சவர் எழுந்திருந்ததும் பெரியவா
அவரைப் பார்த்து, " என்ன சுவாமியெல்லாம் திட்டறதுல
இருந்து ஒருவழியா ஓய்ஞ்சுட்டே போல இருக்கு.
திட்டியும் பிரயோஜன மில்லைன்னு தோணிடுத்து.
அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக்கூட
நிறுத்திட்டே இல்லையா?" அப்படின்னு கேட்டார்.
வந்தவருக்கு அதிர்ச்சி. அதோட 'என்னடா இது,
நாம எதுவுமே சொல்லலை.
ஆனா எல்லாத்தையும்
பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி பரமாசார்யா
சொல்றாரே!'ன்னு ஆச்சரியம்.
"பெரியவா!
குடும்பம் நடத்தறதே ரொம்ப கஷ்டமான
ஜீவனமாயிடுத்து.சரியா வேலையும் கிடைக்கிறதில்லை.
பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும்
இல்லைன்னு புரிஞ்சுடுத்து.
மத்தவாளுக்கெல்லாம்
கேட்கறதுக்கு முன்னாலேயே குடுக்கிற சுவாமி எனக்கு
மட்டும் ஏன் இப்படிப் பண்றார்.? அதான் எல்லாத்தையும்
நிறுத்திட்டேன்" கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா
சொன்னார் அவர்.
பரிவோட அவரைப் பார்த்தார் பரமாசார்யா.
" ஒரு விஷயம் கேட்கிறேன்.
கரெக்டா யோசிச்சு சொல்லு.
ஒரு ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள்வருவா.
சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும்.
சிலருக்கு பல்வலி
இவாள்லாம் அங்கே வந்திருக்கறச்சே,
பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைக்
கூட்டிண்டு வருவா.
மாடியில் இருந்து விழுந்து நினைவு தப்பிடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா.
இந்தமாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் எல்லாம்
என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை
பண்ணணுமோ, யாருக்கு சட்டுன்னு சிகிச்சை
பண்ணலைன்னா அப்பறம் அது பிரயோஜனப்படாதோ,
யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவாளைப் பார்க்க
போயிடுவா.அதுக்காக சாதரண காய்ச்சல்னோ,
தலைவலின்னோ வந்தவாளை டாக்டர்கள் எல்லாம்
அலட்சியப் படுத்தறாங்கறது அர்த்தம் இல்லை.
அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை
தந்துக்கலாம்.பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது.
ஆனா,
பாம்புக்கடி பட்டவருக்கோ,
விபத்துல
சிக்கினவாளுக்கோ உடனடியா மருத்துவம் பார்த்தாகணும்.
சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே
யாருக்கு எப்போ உதவணும்கறது தெரியறதுன்னா,
பிறவிப்பிணிக்கே சிகிச்சை பண்ணி, அதனால் வரக்கூடிய
சங்கடங்களை போக்கக்கூடிய பகவானுக்கு
யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்னு தெரியாதா?
உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம்
தாமதமாறதுன்னா உன்னைவிட அதிகமா அவஸ்தைப்
பட்டுண்டு இருக்கிற யாருக்கோ உதவறதுக்காக சுவாமி
ஓடியிருக்கார்னு அர்த்தம்.
அந்த வேலை முடிஞ்சதும்
அவசியம் உனக்கும் அனுக்ரஹம் பண்ணுவார்.
அதுக்குள்ளே அவசரப்பட்டு, தெய்வத்தை நிந்திக்கிறதும்
பூஜை புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகமா
பேசறதும் தப்பு இல்லையா?"
பெரியவா சொல்லச்சொல்ல, கடவுளைப்பத்தி தப்பா
நினைச்சதும் பேசினதும் தப்புன்னு புரிஞ்சண்டதுக்கு
அடையாளமா அந்த ஆசாமியோட கண்ணுல இருந்து
தாரைதாரையா நீர் வடிஞ்சுது.
அதுவே அவரோட
தவறானஎண்ணத்தை அலம்பித் தள்ளி அவரோட மனசை
சுத்தப்படுத்தி
யிருக்கும்கறது
நிச்சயம்.
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகானை
பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும்
நமஸ்காரம் செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.
அவருக்கு மட்டுமல்லாம அன்னிக்கு ஆசார்யா
தரிசனத்துக்கு வந்தவா எல்லாருக்குமே-
இது
பரமாசார்யா நடத்தின பாடமாகவே அமைஞ்சதுன்னுதான்சொல்லணும்.
ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர..
ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர..