Breaking News :

Friday, March 14
.

மலையப்பனிடம் வேண்டி ஆழ்வார் விண்ணப்பித்த பாடல்?


“உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே
குலதொல் அடியேன் உன்பாதம் கூடுமாறு கூறாயே”

“ஊழிக் காலத்தில் உலகங்களை எல்லாம் உண்ட பெரிய திருவாயை உடையவனே!
முடிவில்லாத புகழ் உடையவனே! உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒளிமிக்க திருமேனி கொண்டவனே! மிகப்பெரியவனே!

எனது உயிரானவனே! உலகுக்கே திலகமாய்த் திகழும் திருமலையில் கோவில்கொண்ட எம்பெருமானே!

பரம்பரை பரம்பரையாக உனக்கு அடிமைப்பட்டு இருக்கும் அடியேன், உன் திருவடிகளை அடைந்து முக்தி பெறும்படி

நீயே அருள்புரிய வேண்டும்!” என்பது இப்பாடலின் பொருள்.

இப்பாடலைக் கேட்ட மலையப்பன், ஆழ்வாரைப் பார்த்து, “நீங்கள் சரணம் என்று சொல்லிக் கொண்டு வந்தவுடன்

நான் ஏற்று அருள்புரிய வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லையே!” என்று தெரிவித்தான்.
அதற்கு ஆழ்வார், “நீ அப்படிச் சொல்ல முடியாது!” என்றார்.

“ஏன்?” என்று இறைவன் கேட்க,
“என் பாடலை நன்றாகக் கவனித்துப் பார்! ‘உலகம் உண்ட பெருவாயா’ என்று தொடங்கி இருக்கிறேன் அல்லவா?

அதாவது, ஊழிக் காலத்தில் பிரளய வெள்ளத்திலிருந்து உலகங்களையும் உயிர்களையும் காக்க வேண்டும்.

என்பதற்காகத் தானே ஆலிலைக் கண்ணனாக அவதாரம் செய்து, உலகங்களையும் உயிர்களையும் எல்லாம் உண்டு.

உனது வயிற்றில் வைத்து நீ காப்பாற்றினாய்? அதனால்தான் உன்னை உலகமுண்ட பெருவாயா என்றழைத்தேன்!” என்றார் ஆழ்வார்.

“அன்று ஆலிலைக் கண்ணனாக வந்து உலகங்களை உண்டு வயிற்றில் வைத்துக் காத்ததற்கும்,
இன்று திருமலையப்பனாக நின்று நான் உங்களைக் காப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் மலையப்பன்.

அதற்கு ஆழ்வார், “உலகுக்கே ஊழி வெள்ளத்தால் ஆபத்து வரும் போது அதைப் போக்கவல்லவனாக நீ இருக்கும்போது,

உலகில் வாழும் ஒற்றை மனிதனான எனக்கு வரும் ஆபத்தைப் போக்கும் வல்லமை உனக்கு நிச்சயமாக உண்டு என்றுதானே பொருள்?

ஊழி வெள்ளத்தில் அழுந்துவோரைக் காக்கும் நீ பிறவிப் பெருங்கடலில் அழுந்தித் தவிக்கும் என்னையும் காப்பாற்றித் தானே தீர வேண்டும்?

ஊழிக் காலத்தில் யாரும் உன்னிடம் காப்பாற்றும்படிக் கேட்காதபோதே நீ காப்பாற்றினாய்.
இன்று நீ காக்க வேண்டும் என்று

நான் கதறிக் கொண்டிருக்கையில் நீ காப்பாற்றாமல் கைவிட முடியுமா?
ஊழிக் காலத்தில் மக்களின் உடலுக்கு வந்த ஆபத்தைப் போக்கிய நீ, இப்போது பிறவிப் பிணியால் என் ஆத்மாவுக்கு

வந்த ஆபத்தைப் போக்க வேண்டாமா? இதை எல்லாம் உனக்கு நினைவூட்டவே நீ உலகம் உண்ட வரலாற்றைச் சொன்னேன்!” என்றார்.

ஆழ்வாரின் விளக்கங்களைக் கேட்டு மகிழ்ந்த திருமலையப்பன், “நீங்கள் கேட்டபடி நிச்சயமாக உங்களுக்கு முக்தியை அருள்கிறேன்.

ஆனால் நீங்கள் தொடங்கிய திருவாய்மொழி என்னும் பிரபந்தத்தில் இதுவரை 600 பாடல்கள் பாடி விட்டீர்கள்.

மேற்கொண்டு 400 பாடல்கள் பாடி ஆயிரம் பாடல்களையும் நிறைவு செய்தவுடன் உங்களை முக்திக்கு அழைத்துச் செல்கிறேன்!” என்று விடையளித்து அருள்புரிந்தார்.

எனவே, ‘உலகம் உண்ட பெருவாயா’ என்ற நம்மாழ்வாரின் பாடலில் இருந்து அனைத்து உலகங்களையும் காக்க வேண்டும் என்ற நோக்கில் ஊழிக் காலத்தில் அவற்றை உண்டு தன் வயிற்றில் திருமால் வைத்துக் கொண்டார் என்பதை நாம் அறிய முடிகிறதல்லவா?

இதே கருத்தைக் கடோபநிஷத்,
“யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதன:ம்ருத்யு: யஸ்ய உபஸேசனம் க இத்தா வேத யத்ர ஸ:”என்று சொல்கிறது.

உலகை எல்லாம் தனக்கு உணவாகவும், யமனை ஊறுகாயாகவும் கொண்டிருக்கிறார் திருமால். ஊறுகாயைத் தொட்டுத் தொட்டு
உணவை உட்கொள்வது போல், யமன் என்னும் ஊறுகாயை வைத்து, திருமால் உலகையே உண்டுவிடுகிறார் என்பது இதன் பொருள்.

அவ்வாறு உண்ட உலகங்களைத் தனது வயிற்றில் வைத்துக் காக்கிறார் திருமால்.
‘அசன’ என்றால் உணவு என்று பொருள். ‘மஹாசன:’ என்றால் பெரிய உணவு என்று பொருள்.

ஊழிக் காலத்தில் ஆலிலைக் கண்ணனாக வந்து ஒட்டு மொத்த உலகங்களையுமே தனக்கு உணவாகக் கொண்டு உண்டபடியால்,
திருமால் ‘மஹாசன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 304-வது திருநாமம்.

இங்கே ‘மஹாசன:’ என்பதற்கு மிகப்பெரிய உணவை உண்டவர் என்று பொருள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.