Breaking News :

Thursday, November 21
.

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்


நந்தி தேவர் அவதரித்த ஸ்ரீசைலம் ஸ்ரீமல்லிகார்ஜுனர் ஜோதிர்லிங்க திருக்கோயில் பற்றிய விரிவான தகவல்கள் சிறப்பு தொகுப்பு!!

 

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றானதும் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றானதும், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் உள்ள திருப்பருப்பதம் என்ற ஸ்ரீசைலம் ஸ்ரீமல்லிகார்ஜுனர், ஸ்ரீபிரம்மராம்பாள் திருக்கோயில் பற்றிய சிறப்பு தொகுப்பு!!

 

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில்) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது.

 

ஸ்ரீசைலம் என்றும் அழைக்கப்படும் இது ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமிக்காக அமைக்கப்பட்டது. இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

 

மேலும் இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சன்னதி 51 சக்தி பீடங்களில் மற்றும் 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது.

 

மூலவர்: மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்).

 

அம்மன்: பிரமராம்பாள், பருப்பநாயகி

 

தல விருட்சம்: மருதமரம், திரிபலா

 

தீர்த்தம்: பாலாநதி

 

புராண பெயர்: திருப்பருப்பதம்

 

ஊர்: ஸ்ரீசைலம்

 

மாவட்டம்: கர்நூல்

 

மாநிலம்: ஆந்திர பிரதேசம்

 

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி,சேக்கிழார் முதலியோர்

 

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்.

 

தேவாரப் பதிகம்!

 

"சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.

 

-திருஞானசம்பந்தர்

 

தேவாரப் பாடல் பெற்ற வடநாட்டுத் தலங்களில் ஒன்று.

 

தல வரலாறு:

 

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்.

 

சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,””தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,”என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த “நந்தியால்’ என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.

 

சந்திரவதி என்னும் பெண் அடியவர், மல்லிகை மலர்களைக் கொண்டு இப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மல்லிகார்ச்சுனர் என்று பெயர் பெற்றார்.

 

பொது தகவல்:

 

கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.

 

ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு விருந்தாகின்றது.

 

ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன. தெற்கு வாயில் கோபுரம் “ரங்க மண்டபம்’ எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் உள்ளன.

 

மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். அடர்ந்த காட்டுப்பகுதியாக இம்மலை இருப்பதால், தனியார் வாகனங்கள் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை செல்ல அனுமதி கிடையாது. அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். திங்கள், வெள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது.

 

சனகல பசவண்ணா நந்தி: இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

சாட்சி கணபதி: ஸ்ரீசைல சிகரத்திற்கு 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹா விஷ்ணுவானவர், விநாயகரின் உருவத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காணவரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள், யார் இல்லாதவர்கள் என கைலாசத்தில் (ஸ்ரீ சைலத்தில்) உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவரை சாட்சி கணபதி என்பர். எனவே பக்தர்கள் தமக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று கருதி தத்தம் கோத்திரங்களை கூறி சாட்சி கணபதியை வணங்கிய பின் பக்தியுடன் ஸ்ரீ சைலம் வாயில் நுழைகின்றனர்.

 

தலபெருமை:

 

மல்லிகார்ஜுனர்: மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்’ எனப்படுகிறார்.

 

சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது, அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி, அரசனை வீர சிவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு, அவனை சந்திக்கச் சென்றாள் . அரசனின் தவறான செய்கையால் மனம் நொந்து, தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள். ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்க மகா தேவியின் திருவுருவச் சிலை பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.

 

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ராமாபுரம் என்ற ஊரில் 14 ம் நூற்றாண்டில் வசித்து வந்த நாகி ரெட்டி- கௌரம்மாள் இருவரும் பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ சைலம் வந்தனர். இறைவனருளால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை மல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். வயது வந்தவுடன் அவளை ,அருகிலுள்ள சித்தாபுரத்தைச் சேர்ந்த பரமா ரெட்டி என்பவனுக்கு மணம் செய்து வைத்தனர். புகுந்த வீட்டுக்கு மல்லம்மா வந்தவுடன் அங்கு பசுக்களும் விளைச்சலும் பல மடங்கு அதிகரித்தன. ஏழைகளுக்கு மல்லம்மா உதவி செய்து வந்தாள்.

 

இதைக் கண்டு பொறாமை கொண்ட உற்றார் உறவினர்கள், அவளது கணவனிடம் சென்று வீண் பழி சுமத்தி அவனைக் கோபமுறச் செய்தார்கள். அதை உண்மை என நம்பிய கணவனும், மல்லம்மாவைக் கொன்று விட நினைத்து அவளிடம் சென்றான். ஆனால் அவளோ மெய் மறந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு தனது செயலுக்கு வருந்தினான். மல்லம்மாவும், தவறு செய்த அனைவரையும் மன்னித்து, அனைவருக்கும் சிவ மகிமையைப் போதித்து, கடைசியில் பெருமானுடன் ஐக்கியம் ஆனாள். ஸ்ரீ சைல ஆலயத்தில் பின் பிராகாரத்தில் மல்லமாவின் பசுத் தொழுவம் இருக்கிறது. அருகில் மல்லம்மாவின் விக்கிரகமும் இருக்கிறது.

 

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் - சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குலகுருவான ரேவண சித்தர் ஒருநாரத்தம் பழத்தைக் கொடுத்து, சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா எனப் பெயரிட்டனர். அச் சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித் தன் பெயர் மல்லையா என்றும் தான் மிகவும் பசியோடு இருப்பதாகவும் கூறவே, ஸித்தப்பா ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான்.

 

மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது, அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி, " இவரே மல்லையா " என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்தபோது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் , ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது. பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா , அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் , தான் வெட்டியகுளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டது.

 

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம் பாலித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விடவே, சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி, "அஞ்சாதே, உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக " என்று அருளினார். வீட்டிற்குள் சென்ற கேசப்பா, பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு, திருவருளை வியந்தவனாக, அடியார்களுக்கு அன்னம் பாலித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம், அடிகேச்வரம் எனப்படுகிறது.

 

ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ஒரு கயிற்றைக் கொடுத்து, அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். துயில் நீங்கிக் கயிற்றைக் கண்ட சிற்பி, அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது, ஒரு நந்தி பாறைகளிடையே சிக்கவே, திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான் என்று சொல்வார்கள். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம் அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.

 

சிறப்பம்சம்:

 

பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.

 

ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார்.

 

நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

 

மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரீசைலம் – பக்தி ஞானம் உலகப்பற்றின்மை ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது. ஸ்ரீசைலம் வேதாந்திகள், பரமயோகிகள், சித்தி பெற்ற புருஷர்கள், மகாதவசிகள், இருக்கும் தவஸ்தலமே இப்புண்ணிய ஷேத்திரம் இதற்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு.

 

கிருதாயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும், ஆதிசங்கரரும், பூஜைகள் செய்த புண்ணிய ஷேத்திரம்.

 

ஸ்ரீசைல சிகரத்தை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை. இந்த புண்ணிய தலத்திற்கு ஈடானது எங்கும் என்றும் இல்லையென இதன் புகழ் பரவிக்கிடக்கின்றது.

 

ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீ கிரி, ஸ்ரீ சைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஷேத்திரம் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் (ஆந்திரா கர்நூல் மாவட்டத்தின்) கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. ஸ்ரீபிரம்மராம்பா தேவி பதினெட்டு மஹாசக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறாள். சித்தி பெறுபவருக்கும், சாமான்ய பக்தருக்கும் அபூர்வமான அனுபவத்தை இந்த ஷேத்திரம் கொடுக்கின்றது.

 

எல்லா கோயில்களிலும் குளித்து கைகால்கள் கழுவி ஒன்றும் சாப்பிடாமல் கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு எந்த வித நித்திய கர்மங்களையும் செய்யாமல் மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்யலாம். இதற்கு தூளி தரிசனம் என்பர். தூய்மையான மனதோடு, சாதி, மத பேதமின்றி மூலவரான ஜோதிர் லிங்கத்தின் தலையை தொட்டு வணங்கலாம். வெறும் தரிசனத்தினாலேயே எல்லாவிதமான சுகங்களையும் பக்தர்கள் அனுபவிப்பார்கள் என்ற பெயரும் புகழினை பெற்றிருக்கும் இறைவன் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி ஆவார்.

 

மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். படைவீரர்களை தெற்கு நோக்கி யாத்திரை தொடங்க உத்திரவிட்டான். ஸ்ரீ மல்லிகார்ஜுனேசுவரரை தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்துவிட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார்.

 

தல சிறப்பு:

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்திதேவர் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது.

 

ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சைல சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 268 வது தேவாரத்தலம் ஆகும். நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.

 

தோற்றம்:

 

ஸ்ரீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர். ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.

 

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஒரு அம்பாள் பக்தர் ஆவார், அம்பிகையை வணங்கி அவரிடம் பெற்ற வாளைக் கொண்டு அவர் எதிரிகளை அழித்து தன் தர்ம ராஜ்ஜியத்தை நிலைநாட்டினார் அதன் நினைவாக பிரம்மராம்பிகை அம்மன் கோவிலின் வடக்குப்புற கோபுரத்தை 1677இல் கட்டினார், எனவே இன்றளவும் அது சிவாஜி கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. வீர சிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப் படுகிறது.

 

கோயில் அமைப்பு:

 

இக்கோயிலானது 20 அடி உயரமும், 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதிற்சுவரின் வெளிப்புறத்தில் நான்குபுறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

 

இவை குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்சுணன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிடாசுரமர்தினி போன்ற பல சிற்பங்களைக் கோண்டதாக உள்ளன.

 

கோயிலின் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் உள்ளன. கிழக்குப்புறமுள்ள கோபுரம் கிருஷ்ணதேவராயராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப்புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால் 1677இல் கட்டப்பட்டதால் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது.

 

மேற்குப்புற கோபுரமானது கோயில் நிர்வாகத்தால் 1966 இல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. இதன்மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டதாக அவரது கல்வெட்டின்வாயிலாக அறியப்படுகிறது. மல்லிகார்சுனர் சந்நிதிக்கு மேற்கில் சந்திரமாம்பா சந்நிதியும், கிழக்கே இராசராசேசுவரி சந்நிதிகளும் உள்ளன.

 

ஸ்ரீ சைலத்தைப் பல நூல்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம், இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும் மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை,, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி, ஆகியவை இத்தலத்தின் மகிமையைக் கூறும் நூல்களாகும்.

 

இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள், சாளுவகாகதீய மன்னர்கள் காலத்தியவை என்று சொல்லப்படுகிறது.

 

கி.பி. 1 ம் நூற்றாண்டில் இத்தலம் சாத வாகனர்களால் சிரிதான் என்று வழங்கப்பட்டது. புலமாவி என்ற சாதவாகன மன்னனின் நாசிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. சாதவாகனர்களின் தோழர்களான இக்ஷுவாக்கள் இதனை ஸ்ரீபர்வதம் என்று அழைத்தார்கள்.

 

பின்னர் நான்காம் நூற்றாண்டில் சிம்ம வர்ம பல்லவன் இப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டான். த்ரிலோசனபல்லவன் என்பவன் ஸ்ரீ சைலக் காட்டின் ஒரு பகுதியைப் புனரமைத்து அந்தணர்களை அங்கு இருத்தினான். இப்பணியைப் பின்னர் பல்லவர்களை வென்ற சோழர்கள் செய்து முடித்தார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த விஷ்ணுகுண்டியர்கள் இப்பகுதியை ஆண்டனர். அப்போது ஸ்ரீ சைல ஆலயம் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது.

 

பின்னர் கடம்பர்கள் இதனைச் சிறிது காலம் ஆண்டனர். ஆறாம் நூற்றாண்டில் கரிகால் சோழனின் சந்ததியினர் கடப்பா, கர்னூல் பகுதிகளை ஆண்டனர். பின்னர் கி.பி. 973 வரை ராஷ்ட்ரகூடர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். மீண்டும் சாளுக்கியர்களது ஆட்சி மலர்ந்தபோது, சோழர்கள் அவர்களை வென்றனர். 12 ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் காகதீயர்களின் வசமாயிற்று. பிரதாப ருத்ரன் என்பவர் தன் மனைவியோடு இங்கு வந்து மல்லிகார்ஜுனருக்குத் துலாபாரம் தந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

 

ஆந்திரத்தின் 72 சிற்றரசர்கள் முகமதியர்களோடு போரிட்டு மீண்டும் இந்து ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். இவர்களுள் அத்தங்கி வேமா ரெட்டி என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவரது குல தெய்வம் திரிபுராந்தகத்தில் உள்ள மூர்த்தியே ஆவார். ப்ரோலய ரெட்டி என்பவர் தன்னை ஸ்ரீசைல மல்லி கார்ஜுனரின் பாத சரண தாசன் என்று சொல்லிக் கொண்டார்.

 

ஸ்ரீ சைல மலை ஏறி வரும் பக்தர்களுக்காக ரெட்டி மன்னர்கள் படிக்கட்டுக்களை அமைத்ததாக சாசனங்கள் மூலம் அறிகிறோம். ஸ்ரீ சைலத்தில் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணா நதிக்குச் செல்வதற்குப் படிக்கட்டுக்கள் கட்டப்பட்டன. அன மேவா ரெட்டியின் ஆட்சிக்கு ஸ்ரீ சைலம், மகா நந்தி பகுதிகள் உட்பட்டன.

 

விஜயநகரப் பேரரசு இப்பகுதியை வசமாக்கிக் கொண்ட பிறகு, ஆலய முன் மண்டபம், தெற்கு கோபுரம் ஆகியவை கட்டப்பெற்றன. நிறைய தானங்கள் அளிக்கப் பட்டன. கிருஷ்ண தேவராயர் காலத்தில் கிழக்கு கோபுரமும் ரத வீதியில் மண்டபங்களும் கட்டப்பட்டன. விமானத்திற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. பிற்காலத்தில் அனேக பக்தர்கள் மூலம் கொடிமரம், நந்தவனம், கோயில் மணி ஆகியவை அளிக்கப்பட்டன.

 

கி.பி. 1674 ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பிற்காலத்தில் ஸ்ரீ சைல ஆலயத்தின் மீது படையெடுப்பு நிகழ்ந்தபோது மராட்டிய வீரர்கள் கடைசி வீரன் உள்ளவரை போரிட்டதாகக் கூறுவர். அவர்களது சந்ததியினர் இன்றும் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது முன்னோரது நினைவாக இங்கு வருகை தந்து வழிபடுகிறார்கள்.

 

ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் 15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரத்தை கி.பி. 1677 ல் சத்ரபதி சிவாஜி கட்டினார். பின்னர் மேற்கு கோபுரம், 1966 ல் கட்டப்பட்டது. மல்லிகார்ஜுன சுவாமியின் விமானம் கி.பி. 1230 ம் ஆண்டு காகதீய கணபதி ராஜனின் சகோதரி மைலம்ம தேவியால் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்புறம் உள்ள ரங்க மண்டபத்தை விஜய நகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் கட்டினார்.

 

ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் வரை மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான ( 2830 அடிகள் ) சிகரேசுவரத்தைத் தரிசித்தபடியே மல்லிகார்ஜுனசுவாமியைத் தியானிப்பார்கள். இங்கிருந்தபடியே, ராமபிரான், மல்லிகார்ஜுனரைத் தரிசித்ததாகச் சொல்வர். 8 கி.மீ தொலைவிலுள்ள இச்சிகரத்தின் மேலுள்ள வீர சங்கர சுவாமிக்குப் பக்தர்கள் செக்கில் எள்ளை ஆட்டி அதனைப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளுக்கு இடையிலிருந்து மல்லிகார்ஜுன ஆலய சிகரத்தைத் தரிசிக்கிறார்கள்.

 

திருவிழா:

 

தெலுங்கு வருடப்பிறப்பு, ஆவணி மாத சப்தமி பூஜை, மஹா சிவராத்திரி, யுகாதி பண்டிகை, கார்த்திகை சோமவாரம் திருவிழா, பிரதோஷம்.

 

திறக்கும் நேரம்:

 

காலை 5 மதியம் 3 மணி, மாலை 5.30 – இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.

 

முகவரி:

 

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம் – 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம்.

 

திருச்சிற்றம்பலம்

 

ஓம் நமசிவாய

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.