Breaking News :

Thursday, November 21
.

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை சிறப்புகள்


பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!

 

மார்கழியும் திருப்பாவையும்: பூஜை தொடங்கும் முன் அசரீதி "எங்கே அவள் சூடிய மாலை? இனி நான் அவள் சூடிய மாலையை தான் அணிவேன்" என ஒலிக்கிறது.

 

மார்கழி திங்கள் என்றாலே நம் அனைவர் மனதிலும் உதிப்பது கண்ணனை துதிக்கும் பாடல்கள், கோலங்கள், காலையில் நீராடி மகிழ கிடைக்கும் வாய்ப்பு எல்லாமே தான். அதில் நாம் அனைவரும் விரும்பி பாடக்கூடியது திருப்பாவை, திருவெம்பாவை தான். கண்ணனை மையமாக வைத்து ஆண்டாள் எழுதியதே திருப்பாவை.

இந்த மார்கழி மாதத்தில் கண்ணனையே தன் மணாளனாக நினைத்து நினைத்து உருகிய ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாடுவது சிறந்தது.

 

ஆண்டாளின் சிறப்புகள்:

 

ஒரு நாள் பாண்டிய நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியாழ்வார் வீட்டின் தோட்டத்தில் திடீர் என்று ஒரு குழந்தை அழுகுரல் கேட்கிறது. அதை காண சென்ற அவருக்கு அசரீதி, "இந்த குழந்தையை எடுத்து பாராட்டி சீராட்டி மகளாய் பாவித்து வளருங்கள்" என்று ஒலிக்கிறது. அதை அப்படியே பின்பற்றி பெரியாழவார் குழந்தையை பக்தி மேலோங்க வளர்க்கிறார்.

 

இந்த குழந்தைக்கு சிறு வயதிலேயே கண்ணன் மீது ஆசை வளர்கிறது. கண்ணனை தன் மணாளனாகவே பாவிக்கிறாள். அவனுக்காக ஆயர்பாடியில் உள்ள கோபியர்கள் போல் தனது கூந்தலை ஒரு பக்கமாக கொண்டை போட்டுக் கொள்கிறாள். தான் இருக்கும் இடத்தை ஆயர்பாடி மாளிகை என்று நினைக்கிறாள். தன் தோழிமார் எல்லாரும் கோபியர்கள் என பாவித்துக் கொள்கிறாள். வடபத்ரசாயீ சுவாமியையே கண்ணனாய் பாவித்து காதல் புரிகிறாள். ஆயர்பாடியில் பெண்கள் மார்கழி மாதம் பாவை நோன்பு நோற்பார்கள். ஆண்டாளும் அதை பின்பற்றி தன் தோழிகளோடு காத்யாயினி தேவியை வணங்கி கண்ணன் தன் அமைய வேண்டும் என வேண்டுகிறாள்.

 

ஆண்டாள் தன்னுடைய சிறு வயதிலேயே திருப்பாவை முப்பது பாசுரங்களையும் நாச்சியார் திருமொழியில் நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்களையும் இயற்றியுள்ளார்.

 

"கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும்மனம்" என்று நம்மாழ்வார் சொல்வது போல அந்த சிறிய வயதிலேயே அழகான பாடல்களை தன் ஆழ்ந்த அன்பினால் படைத்தவள் ஆண்டாள்.

 

"மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே" இந்த அழகிய வரிகள் அந்த பச்சிளம் வயதில் அழகாய் வந்ததே அவளுக்கு. என்னே அழகு?

 

ஆண்டாள் என்ற பெயர் ஏன்?

 

இதற்கு ஒரு கதை இருக்கிறது. பெரியாழ்வார் வடபத்ரசாயீ சுவாமிக்கு வழக்கம் போல் பூஜைக்காக மாலை எடுத்து வைத்திருக்கிறார். இந்த ஆண்டாள் அதை காண்கிறாள். "என் மணாளன் என்றால் அவரில் பாதி நான் தானே அப்படி என்றால் அவர் சூட்டிக்கொள்ள போகும் மாலை எனக்கும் சரியாக இருக்க வேண்டுமே" என நினைத்து அந்த மாலையை அணிந்து கொள்கிறாள். அதை பார்த்த பெரியாழ்வார் கோபம் கொண்டு "சுவாமிக்கு என்று வைத்திருந்த மாலையை நீ எடுத்து அணிந்து கொண்டு விட்டாயே இப்படி அனர்த்தம் செய்து விட்டாயே" என திட்டிவிட்டு மாலையே இல்லாமல் பூஜைக்கு செல்கிறார்.

 

பூஜை தொடங்கும் முன் அசரீதி "எங்கே அவள் சூடிய மாலை? இனி நான் அவள் சூடிய மாலையை தான் அணிவேன்" என ஒலிக்கிறது. "இந்த குழந்தை ஏதோ விளையாட்டாய் அன்பு செலுத்துகிறாள் என்று பயந்தோம். ஆனால் கடவுளே அதை ஏற்றுக் கொண்டாரே! அம்மா, நீ என்னை மட்டும் ஆளவில்லை மா அந்த கடவுளையும் சேர்த்து ஆட்கொண்டுவிட்டாயே! "என வணங்கி கொள்கிறார்.

 

கண்ணன் தன் அன்பை புரிந்து கொள்ள வேண்டி மன்மதனிடம் கோரிக்கை விடுக்கிறாள் ஆண்டாள். அதுவே நாச்சியார் திருமொழியில் இருக்கும் பாடல்கள். முதல் பாடலிலேயே "என்னை என் கண்ணனிடம் சேர்ப்பாயா" என வேண்டுகோள் விடுகிறாள்.

 

தினம் ஒரு திருப்பாவை

"தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,

 

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,

 

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியை யும்தொழுதேன்,

 

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே"

 

திருப்பாவை பற்றி சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி இருந்த வடபத்ரசாயி பெருமாளின் சந்நிதிக்குச் சென்று, அவருடைய அழகிய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, பெருமாளின் கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் திருச்சங்கைப் பார்த்து ஆண்டாள் பாடியதே திருப்பாவை பாடல்கள். 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...' எனத் துவங்கி 'வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை...' என முடியும் 30 பாடல்கள் பாடி ஆண்டாள் திருமாலையும் தமிழையும் சிறப்புற ஆண்டாள்.படி சூடி கொடுத்த சுடர்கொடியை படி கொடுத்த பைங்கிளியாய் மாலை சூடி அரங்கனை அடைந்தாள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் 

மார்கழி மாதங்களில் நான் மார்கழி என்கின்றார் ஸ்ரீமன் நாராயணன் அத்தகைய அற்புத மார்கழி 1 ந்தேதி இன்று 17/12/2023 ஞாயிறு   பிறந்துள்ள பொன்னான வேளையில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவைபாடி மகிழ்வோம் ! ஸ்ரீ ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் உண்டானது?

ஆண்டாள் நாச்சியார், தான் பிறந்தபோதே கோதாவரியின் பாவத்தை நீக்கி, அவளுக்கு மங்களம் அருளினார். ஆண்டாளின் வாழ்வும், பாடல்களும் இன்றும் என்றும் நமக்கு மங்களத்தையே தரும் என்பது உண்மை.  

 

ஸ்ரீ ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் உண்டானது? அழகுத் தமிழால் அரங்கப்பெருமானை ஆண்டதால் 'ஆண்டாள்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார் பூமிப்பிராட்டி. அவர் பிறந்தபோது, 'கோதை' என்றே பெரியாழ்வாரால் திருநாமம் சூட்டப்பட்டது. ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் சூட்டப்பட்டது என கோதாஸ்துதி என்ற நூலில் வேதாந்த தேசிகர் விளக்கியுள்ளார். 29 ஸ்லோகங்களைக்கொண்ட இந்த நூலில், ஆண்டாளின் அருமை பெருமைகளை விளக்கியுள்ளார் வேதாந்த தேசிகர்.

 

ராவணனால் தூக்கிச் செல்லப்படும்போது, அன்னை சீதாதேவி தனது அணிகலன்களையெல்லாம் எறிந்து, 'மலைகளே, நதிகளே, எனது கணவர் ஸ்ரீராமச்சந்திரப் பிரபுவிடம் என் நிலையைச் சொல்லுங்கள்' என்று வேண்டினாள். ஸ்ரீராமர் கோதாவரி ஆற்றை அடைந்து நீராடியபோது, ராவணனுக்கு அஞ்சி சீதாதேவியைப் பற்றி சொல்லாமல் இருந்துவிட்டாள் கோதாவரி. இதனால், கோதாவரி நதிக்கு பாவம் சேர்ந்தது.

 

பூமிப்பிராட்டி பிறந்து, அவருக்கு 'கோதை' என்ற பெயர் சூட்டப்பட்டபோதுதான், கோதாவரி தனது பாவத்தைப் போக்கிக்கொண்டாள் என அந்த நூல் தெரிவிக்கிறது. கோதாவரிக்கு, 'கோதை' என்ற பெயரும் உண்டு. ஆண்டாள் நாச்சியார், தான் பிறந்தபோதே கோதாவரியின் பாவத்தை நீக்கி, அவளுக்கு மங்களம் அருளினார். ஆண்டாளின் வாழ்வும், பாடல்களும் இன்றும் என்றும் நமக்கு மங்களத்தையே தரும் என்பது உண்மை.  

 

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை

 

 திருப்பாவை பாடல்–1                                                                                          

  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே, நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.                                                                                  

                                                                                                     

                        பாடலின் பொருள்:                                                                                  

             மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்வ வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.