Breaking News :

Thursday, November 21
.

டாப் 10 முருகன் கோவில்கள்


10. எட்டுக்குடி முருகன் கோவில் திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று. இது மிக பழமையான கோவில்களில் ஓன்று. இங்கு முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இந்த கோவிலில் முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள். இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம். சத்ரு சம்ஹாரம் செய்ய இங்கு வேண்டுவார்கள் ஆசைக்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு ஓசைக்கு மணி கட்டுவதாக வேண்டுகிறார்கள். எல்லா முருகன் கோவில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு.

9. அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் குன்றத்தூர்

குன்றத்தூர் முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அமைந்துள்ளது. சிறு குன்றின்மீது அமைக்கப்பட்ட இக்கோவிலை தரிசிக்க 80 படிகளுக்கும் மேலாக ஏறிச்செல்ல வேண்டும்.இந்த திருத்தலத்தில் மூலவராக வீற்றிருப்பவருக்கு சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகிறார்.கருவறை சன்னிதி முன்புள்ள துவாரபாலகர்களுக்கு வஜ்ரம், சூலாயுதம் என்று முருகனுக்கு உரிய ஆயுதங்கள் இருக்கின்றன. கருவறையில் முருகன், தெய்வானை, வள்ளி ஆகிய திருமூர்த்தங்கள் உள்ளன. கருவறைக்கு வெளியில் நின்றபடி மூவரையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வது சிரமம். காரணம் கருவறை மற்றும் சிலைகளின் வடிவமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது. இத்தலத்து முருகனுக்கு திருமணத்தடைகளை விலக்கக்கூடியவராக விளங்குகிறார் என்பதாகும். அதன் காரணமாக திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள்

8. மருதமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில், மருதமலை

மருதமலை முருகன் கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

7. வடபழனி ஆண்டவர் திருக்கோவில், வடபழனி

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் சென்னையில் உள்ள வடபழனியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.திருமணத் தடை விலகவும் மற்றும் மக்கட்பேறு பெறவும் சிறந்த கல்வி அறிவு பெறவும், உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கவும் மூலவரையும், அங்காரகனையும் (செவ்வாய்) வழிபாடு செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்பவர்களுக்கு குறைகள் நீங்கி நிவர்த்தி ஏற்படும் என்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. தென்பழநிக்கு செல்ல முடியாதவர்கள் வடபழநிக்கு வந்து தங்கள் குறைகளை சொல்லியும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றியும் செல்கின்றனர். அவர்களுக்கு கலியுக வரதனான வடபழநி ஆண்டவர் அருள்பாலிப்பது திண்ணம்.

6. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சோலைமலை

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மதுரை மாவட்டத்தில் சோலைமலையில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

5. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருத்தணி

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ளது. இது ஐந்தாம் படைவீடு. பொதுவாக அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், இங்கே மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். சூரனுடன் போரிட்டபோது ஏற்பட்ட காயமாம். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் ‘தணிகை’ என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

4. அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் சுவாமிமலை
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலையில் உள்ளது. இது நான்காம் படைவீடு. சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ‘சிவ குருநாதன்’ என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

3 . அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் பழனி

பழனி முருகன் கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ளது. முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டடு வந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பான வழக்கமாகும். லட்சக்கணக்கானோர் தைப்பூசத் திருநாளன்று காவடிகட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து முருகனை தரிசிக்கின்றனர்.

2. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இது இரண்டாம் படைவீடு. இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் ‘அலைவாய்’ என்றும் பெயர் கொண்டது. முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த முருகனின் திருவடிகளை வணங்கினால் பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற நம்பிக்கையுள்ளது.

1. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இது முதல் வீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ எனப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.