Breaking News :

Thursday, November 21
.

ஸ்ரீ முருகப்பெருமான் சிவபெருமானுடன் காட்சியளிக்கும் கோயில், திருவிடைக்கழி


ஸ்ரீ முருகப்பெருமான், சிவபெருமானுடனும், நவக்கிரக நாயகர்களாகவும் அருள்பாலிக்கும் ஆலயம் அமைந்துள்ள திருத்தலம் தான் திருவிடைக்கழி.

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரசம்ஹாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது சூரியனின் இரண்டாவது மகனான ஹிரண்யாசூரன், தான் பித்ரு கடன் செய்ய வேண்டியிருந்ததால், போர்க்களத்திலிருந்து பின்வாங்கி தரங்கம்பாடி கடலிலே மீன் வடிவம் எடுத்து மறைந்தான். இதனை அறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யா சூரன் நல்ல சிவபக்தன் என்பதால், சிவபக்தன் ஒருவனைக் கொன்ற பாவத்திற்கு முருகப்பெருமான் ஆளானார்.

ஹிரண்யா சூரனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்டுள்ள பாவத்தை நீக்கிக் கொள்ள முருகப்பெருமான் தரங்கம்பாடிக்கு அருகிலே இருந்த ஒரு குரா மரத்தடியில் அமர்ந்து சிவபெருமானை வணங்கி, ஹிரண்யா சூரனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்டிருக்கும் பாவத்திலிருந்து பாவவிமோசனம் தரும்படி வேண்டினார்.

சிவபெருமானும் அவ்வாறே முருகப்பெருமானுக்கு ஏற்பட்டிருந்த பாவங்கள் நீங்க அருள்புரிந்தார்.
ஹிரண்யாசூரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்திற்கு பாவவிமோசனம் அளிந்த சிவபெருமான், முருகப்பெருமான் தன்னை வணங்கிய அந்த குரா மரத்தடியிலேயே தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்குமாறு பணித்தார். அதுமட்டுமல்ல, சிவபெருமானும் முருகப்பெருமானுக்கு துணையாகப் பின்னிருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

முருகப்பெருமான் ஹிரண்யா சூரனைக் கொன்ற பாவம் சிவபெருமானால் கழிக்கப்பட்ட திருத்தலம் என்பதால் இத்திருத்தலத்திற்கு விடைக்கழி, அதாவது திருவிடைக்கழி என்று பெயர் வந்தது.

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று வள்ளியை மணம் புரிந்த வள்ளிமலை மற்றொன்று பாவ விமோசனம் பெற்ற இந்த திருவிடைக்கழி.
இத்திருத்தலத்தின் ஸ்தல விருட்சம் குரா மரம்.

இதனடியில் அமர்ந்தே முருகப்பெருமான் சிவபெருமானை வணங்கி பாவம் நீங்கப்பட்டார். இந்தக் குரா மரத்தடியில் அமர்ந்து இராகுபகவான் முருகப்பெருமானை வழிபட்டுள்ளார்.

இவ்வாலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. முருகப்பெருமானே நவக்கிரக நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இவரை வணங்கினாலே நவக்கிரஹ தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு யாதெனில், சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பது போல இங்கு பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் ஆகிய அனைத்து மூர்த்திகளும் தங்களின் வலது திருக்கரத்தில் வஜ்ர வேலாயுதத்துடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதியில் உள்ள சிவ சண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்களின் திருக்கரங்களிலே மழுவினை ஏந்தாமல் வஜ்ர வேலாயுதத்தை ஏந்தி அருள்பாலிப்பது சிறப்பு.

இங்கு பதினாறு விநாயக மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சாதாரணமாக கொடிமரத்தின் கீழ் விநாயகப் பெருமான் தான் அருள்வார். ஆனால், குராவடியில் முருகப்பெருமானும் விநாயகப் பெருமானுடன் சேர்ந்து அருள்கின்றனர் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பு.

பொதுவாக முருகப்பெருமானின் ஆலயங்களில் முருகப்பெருமானின் வாகனமாக இருப்பது மயில். ஆனால், இங்கு யானை வாகனமாக அமைந்துள்ளது.
முசுகுந்த சக்ரவத்தி என்னும் சோழ மன்னன் இவ்வாலயத்தைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதற்கும் முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், காலத்தை கணிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இங்கு உள்ள கல்வெட்டுக்களிலிருந்து முருகப்பெருமான் திருக்குராத்துடையார் என்ற திருநாமத்துடன் அருள் புரிவதாகக் கூறப்பட்டுள்ளது.

திருக்கடையூர் திருத்தலத்திலிருந்து சுமார் ஆறு கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவிலும் திருவிடைக்கழி திருத்தலம் அமைந்துள்ளது.

ஒவ்வொருவரும் சென்று தரிசிக்க வேண்டிய சிறப்பு மிக்க திருத்தலம் திருவிடைக்கழி.

தரிசன காலம் – காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை. மாலை 04.00 மணி முதல் இரவி 08.30 மணி வரை
ஓம் முருகா.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.