மாணிக்கவாசகர் பாட இறைவனால் எழுதப் பெற்ற திருவாசகம் ஓலைச்சுவடி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் கனக சபையில் இருந்தது இந்த சுவடி நூலை யாரிடம் ஒப்படைப்பது என்ற பிரச்சனை வந்தது. ஒவ்வொருவரும் தாங்களே இந்நூலை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தனர். அப்பொழுது ஒரு அசரீரி ஒலித்தது. 'இந்நூலை நம் சிவகங்கையில் விடுங்கள்' என்று.
கங்கையில் குளித்துக் கொண்டிருந்த சித்தரும் சிறந்த சிவ பக்தருமாகிய ஒரு பெரியவரிடம் அந்நூல் வந்து நின்றது. அவர் அந்நூலை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு சிவ பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டே இந்த மடத்திற்கு வந்தார். அன்று முதல் அவ்விடத்திற்கு ஸ்ரீபாத பூஜை அம்பலத்தாடையார் மடம் என்று வழங்கலாயிற்று. அந்த பெரியவர்க்கு பின் ஒருவர் பின் ஒருவராக திருவாசகத்திற்கு சிவபூஜை செய்து பாதுகாத்து வந்தனர்.
இச்சமயம், கர்நாடகா நவாப்கள் தமிழகம் மீது போர் தொடுத்தனர். அப்போரின் போது ஏராளமான கோவில்களும், மடங்களும் இடித்து நாசமாக்கப்பட்டன. யுத்தம் சிதம்பரம் பரவியது. அப்பொழுது, அம்பலத்தாடையார் மடத்து பத்தாவது பட்டத்தை ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் வகித்து வந்தார். யுத்தம் பரவி வருவதும் கோவில்கள் இடிக்கப்பட்டு நாசமாக்கப்படும் செய்தியை கேள்விப்பட்ட ஸ்ரீநாகலிங்க சுவாமிகள் அதிர்ந்து, கண் கலங்கினார்.
இறைவனால் கையொப்பம் இடப்பட்ட அத்தெய்வத் திருநூலுக்கு பாதிப்பு வந்து விடுமோ என பயந்தார். ஊண், உறக்கம் என எல்லவரையும் மறந்தார். அந்த சிவப்பரம் பொருளிடம் அனுதினமும் அழுது முறையிட்டு கொண்டிருந்தார். உடல், உயிர் எல்லாமே அந்த சிவபரம்பொருளை நோக்கி சிவபஞ்சாட்சர தியானத்தினுள் ஆழ்ந்தார் நாட்கள் பல சென்றன. யுத்தம் கடுமையாக நடந்தது. எங்கு பார்த்தாலும் அழிவுச் செய்திகளே வந்து கொண்டிருந்தன.
சுவாமிகள் இதைப் பார்த்து சிவ பரம்பொருளை நோக்கி கடுமையான தியானம் இருந்தார். உலக அமைதிக்காக தன்னிலை மறந்தார் . ஓம் நமச்சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தினை தவிர அவரது உதடுகள் வேறு எதையும் உச்சரிக்கவில்லை. அவரது சிந்தை முழுக்க திருவாசகத்தை காக்க வேண்டும் என்று மட்டுமே இருந்தது .அந்த குறிக்கோளை நோக்கி கடுந்தவம் இருந்தார்.
தடுத்தாட் கொள்பவன் இறைவன் அல்லவா? அடியவர்களின் துயர் கண்டு பொறுமையாகவா இருப்பான்? இனியும் தனது பக்தனை கலங்க விட வேண்டாம் என எண்ணி, ஸ்ரீ நாகலிங்க சுவாமிகளின் நெற்றிப் பொட்டில் ஜீவ ஒளியை பாய்ச்சி, திருவாசகத்தினை பாதுகாக்கும் இடத்தினை சுட்டிக் காட்டினார். இந்த தரிசனத்தைக் கண்ட ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் ஆனந்தம் கொண்டார். ஆனந்த கூத்தாடினார். இறைவன் சுட்டிக் காட்டிய இடம் ஞான பூமியான பாண்டிச்சேரி என்று கண்டு மகிழ்ந்தார்.
ஆத்ம சாதனைக்கு மிகவும் உகந்த இடமானதும், சித்தர்களையும், ஞானிகளையும் தன்பால் கவர்ந்திழுக்கும் புண்ணிய பூமியாம் பாண்டிச்சேரி தான் ,” திருவாசகத்தை” பாதுகாக்க சரியான இடம் என்ற இறைவனின் கருணையை கண்டு ஆனந்தமடைந்தார். உடனே, திருவாசகம் இருந்த வெள்ளிப் பெட்டகத்தை அழகான பட்டுத் துணியில் மூடி, அந்த மூட்டையினை தலையிலே சுமந்துக் கொண்டு,தனது மடத்தில் இருந்த இருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு, மடத்தை விட்டு வெளியே வரும் வேளையில் கடுமையான புயலும் அதை தொடர்ந்து மழையாக பொழிந்ததாம். அவற்றையெல்லாம் எதிர்க் கொண்டு கடலூர் வழியாக பாண்டிச்சேரி வந்து சேர்ந்தார். பாண்டிச்சேரியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு சின்ன குடிசை அமைத்து திருவாசகம் இருந்த வெள்ளிப் பெட்டகத்தை வைத்து சிவப் பரம்பொருளுக்கு அனுதினமும் பூஜைகள் செய்து கொண்டு வந்தார்.
அங்கு ஆழ்ந்த சிவத்தியானத்தில் எப்பொழுதும் இருந்ததால், ஸ்ரீ நாகலிங்க சுவாமிகளுக்கு சக்திகள் பெருகின. சக்திகள் சித்துக்களாக மாறியது. பலரும் சுவாமிகளிடம் வந்து தங்களது குறைகளை சொல்ல, அவைகளை உடனே ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் தீர்த்து வைத்துக் கொண்டு இருந்தார். நாட்கள் செல்லச் செல்ல, சுவாமிகளின் பெருமை எல்லோருக்கும் தெரிந்தது. தூரத்திலிருந்தும் பக்தர்கள் அவரை தேடி வந்த வண்ணம் இருந்தனர்.
இந்த பக்தர்கள் கூட்டம், புகழ் வெளிச்சம் இதிலெல்லாமிருந்து விடுபட்டு இறைவனுடன் கலக்கும் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது, தனது அருகில் இருந்த பட்டத்து தம்பிரான் ஸ்ரீ நாகலிங்க சுவாமிகளின் எதிர்கால நிகழ்ச்சியை சூசகமாக தெரிவித்தார். அதைக் கேட்டு ஆனந்தப்பட்ட சுவாமிகள், தனது சீடன் பக்குவ நிலைக்கு வந்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்டார். அந்த நிமிடமே தனது 10வது பட்டத்தை 11வது பட்டமாக தனது சீடனுக்கு அளித்து மடத்தின் பீடத்தில் அமர்த்தினார்.
அன்றிரவே சுவாமிகள் இறைவனோடு கலக்கும் நேரத்தை இறைவனின் திருக்குறிப்பினால் உணர்ந்து கொண்டார். இரண்டாம் நாள் தெய்வீக நிலையிலையே சுவாமிகள் காணப்பட்டார். சுவாமிகள் எதுவும் பேசாமல் மௌனத்தையே கடைப் பிடித்தார். சைகையினால் தம்முடைய சீடர்களிடம் அவர்கள் செய்ய வேண்டிய முறைகளையும், கடமைகளையும் பற்றி மட்டும் விளக்கினார். மூன்றாம் நாள் வந்தது. சுவாமிகள் சிவத்தினுள் ஐக்கியமாகும் நேரமும் வந்தது. எல்லோரும் சுவாமிகளை வணங்கி நின்றனர் சுவாமிகள் இந்த உலக வாழ்வை விட்டு சிவத்தினுள் ஆட்கொள்ளப்பட்டு ஜீவன் முக்தியடைந்தார்.
இன்றும் இங்கே தவறாமல் , திருவாசகம் வைத்திருக்கும் வெள்ளிப் பெட்டகம் அன்றாடம் பூஜிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று இரவு பெட்டகம் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றது. இவரது குரு பூஜை ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் 7 -ம் நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
புதுவை ஆதீன சிதம்பரம் ஸ்ரீ பாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடம். புதுச்சேரியில் உள்ள செட்டிக் கோவிலின் பின்புறம் உள்ள அம்பலத்தார் மடத்து வீதியில் அமைந்து இருக்கிறது ஸ்ரீ நாகலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதி.