பொதுவாக, சிவன் கோயில்களில் நந்தி சிலை இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளங்குடி என்ற கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்ற திரவம் பல நூற்றாண்டுகளாக வழிந்துக் கொண்டிருக்கும் அதிசயம் நிகழ்கிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் இளங்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் அமைந்துள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து இரத்தம் போன்ற திரவம் வழிந்துக் கொண்டேயிருக்கிறது. இது என்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழுவழுப்பாகவும், நறுமணத்தைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நந்தியின் சிலைக்கு பட்டு ஆடை அணிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆடையும் திரவத்தால் முழுமையாக நனைந்து விடுகிறது. இந்த திரவத்தை பக்தர்கள் பிரசாதமாக நெற்றியில் வைத்துக் கொள்கின்றனர். சிலர் இதை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த திரவத்திற்கு மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இக்கோயிலில் எண்ணற்ற சிலைகள் இருந்தாலும், இந்த நந்தி சிலையில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று விஞ்ஞானிகள் இதை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவர்களாலும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நந்தி சிலையை ஒரு அடி தள்ளி வைத்தும் அதிலிருந்து திரவம் வழிவது குறையவில்லை. அந்த ஊரில் உள்ள மக்கள் இந்த நந்தி சிலையில் வழியும் திரவத்தை நம்பியே விவசாயம் செய்வதாகக் கூறுகிறார்கள்.
இந்த நந்தி சிலையின் வாயில் திரவம் அதிகமாக சுரந்தால் அந்த வருடம் விவசாயம் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த சிலை பார்ப்பதற்கு மிகவும் பழைமை வாய்ந்ததாக உள்ளது. இந்த நந்தி சிலை உள்ள சிவன் கோயில் ஊருக்கு வெளியே அமைந்துள்ளது. அந்தக் காலத்தில் சிற்றரசர்கள், ஒற்றையர்கள் தங்குவதற்கு வசதியாக இக்கோயில் ஊரை விட்டு வெளியே தள்ளி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் அடிக்கடி கேட்க விரும்பும் 3 வார்த்தைகள்!
இக்கோயிலில் வேல், வாள் போன்ற ஆயுதங்களை கூர்மைப்படுத்துவதற்கான சானைப் பிடிக்கும் கல் ஒன்று உள்ளது. அதில் பல ஆயுதங்கள் கூர்மைப்படுத்தப்பட்ட தடயங்கள் உள்ளன. எனவே, இப்பகுதியில் போர்கள் நடைபெற்றிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த கோயிலை ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்..