Breaking News :

Thursday, November 21
.

நவரா‌த்‌தி‌ரி நா‌ட்க‌ளி‌ல் பாட வே‌ண்டிய பாட‌ல்கள்!


முதல் நாள்

தேவியைப் பற்றிய பாடல்களை தோடி ராகத்தில் பாடுவது சிறப்பானது.
பாடல்: கற்பகவல்லி நின்
ராகம்: ராகமாலிகா
ராகம்: ஆனந்த பைரவி
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பகவல்லி)
ராகம்: ஆனந்த பைரவி
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பகவல்லி)
ராகம்: கல்யாணி
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி செய்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா (கற்பகவல்லி)
ராகம்: பாகேஸ்ரீ
நாகே‌ஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீ‌ஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகே‌ஸ்வரி நீயே உலகினில் துணையம்மா (கற்பகவல்லி)
ராகம்: ரஞ்சனி
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம் (கற்பகவல்லி)

இரண்டாம் நாள்

கல்யாணி ராகத்தில் தேவியைப் பற்றிய பாடல்களைப் பாடலாம்.
பாடல்: உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா
வரிகள்: அம்புஜம் கிருஷ்ணா
ராகம்: கல்யாணி
தாளம்: ஆதி
உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா
உலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னையல்லால்)
என்னையோர் வேடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மா
இனியாட முடியாது என்னால் திருவுள்ளம் இரங்கி
ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னையல்லால்)
நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பலபெயருடன்
எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலினில்
எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் (உன்னையல்லால்

மூன்றாம் நாள்

தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.
பாடல்: நானொரு விளையாட்டு பொம்மையா
வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: நவரச கானடா
தாளம்: ஆதி
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு (நானொரு)
அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு (நானொரு)

நான்காம் நாள்

அம்பிகையின் பாடல்களை பைரவி ராகத்தில் பாட வேண்டும்.
பாடல்: நீ இரங்காயெனில் புகலேது
வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: அடானா
தாளம்: ஆதி
நீ இரங்காயெனில் புகலேது அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்)
தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்)
பாற்கடலில் உதித்த திருமளியே - ள
பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்

ஐந்தாம் நாள்

தேவியின் பாடல்களை பந்துவராளி ராகத்தில் பாட வேண்டும்.
பாடல்: அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்
வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: பந்துவராளி
தாளம்: ஆதி
அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்
திருவடி இணை துணையென் (அம்பா)
வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்
கதம்ப வனக்குயிலே ஷங்கரி ஜகதம்பா (மனம்)
பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீ‌ஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)

ஆறாம் நாள்

தேவியைப் பற்றிய பாடல்களை நீலாம்பரி ராகத்தில் பாடுவது சிறப்பு.
பாடல்: தேவி நீயே துணை
வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி
தேவி நீயே துணை
தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி)
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா (தேவி)
மலையத்வஜன் மாதவமே - காஞ்சன
மாலை புதல்வி மஹாராக்னி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

ஏழாம் நாள்

தேவியைப் போற்றிப் பாடும் பாடல்களை பிலஹரி ராகத்தில் பாடுவது சிறப்பு.
பாடல்: ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
வரிகள்: கானம் கிருஷ்ண ஐயர்
ராகம்: ரதிபதிப்ரியா
தாளம்: ஆதி
ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்)
சுக ‌ஸ்வரூபிணி மதுர வாணி
சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்)
பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
பஞ்சமி பரமேஷ்வரி
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேத வேதாந்த நாத ‌ஸ்வரூபிணி (ஜகத்)

எட்டாம் நாள்

தேவியின் பாடல்களை புன்னாகவராளி ராகத்தில் பாடுதல் நலம்.
பாடல்: ஸ்ரீசக்ர ராஜ
ராகம்: ராகமாலிகா
ராகம்: செஞ்சுருட்டி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனே‌ஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனே‌ஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரி
ஞான வித்யேஷ்வரி ராஜராஜே‌ஸ்வரி (ஸ்ரீசக்ர)
ராகம்: புன்னாகவராளி
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி (ஸ்ரீசக்ர)
ராகம்: நாதனாமக்ரியை
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னாள் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஷ்வரி (ஸ்ரீசக்ர)
ராகம்: சிந்து பைரவி
துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டே‌ஸ்வரி (ஸ்ரீசக்ர)

ஓன்பதாம் நாள்

தேவியின் திருப்பாடல்களை வசந்தா ராகத்தில் பாடுவது உகந்தது.
பாடல்: மாணிக்க வீணையேந்தும்
ராகம்: மோகனம்
மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி
தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா
பாடவந்தோமம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ - இங்கு
வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க)
நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க)
வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும்
அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே
வாணி சர‌ஸ்வதி மாதவி பார்கவி
வாகதீ‌ஸ்வரி மாலினி
காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி நீ
நான்முக நாயகி மோஹன ரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கினிதே தேனருள் சிந்தும்
கான மனோஹரி கல்யாணி (அருள்வாய்) (மாணிக்க)

தசமி அன்று

பாடல்: கருணை தெய்வமே கற்பகமே
வரிகள்: மதுரை ஸ்ரீநிவாசன்
ராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி
கருணை தெய்வமே கற்பகமே
காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் (கருணை)
உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்
உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் (கருணை)
ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும்
அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும்
நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)     

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.