அழகிய தமிழ் கடவுள் முருகனின் திருக்கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ம் தேதி பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசாமி, வள்ளிதெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற போது பக்தர்கள் அரோகரா கோஷம் விண் அதிரும் வகையில் இருந்தது.
இந்நிலையில், இன்று பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பழனி கோயில் மற்றும் அடிவாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதின. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தற்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, மலைக்கோவில் மற்றும் பழனி நகர் முழுவதும் பக்தர்கள் வெள்ளம் காணப்பட்டது.