Breaking News :

Thursday, November 21
.

பங்குனி உத்திரம் என்றால் என்ன?


பங்குனி மாத்த்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் – இது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதைச் சிறப்பாக ஏன் கொண்டாட வேண்டும்?பொதுவாக, நம் முன்னோர் ஒவ்வொரு மாதமும் முழு நிலவு தினத்தை (பௌர்ணமியை)ச் சிறப்பாகக் கொண்டாடி வந்துள்ளனர். பொதுவாக மாதங்களின் பெயர்களே, அம்மாதங்களின் முழுநிலவு தின நட்சத்திரத்தின் பெயரை ஒட்டியே வழங்கப்பட்டு வந்துள்ளன.உதாரணமாக சித்திரை மாதத்து முழுநிலவு சித்திரை நட்சத்திரத்தை ஒட்டியே இருக்கும்.

வடமொழியில் உத்திர நட்சத்திரத்திற்கு ‘உத்திர பல்குனி’ என்பது தான் பெயர். (பூர நட்சத்திரத்திற்கு ‘பூர்வ பல்குனி’ என்பது பெயர்). ‘பூர்வ’ என்றால் முடிந்த அல்லது கழிந்த, ‘உத்தர’ என்றால் பிந்தைய என்று போருள்.நம் பங்குனி மாதத்தின் முழுநிலவு நாள் உத்திர நட்சத்திரத்தை ஒட்டியே வரும்.

பங்குனி உத்திரம் நட்சத்திரம் சாதாரணமாக சிவ-பார்வதி, ராமன்- சீதா, முருகன்-வள்ளி, தெய்வானை திருமண நாளாகவும், வள்ளி பிறந்த தினமாகவும், தேவேந்திர-இந்திராணி திருமண நாளாகவும், ப்ரம்மா-சரஸ்வதி திருமண தினமாகவும், வைணவர்களைப் பொறுத்தவரை ஆண்டாள் திருமணமாகவும் காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் தாயார் திருமண உத்சவங்களாகவும் – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடப் படுகிறது.

பங்குனி உத்திரநாளன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். . இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்

பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது. நாம் நம்குல தெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்கு வதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது. சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.  *என்றும் அன்புடன் உங்கள்

*எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்* 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.