Breaking News :

Wednesday, August 06
.

பாதகத்தி - சிறுகதை


”ஏன்டி இவளே கேட்டியா சேதிய திருப்போனக் கெழவி கெணத்துக்குள்ள விழுந்து செத்துப் போயிட்டாளாமுல்ல... அசங்க மசங்க நேரத்துல அவளுக்குக் கண்ணுந்தெரியாது ஒரு மண்ணுந் தெரியாது.. அந்த மொட்டக் கெணத்துக்கு கைப்புடிசெவரும் கெடையாது ஓரத்துல இருக்குற கல்லுகமண்ணரிச்சி பாதி உள்ளாற வுழுந்துகெடக்கு.. தடுமாறி உழுந்து முங்கி போய்ச்சேந்துட்டாளாமுல்ல பாதகத்தி என்னாத்தச்சொல்றது அவ தலையெழுத்து இப்புடியா முடியனும்”ன்னு சொன்னா குச்சி ஐஸ்ச சப்பிக்கிட்டே சாமநத்தக்காரி...

அதுக்கு குச்சி ஐச வாயில இருந்து எடுத்துப்புட்டு வலச்சேரிக்காரி சொன்னா” கேக்குற வுக கேனச்சிறுக்கியா இருந்தா எருமை மாடு ஏரப்பிளான் ஓட்டுச்சுன்னு கதவுடுவாக எடுவட்ட சிறுக்கிக,என்னாத்தச் சொல்றது என்னமோ போ.. காலம் கெட்டுக் கெடக்கு ..கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடும சிங்கு சிங்குன்னு ஆடுச்சாமுன்ற கதையா இருக்கு ம்ம்ம்ம்”னு பெருமூச்சு விட்டா

“என்னாத்தா சொல்லவார வெத்துச்செக்கு ஓட்டாம விசயத்துக்கு வா”ன்னா சாமநத்தக் காரி ...
அதுக்கு வலச்சேரிக்காரி சொன்னா

“ அந்த திருப்போனக்கெழவிக்கி நல்லா நீச்ச தெரியும் கம்மாயில முங்கு நீச்ச அடிக்கிரவ அவ அவ எப்புடி முங்கிச் செத்தான்னு சொன்னா நம்புறது. அதுவும்போக அது சும்மாவே எங்கனக்குள்ளயும் போவாது வீட்டுக்குள்ளயே தான் கெடக்கும் அதுவும் போக இங்குன அங்குன எல்லாம் விட்டுப்போட்டு செவன் கோயில் பக்கத்துல தேடிப்போயாவிழுந்துச்சுஎன்னமோ நடந்துருக்கு.. வெளிய சொல்ல மாட்டாக. கமுக்கமா காதும் காதும் வைச்ச மாதிரி அமுக்கிப்புடுவாக...” ந்னா

”அவ கதையச்சொல்றேன் கேளு”ன்னு ஆரம்பிச்சா வலச்சேரிக்காரக்கெளவி.
“அந்த  திருப்போனக் கெழவி அவளோட மகளைக் கட்டிக்குடுத்தது இந்த ஊருலதான் பொறந்ததும் இந்த ஊருலதான். ஆனா வாக்கப்பட்டுப்போன ஊருதான் திருப்போனம்

அங்கபோய் ஒத்தபுள்ள பொம்பளைப்புள்ளயப் பெத்து அதையும் இந்த ஊருலயேகட்டிகுடுத்தா
கொஞ்சநாள்ல புருசன் போய்ச்சேர வீடு வாசல்லாம் வித்துப்புட்டு ஒருஏக்கர் நெலத்த விக்காம மகவீட்டுக்கே வந்துட்டா. கையில வித்து வந்த காச மககிட்டயே குடுத்துப்புட்டு காவயித்துகஞ்சி ஊத்துனாப்போதும் அங்குன தனியா இருந்து என்னாத்தப்பண்ணபோறேன் ஓங்கூடயே இருந்துருறேன் எனக்கு யாரு இருக்கா. இந்த ஊருதான் நான் பொறந்த ஊரு இங்குணக்குள்ளயே கெடந்துட்டுப் போயிடு றேன்னு தான் வந்தா..

ஆனா அவளோட மகளுக்குப்பிள்ள பொறக்க லைன்னு அவ புருசன் ரெண்டாந் தாரம் கட்டி அவளுக்கு ஆம்பிள புள்ள அஞ்சும் பொம்பளை புள்ள ஒன்னும் பொறந்துச்சு... இவளை குத்தம் சொல்லி ஒதுக்கிவைச்சாக ஆனாஅதுக்கபுறம் இவளுக்கு பொண்கொழந்த பொறந்துச்சு ஆனாலும் அவளுக்கு அங்க மதிப்பில்லாமப் போச்சு.. ரெண்டாவது சம்சாரத்துக்குத்தான் அவ புருசன் தலையாட்டுனான்...
ஏதோ எறக்கப்பட்டு ஆத்தாளுக்கும் மகளுக்கும் காவயித்துக்கஞ்சி ஊத்திக்கிட்டு இருந்தா அவளோட சக்காளத்தியா..

அவபுருசன் கையில கால்ல வுழுந்து மகளுக்கு கலியாணம் பண்ணி வைச்சா திருப் ரெபோனத்தா மக. ரெண்டாந்தாரம் புள்ளைகளுக்கு கலியாணம் முடிஞ்சி நல்லா வசதியாத்தான் இருந்தாக.. அவுகளுக்கு திருப்போனத்தாளோட ஒரு ஏக்கர் மேல ஒரு கண்ணு... ரெண்டாந்தாரத்தோட மகனுக பேருக்கு எழுதிவைக்கச்சொல்லி அவ புருசன் கேட்டுட்டு இருந்தான்

ஆனா திருப்போனத்தா சொல்லிட்டா அது ஏம் மக வயித்துப்பேத்திக்கித்தான் குடுப்பேன்னு சொல்லிட்டா.. அவளுக்குக் கலியாணம் பண்னிகுடுத்தாச்சுல அது நாங்கதான பண்ணி வைச்சோம் சொத்த இன்னொருத்தன் அனுபவிக்கிறதுக்குபதிலா என் மகன் களுக்குக் குடுன்னு புருசன் கேட்டா.
அதுக்கு முடியாது என்னா இருந்தாலும் அவனுக எனக்கு நேரடிப்பேரனுக கெடையாதேன்னு சொல்லி மழுப்பிட்டா.. அதுக்கப்புறம் ஆத்தாளுக்கும் மகளுக்கும் கெடைக்கிற கால் வயித்துக்கஞ்சிக்கும் கேடு வந்துருச்சு...

மககாரி சொன்னா ஆத்தா பேசாம நெலத்தை வித்துப்புட்டு வாரகாசை பேங்குல போட்டுட்டு வட்டிய வாங்கிச் சந்தோசமா கஞ்சியக் கால்வயிறானாலும் குடிபோம்னு சொல்லிருக்கா.
போனவாரம்தான் நெலத்த வித்துப்புட்டு காச வாங்கியாந்துருக்கா திருப்போனத்தா... ஒரு வாரம் முழுசா ஆகல என்னாச்சுன்னு தெரியல இப்ப இப்புடி ஆகிப்போச்சு அதுனாலதான் இதுக்குள்ள வெசயம் இருக்கு””ன்னு சொன்னா வலச்சேரிக் காரக்கெழவி.

”எதுக்கும் அவ மகளைக்கேட்டா வெசயம் தெரியும்”னு சொன்னா சாமநத்தக் காரக் கெழவி.
“ஒருவழியா எழுவு முடிஞ்சிடுச்சு... போட்டு விசயத்த அமுக்கிப்புட்டானுக. கெழவிதான ஆரு கவலப்படப்போறா”ன்னு அத்தோட விட்டுட்டானுக ஊருல இருக்குறவுகளும்...
அப்பத்தான் அது நடந்துச்சு...

திருப்போனத்தா மகளுக்குப்பேய் புடிச்சிருச்சு... அவளை யாராலும் அடக்க முடியல...
அப்ப அழகர்கோயிலுக்கோடாங்கியக் கூப்புட்டு வந்து பேயோட்டுறதுன்னு முடிவெடுத்தாக
அவரும் வந்து கோடாங்கி அடிச்சி
“ஆரு நீ எம் புள்ளய வந்து படுத்துற ஒழுங்கா ஓடிரு இல்ல புளியமரத்துல அறைஞ்சிடுவேன்”னு உக்கிரமா சாமி எறங்கி ஆடுனாரு...

அப்ப அது சொல்லிச்சி
 ”டேய் நான் திருப் போனத்தாடா.... அன்னிக்கி கெணத்துல தள்ளி விட்டு சாகடிச்சானுகளே என் காசப் புடுங்கிக் கிட்டு அவனுகள உண்டு இல்லன்னு ஆக்கத் தான் வந்துருக் கேன்டா”ன்னு வாயத் தொறந்த வன்ன ஆடிப் போயிட்டாங்க

அவ வீட்டுல இருந்தவங்க எல்லாம்... திருடனுக்குத்தேள் கொட்டுன மாதிரி ஆகிப்போச்சு... ஆனா கோடாங்கி சமாளிச்சாரு... ”இப்புடி அவுத்துவிட்டா நம்பிடுவோமா வேணுங்கிறத கேட்டு வாங்கிட்டு ஓடிடு இல்ல அம்புட்டுத் தான்”னு வேப்பிலையால சாத்து சாத்துன்னு சாத்துனாரு..

அப்ப அது சொல்லிச்சி” உனக்கு நம்பிக்கை இல்லைன்னா..போய் மாடுகட்டுற எடத்துல ஈசானி மூலையில போய் தோண்டிப் பாருங்கடா விசயம் தெரியும் ”நு சொல்லவும் எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆயிப்போச்சு... ஆளனுப்பித்தோண்டிப்பாருங்கப்பான்னு சொல்லவும் மொதல்ல ரெண்டாவது பொண்டாட்டி மகனுக கெளம்பினான...
அப்ப அது சொல்லிச்சி...

“அவனுக வேணாம் போனா ரத்தம் கக்கி சாவானுக வேற யாராவது போங்க”ன்னு கண்ண உருட்டி முளிச்சிச்சி
வலச்சேரிக்காரக்கெழவி சொல்லிச்சி
“ நான் பாக்குறேன் கூட ஆராவது வாங்க”ன்னு சொன்னவன்ன கோயிந்தன் நாவறேன்னு சொல்லிப்போனான்...

அங்க போய்த்தோண்டிப்பாத்தா ஒரு பானைக்குள்ள நெலம் வித்த காசு அம்புட்டும் போட்டு ஒளம்புடிய வைச்சி மூடி அதச்சாக்குல சுத்தி பொதச்சிருந்துச்சு... அதை கொண்டாந்ததும் அது சொல்லிச்சி
“அத என் மககிட்டக்குடுத்துருங்க”ன்னு சொல்லிட்டு மயக்கமாயிடுச்சு....
ஆனா விசயம் அன்னிக்கி முடிஞ்சது ”சரிப்பா போன உசிறு போச்சு காச மககிட்டக் குடுத்துருங்கப்பா”ன்னு ஊர் பெரியமனுசங்க சொல்ல ஊத்தி மூடிட்டாக..
அதுக்கப்புறம் ஒருநா சாகவாசமா திருப்போனதுக்காரி மகளை வலச்சேரிக்காரி விசாரிச்சப்ப அதட்டலாவே கேட்டுச்சு

“ பேய் உண்மையில வந்துச்சா..டி கத வுடாத”ன்னு...
அப்ப அவ சொன்னா
“அது எங்கருந்து வர நான் சொன்னாக் கேக்க மாட்டானுக.. கையில இருந்த காச எங்கிட்ட சொல்லிட்டுத்தான் அங்க வைச்சிது ஆத்தா...

அதைபோட்டு சொல்லு சொல்லுன்னு அவனுக அடிச்சதுல செத்துப்போச்சு,,, அதான் ராத்தியோட ரத்திரியா கெணத்துல கொண்டுபோய் போட்டுட்டு தவறி விழுந்ததா கதை சொன்னாக...

அதுனாலதான் நான் இப்புடிப்பண்ணி பணத்த ஊரறியக்கைப்பத்துனேன் இல்லாட்டினா என்னையும் போட்டுத்தள்ளிருவானுக என் சக்களாத்தி மகனுக... இதுதான இன்னிக்கி பொம்பளைக நெலம”ன்னு .
”ஆனா என் ஆத்தாவ அநியாயமாக் கொன்னுட்டானுகளே”ன்னு அழுக ஆரம்பிச்சா அவ... அதுல வலச்சேரிக்காரக்கெழவி கண்ணும் கலங்கிப்போச்சு... ஏன்னா அவளும் பொம்பளை தானே...
“என்னத்தச்சொல்ல அதுக்கு அவனுக அனுபவிப் பானுக அந்த நாகப்பா பாத்துக்கிரும்”நா அவ
அ.முத்துவிஜயன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub