தசரத மன்னன் வேண்டுகோள். ஒருமுறை அயோத்தி மன்னரான தசரதன், தனக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக அங்க நாட்டிலுள்ள ரிஷ்ய சிருங்கரை அழைத்து வர சென்றிருந்தார்.
அங்கே, அங்க நாட்டின் அரசனிடம் உங்களது மகளையும், மருமகனான ரிஷ்ய சிருங்கரையும் என்னுடன் அயோத்திக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
அங்க நாட்டு அரசரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவர்களை தசரத மன்னனுடன் அனுப்பி வைத்தார்.
பின்னர், சரயு நதிக்கரையில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாக சாலையில் ரிஷ்ய சிருங்கரின் தலைமையில் அஸ்வமேத யாகம் சிறப்பாக நடைபெற்றது.
யாகம் நிறைவடைந்த வேளையில், ரிஷ்ய சிருங்கர் தசரதனை பார்த்து, ஏதோ கூறினார். அதைக்கேட்டு மகிழ்ச்சியும், குழப்புமமான மனநிலைக்கு மாறினார் தசரத மன்னர்.
அப்படியென்ன ரிஷ்ய சிருங்கர் சொல்லியிருப்பார்..!
புத்திரகாமேஷ்டி யாகம்
உங்களுக்கு ரத்தினம் போல் நான்கு பிள்ளைகள் பிறப்பார்கள் என்றும், ஆனால், அதற்கு நீங்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும் என்றே அவர் கூறினார்.
உடனே மன்னன் அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தார். அப்போது அந்த யாகத்தில் தீயிலிருந்து, இரத்த நிற உடலுடன், கறுத்த மேனியுடன் ஒரு உருவம் கிண்ணத்தை ஏந்திவாறு வெளியே காட்சி தந்தது.
அந்த கிண்ணத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பாயாசம் இருந்தது. அதனை ரிஷ்ய சிருங்கர், தசரத மன்னனுடைய மனைவியருக்கு கொடுக்க சொன்னார்.
பாயாசத்தில் பிறந்தவர்
பாயாசத்தை நான்கு பாகங்களாக பிரித்து ஒரு பங்கை கௌசல்யாவிற்கும், ஒரு பங்கை கைகேயிக்கும், மீதமுள்ள இரண்டு பங்கானது சுமித்ரைக்கும் கொடுக்கப்பட்டது.
அதன் மூலம் ஒரு பங்குனி மாதம், சுக்கில பட்ச புனர்பூச நட்சத்திரத்தன்று, நவமி திதியில், வியாழனும் சந்திர பகவானும் இணைந்த கடக ராசியில் சஞ்சரிக்கும் சுப முகூர்த்த வேளையில், கௌசல்யாவின் மகனாக, ஸ்ரீ ராமர் பிறந்தார்.
இதனாலே மற்ற மாதத்தில் வரும் நவமிக்கு இல்லாத சிறப்பு, பங்குனி மாதத்தில் வரும் நவமியில் ராம நவமியாக அனைவராலும் சிறப்பிக்கப்படுகிறது.
மேலும், பாயாசத்தை இரண்டாம் பகுதியை உண்ட கைகேயிக்கு பரதனும், மற்ற இரண்டு பாகங்களை உண்ட சுமித்ரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்கனனும் மகனாக பிறந்தனர்.
தனக்கு நான்கு புத்திரர்கள் பிறந்ததை நினைத்து அயோத்தி மன்னர் தசரதன், மக்களுக்கு பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினார்.