அமைவிடம் :
கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோயில்களுள் ஒன்றாகும். இக்கோயில் காரைக்குடிக்கும், புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது.
மாவட்டம் :
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், திருப்பத்தூர் தாலுகா, பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம்.
எப்படி செல்வது?
திருப்பத்தூர் - குன்றக்குடி பேருந்துகளில் பயணித்தால் பிள்ளையார்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலை எளிதில் அடையலாம்.
கோயில் சிறப்பு :
இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு மூலவர் கற்பகவிநாயகர் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். 3 இங்கு லிங்கங்கள், 3 பெண் தெய்வங்கள் ஒரு சேர அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனர். இது வேறு எந்த கோயிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும்.
இங்கு விநாயகருக்கு சதுர்த்தியன்று 18படி அளவில் முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. இது மிகவும் சிறப்பு பெற்றதாகும். இங்கு விநாயகரின் 6 படை வீடுகளில் கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும். பிள்ளையார்பட்டி கோயில், தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும்.
மனம்போல் வேண்டுபவனவற்றை தருவதால் இவருக்கு கற்பகவிநாயகர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கோயில் திருவிழா :
விநாயகர் சதுர்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த கோலாகலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை :
அறிவு ஒளி தரும் விநாயகராக இவர் இருக்கிறார். இவரை மனதார தொழுதால் கல்வியும், ஞானமும் ஒருவருக்கு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். திருமணத் தடையும், மற்ற தோஷங்களும் விநாயகரை வேண்டினால் தாமாக விலகும் என்பது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் வெகு உறுதியான நம்பிக்கை.
நேர்த்திக்கடன் :
தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள். தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.