Breaking News :

Thursday, November 21
.

பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில் - திருநெல்வேலி


நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, ‘வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி’ என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் ‘புட்டாத்தி அம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

கோவிலுக்குள் நுழைந்ததும் சிறிய பலி பீடமும், கொடிமரமும், பெரிய பலிபீடமும் உள்ளது. அதைத் தொடர்ந்து வடக்கு முகமாக அனுக்ஞை விநாயகரும், வடமேற்கு முனையில் கிழக்கு முகமாக அகோர விநாயகரும் காட்சி தருகிறார்கள். இதனையடுத்து மகா மண்டபம் உள்ளது. இங்கு நின்றுதான் அம்மனை வழிபட வேண்டும்.

இங்குள்ள அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக் கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள். இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.

அம்மனை கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில்(பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள். இந்த எழிற்கோலத்தினை தசரா அன்று காணலாம்.

இந்த அன்னைக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். (பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது). இந்த பிட்டை இக்கோவிலில் பூஜை செய்து வரும் பல்லவராயர் வகுப்பை சேர்ந்தவர்கள், கோவிலிலேயே தயார் செய்து அம்மனுக்கு படைத்து வருகிறார்கள்.

அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் ஒப்பனையில் (அலங்காரத்தில்) ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

வைகாசி பெருவிழா, புரட்டாசி தசரா திருவிழா, தை அமாவாசை, பங்குனி மாதம் நடைபெறும் ஆண்டு திருமுழுக்கு ஆகிய திருவிழாக்கள் இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. 

அகோர விநாயகர் :

இந்த ஆலயத்தில் உள்ள அகோர விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். கோவிலின் பின்புறம் இப்போது உள்ள விநாயகருக்கு முன்பு இந்த அகோர விநாயகரை வழிபட்டனர். சிதையுற்ற இந்த விநாயகரை வழிபடக்கூடாது என்று கூறியதால் இந்த விநாயகரை (அகோர விநாயகர்) அகற்றி விட்டு, புதிதாக ஒரு விநாயகரை (இப்போது உள்ள விநாயகர்) பிரதிஷ்டை செய்தனர். இதனையடுத்து அப்புறப்படுத்தப்பட்ட விநாயகரை தொண்டர்கள் நயினார் கோவிலில் வைத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து அகற்றி குளத்தில் போட எண்ணினர்.

அப்போது அகோர விநாயகரை வழிபட்டவர்கள், பிட்டாபுரத்தி அம்மன் அனுமதியுடன் மீண்டும் இக்கோவிலில் எழுந்தருள செய்து பிரதிஷ்டை செய்தனர். பழமை வாய்ந்த இந்த விநாயகரின் துதிக்கையும், இரு கைகளும், இடது செவியும் சிதைந்து போய் உள்ளது. இவர் 3 அடி உயரத்தில், 2 அடி அகலத்தில், குறுகிய கால்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். சக்திவாய்ந்த இந்த விநாயகர் முன்பு இருந்துதான், பூசாரி (கோவில் அர்ச்சகர்) நோய் வாய்ப்பட்டு வரும் குழந்தைகளுக்கு, திருநீறு அளித்தும், மை இட்டும், வேர் கட்டியும் வருகிறார்

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.