புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும், அங்கு இருக்கும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் ஆகும்.
புரட்டாசி மாதத்தில், சூரியன் 'கன்னி' ராசியில் பெயர்ச்சியாகி தென்திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது. தென்திசை என்பது 'எமதர்மன்' இருக்கும் திசையாகும்.
புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். புதனின் நட்புக்கிரகம் சனி. எனவே இவரை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கும்.
புதன் சகல கலைகளிலும் வல்லவர். புதன் புத்திக்கூர்மை, கற்றல் போன்றவற்றுக்கு அதிபதி. ஆகையால் இவரை வழிபடுகிறவர்களுக்கு அறிவைக் கொடுப்பார்.
புரட்டாசி பௌர்ணமி
புரட்டாசி மாத பிறப்பு மட்டுமல்ல.. புரட்டாசி பௌர்ணமியும் கூட..
புரட்டாசி மாத பௌர்ணமியில் பெருமாளையும், குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களைப் பெறலாம்.
புரட்டாசி பௌர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பௌர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சியளித்தாள்.
புரட்டாசி மாதத்தில் செய்ய வேண்டியவை
பெருமாள் வழிபாடு
நவராத்திரி பூஜை
இந்த மாதத்தில் வரும் நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில் குழந்தைகளுக்கு புதிதாக கல்வி கற்றுக் கொள்ள தொடங்குவது சிறந்தது.
புரட்டாசி மாதத்தில் செய்யக் கூடாதவை
புதிய வீடு வாங்குதல்
புதிதாக தொழில்/வியாபாரம் தொடங்குதல்
கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல்
வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்யப் படுவதில்லை.
ஏன் புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது?
புரட்டாசி மாதத்தில் வெயிலும், காற்றும் குறைந்து மழை பெய்ய ஆரம்பிக்கும்.
இவ்வளவு மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இம்மாதம் சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை பாதிக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.
அதுமட்டுமின்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் ஆகியவை நோய் கிருமிகளை உருவாக்கி விடும். அதனால் காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும்.
இதை துளசி கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
ஓம் நமோ நாராயணா