Breaking News :

Thursday, November 21
.

"ரங்கநாதன் தங்கை" சமயபுரத்தாள் ஏன்?


கம்சனால் சிறை படுத்தப்பட்டிருந்த தேவகி மணி வயிற்றில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவதரித்தார். அசரீரி சொல்படி வாசுதேவர் தேவகிக்குப் பிறந்த கண்ணனை கொட்டும் மழையில், ஆதிசேஷன் குடைபிடிக்க, பிருந்தாவனத்தில் உறங்கிக் கொண்டிருந்த யசோதை அருகில் விட்டு, யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கொண்டுவந்து, தேவகிக்கு அருகில் வைத்து விடுகிறார்.

மறுநாள் காலை அந்தப் பெண் குழந்தையை, தன்னை சம்ஹாரம் செய்ய தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை என்று எண்ணி, கம்சன் கொல்ல முற்படும்போது, அவன் கையிலிருந்து அக்குழந்தை விடுபட்டு "உன்னைக் கொல்லப் பிறந்தவன், பிருந்தாவனத்தில் நந்தகோபருக்கும், யசோதைக்கும் மகனாக வளர்கிறான்" என்று சொல்லி மறைந்தது. இந்தக் குழந்தையே வைணவி என்ற மாரியம்மன்.

வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். (அது தற்போதுள்ள சமயபுரம்). பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

 (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்).

அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபட்டனர். அவளே தாயாக இருந்தது பக்தர்களை ரக்ஷித்துக்கொண்டிருகக்கும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்
அதனால்தான் அவள் "ரங்கநாதன் தங்கை" என்று அழைக்கப் படுகிறாள். வருடாவருடம், ஸ்ரீரங்கநாதர், தன் தங்கையான சமயயபுரத்தாளுக்கு சீர் அனுப்பும் வைபவமும் நடைபெறுகின்றது.

சமயபுரம் கோவில் இன்றும் ஸ்ரீரங்கம் தேவஸ்தானத்துக்கு உட்பட்டதே.

அம்மா..வல்லமை தாராயோ, தாயே....
மாரியம்மன் வாசலிலே மண்ணெல்லாம் திருநீறு
அம்மா, சமயபுரத்தாளே....சரணம் தாயே.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.