சனீஸ்வரனுக்கு பிடிக்காத தெய்வங்களாக விநாயகரையும், ஆஞ்நேயரையும் சொல்வார்கள். இவ்விரு தெய்வங்களை வழிபடுபவர்களை சனீஸ்வரனின் கெடு பார்வை ஒன்றும் செய்யாது என்பார்கள். ஆனால் ஆஞ்சநேயரையும் சனீஸ்வரன் விட்டு வைக்கவில்லை. பொதுவாக ஏழரை சனி பிடித்தவர்கள் தான் பாடாய் படுவார்கள். ஆனால் ஆஞ்நேயரை பிடித்து விட்டு சனி பகவான் படாத பட்ட கதையை தான் இங்கே பார்க்கலாம்.
ராமாயணத்தில் ராவணனிடம் சிறைபட்டிருக்கும் சீதா பிராட்டியை மீட்பதற்கு ராமனுக்கு, சுக்ரீவன், அனுமன் உள்ளிட்ட வானர சேவைகள் உதவி செய்து கொண்டிருந்தன. இலங்கையை அடைவதற்காக சேது பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. குரங்கு கூட்டம் தங்களால் முடிந்த சிறிய மற்றும் பெரிய கற்களை கடலில் வீசிக் கொண்டிருந்தன. சில வானரங்கள் மரங்களை பெயர்த்தி எடுத்து வந்து போட்டுக் கொண்டிருந்தன.
அனுமன், ஒவ்வொரு பாறையிலும் ஸ்ரீ ராம நாமத்தை எழுதி கடலில் போட்டுக் கொண்டிருந்தார். ராமனும், லட்சுமணரும் பாலம் அமைக்கும் பணிகளை பார்த்தபடி, அனைவரும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் முன் தோன்றிய சனீஸ்வரன், "சுவாமி, அனுமனுக்கு ஏழரை சனி பிடிக்கும் காலம் நெருங்குகிறது. உங்களின் அனுமதியுடன் அவரை நான் பிடித்து கொள்ளலாமா?" என அனுமதி கேட்டார். ராமனும், "எங்கள் வேலையை நாங்கள் செய்வது போல் உங்கள் வேலையை நீங்கள் செய்ய வந்துள்ளீர்கள். உங்களால் முடிந்தால் அனுமனை பிடித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
ராம - லட்சுமணரிடம் விடை பெற்று அனுமனிடம் சென்ற சனீஸ்வரன், "அனுமனே வணங்குகிறேன். தங்களை ஏழரை சனி பிடிக்கும் காலம் நெருங்குகிறது. அதனால் உங்களை பிடித்துக் கொள்ள உங்கள் உடலில் ஏதாவது ஒரு இடத்தை கொடுங்கள்" என கேட்டுள்ளார். அதற்கு அனுமனோ, "சனீஸ்வரனே! நான் தற்போது சீதா தேவியை மீட்பதற்காக ராமனுக்கு உதவியாக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இந்த பணிகள் முடிந்து சீதா தேவியை மீட்ட பிறகு நானே உங்களைத் தேடி வருகிறேன். அப்போது என் உடல் முழுவதையும் கூட நீங்கள் பிடித்துக் கொள்ளலாம்" என்றார்.
"அஞ்சனை மைந்தனே...சிவ பெருமானின் மறு உருவமே...தாங்கள் அறியாதது அல்ல. எதற்கும் ஒரு கால வரையறை உள்ளது. அதற்கு நீங்களோ, நானோ யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அதனால் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் உங்களுடைய உடலில் எந்த பாகத்தை நான் பிடிக்க வேண்டும் என சொல்லுங்கள்" என்றார் சனீஸ்வரன்.
இதை கேட்ட அனுமன், "சரி நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். எனது கைகள் தற்போது ராமருக்காக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது அதனால் அங்கு இடம் தர முடியாது. பாதத்தில் இடம் கொடுத்தால் அது உங்களை அவமரியாதை செய்தது போலாகி விடும். எண் சாண் உடம்பிற்கு சிரமே பிரதானம். அதனால் எனது தலையில் அமர்ந்து கொள்ளுங்கள்" என்றார். அனுமன் அனுமதி அளித்ததால் அவரிடம் தலையில் ஏறி அமர்ந்து கொண்டார் சனீஸ்வரன்.
அதுவரை சிறிய பாறைகளை தூக்கிச் சென்ற அனுமன், சனீஸ்வரன் தனது தலை மீது ஏறிக் கொண்ட பிறகு பெரிய பெரிய மலைகளை புரட்டி, தனது தலையில் சுமர்ந்து எடுத்துச் சென்று கடலில் போட துவங்கினார். அனுமனின் தலையில் அமர்ந்திருந்ததால் மலைகளின் பாரத்தை சனீஸ்வரன் சுமக்க வேண்டியதாயிற்று. தனக்கே ஏழரை சனி பிடித்து விட்டதோ என்ற சந்தேகம் வந்து விட்டது சனீஸ்வரனுக்கு. ஒரு கட்டத்தில் மலைகளின் பாரத்தை தாங்க முடியாமல் அனுமனின் தலையில் இருந்து கீழே இறங்கி விட்டார் சனீஸ்வரன்.
இதை கண்ட ஆஞ்சநேயர், "என்ன சனீஸ்வரரே...என்னை ஏழரை ஆண்டுகள் பிடிக்க போவதாக சொல்லி இடம் கேட்டீர்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இறங்கி விட்டீர்களே" என்றார். அதற்கு சனீஸ்வரன், "நீங்கள் கைலாயத்தில் சிவனாக இருக்கும் போது உங்களை பிடித்து வெற்றி கண்டேன். ஆனால் இப்போது உங்களை பிடிக்க முடியாமல் தோற்று விட்டேன்" என்றார். அதற்கு ஆஞ்சநேயர், "நீங்கள் தோல்வி அடையவில்லை. ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வந்த நீங்கள் ஏழரை நாழிகைகள் என்னை பிடித்து உங்கள் பணியை சரியாக செய்து விட்டீர்கள்" என்றார்.
ஆஞ்சநேயரின் இனிய சொற்களால் மகிழ்ந்த சனீஸ்வரன், "ஆஞ்சநேயா! உன்னை பிடிக்க வந்து உன் தலையில் அமர்ந்து உனக்கு பதில் சேது பாலம் அமைப்பதற்கான பாறைகளை என் தலை மீது தாங்கியதால் நானும் உன்னால் புண்ணியம் அடைந்து விட்டேன். உனக்கு என்ன வேண்டும். கேள்." என்றார். "யார் ஒருவர் பக்தி சிரத்தையோடு ராம நாமத்தை உச்சரிக்கவோ அல்லது மனதால் நினைக்கவோ செய்கிறார்களோ அவர்களை நீங்கள் பிடித்தாலும் துன்பம் தராமல் உங்களின் அருளை தர வேண்டும்" என கேட்டார் ஆஞ்சநேயர்.
ஆஞ்சநேயருக்கு அளித்த வரத்திற்கு கட்டுப்பட்டே, அனுமனை வணங்குபவர்களையும், ராம நாமத்தை சிந்திப்பவர்களையும் சனியின் கெடு பார்வை ஒன்றும் செய்வதில்லை. சனியின் பிடியில் சிக்கி தவிப்பவர்கள், அனுமனை வழிபட்டு ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்து வந்தால் எந்த சூழலிலும் அவர்களை எந்த துன்பங்களும் நெருங்காது.