Breaking News :

Wednesday, August 06
.

சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருக்கருக்குடி


சிவஸ்தலம் பெயர் திருக்கருக்குடி. தற்போது மருதாந்தநல்லூர் என்று வழங்கப்படுகிறது.

இறைவன் பெயர் சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்

இறைவி பெயர் அத்வைத நாயகி, சர்வலங்கார நாயகி, கல்யாணநாயகி
பதிகம் திருஞானசம்பந்தர் - 1

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டைக்கு தென்கிழக்கில் 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கி.மீ.தொலைவிலுள்ள இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு: சிறிய பழைமையான கோயில். கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பாகும். கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை. வாயிலில் விநாயகர், கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் உள்ளது அநுமத்லிங்கம். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், இருபுறம் பூதகணங்கள், தட்சிணாமூர்த்தி (மேலே வீணாதர தட்சிணாமூர்த்தி), லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரக சந்நிதி. சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர்.

இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபபட்டுள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
சுவாமிக்கு வலது புறத்தில் கிழக்கு நோக்கி கல்யாண கோலத்தில் அம்பிகை அமர்ந்துள்ள தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். 8 வெள்ளிக்கிழமைகள் இந்த அம்பாளுக்கு பால் பாயசம் நிவேதனம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டால் ஆண், பெண் இருபாலாருக்கும் விரைவில் திருமணத் தடை நீங்கி கல்யாணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகவே இது ஒரு திருமண பிரார்த்தனைத் தலம்.

இராமேசுவர வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும் என்றும் கூறப்படுகிறது. இன்றும் லிங்கத் திருமேனியில் கரங்களின் அடையாளம் உள்ளது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது கவசம் அணிவித்த பின்னரே அபிஷேகம் நடைபெறுகிறது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் ஈசான்ய பாகத்தில் அனுமந்த லிங்கம் என்ற பெயரில் தனி சந்நிதியில் உள்ளது.

இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு. தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தலத்து குளத்தில் மூழ்கி இத்தல இறைவனையும் இறைவியையும் வேண்டி தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்தும் தொழுநோய் கொடுமையில் இருந்தும் விமேசனம் பெற்றான். அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது. எனவே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் பலன் நிச்சயம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

ஆலய முகவரி அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
மருதாநல்லூர்
மருதாநல்லூர் அஞ்சல்
திப்பிராஜபுரம் S.O.
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612402

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub