Breaking News :

Friday, March 14
.

சத்தியமூர்த்தி பெருமாள் கோயில், திருமெய்யர்


1) 108 திவ்யதேசங்களில் உள்ள 28 திவ்யதேசங்களில் சயனித்திருக்கும் அனந்தசயன பெருமாளில் மிகப்பெரியவர் ஸ்ரீ திருமெய்யர்  ( 33 அடி நீளம்)

2). நின்ற கோல பெருமாளான ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் சுயம்பு மூர்த்தி ஆவார்

3)தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர் வீற்றிருப்பது திருமயம் ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில்

4).விசாகம் நட்சத்திரம் பைரவரான திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர் வடக்கு திசை பார்த்து தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

எப்போதும் பரந்தாமனுடனேயே இருக்கும் பேறு பெற்றவன் ஆதிசேஷன். ‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம்’ என்றபடி பெருமாளின் மிகச் சிறந்த பாதுகாவலனாகத் திகழ்ந்தவன்.

பிரபஞ்சத்தையே ஆளும் பெருந்தகைக்கு வெயில் படாமலும் மழை பாதிக்காமலும் அவர் செல்லுமிட மெல்லாம் உடன் பாதுகாப்பாகச் செல்வதிலும் அவர் அமர்ந்தபோது சிம்மாசனமாகவும் படுக்கும்போது ‘பைந்நாகப் பாயாக’வும் தான் விளங்குவதில் அவனுக்குள் கொஞ்சம் கர்வம் தலை தூக்கியது.

இந்தப் பேறு வேறு யாருக்குக் கிடைத்தது என்ற இறுமாப்பு மனசில் கொஞ்சம் கருமை வண்ணம் பூசியது. ஆனால், உடனேயே திருமாலுடன் ஸ்பரிச தொடர்பு கொண்டிருந்ததால், தன்னுடைய இந்தத் தீய எண்ணம் குறித்து அவனுக்கே அவ்வாறு பெருமை கொள்வது தவறு என்று புரிந்தது.
 பெருமாளுடன் கூடவே இருந்தும் இப்படி ஓர் எண்ணம் தனக்கு உருவானதற்காக அவன் வெட்கப்பட்டான்.

தனக்கு எல்லாமே திருமால்தான் என்றே வாழ்ந்திருந்த அவன், அவரையே தஞ்சமடைந்து, தடம் பிறழ்ந்த சிந்தனை தனக்கு ஏற்பட்டதற்கு பிராயசித்தம் அருளுமாறு கேட்டுக்கொண்டான். அவரும் தவம் இயற்றி தன் எண்ணத்தைப் பூர்த்தி செய்துகொள்ளுமாறு ஆதிசேஷனுக்கு அறிவுறுத்தினார்.

 உடனே அவன் தன் ஆயிரம் தலைகளை ஐந்தாகக் குறைத்துக்கொண்டான், பருத்த உடலை மெலிய வைத்துக்கொண்டான். நீளத்தையும் சுருக்கிக் கொண்டான். உடனே பூமியைக் குடைந்து தன் தவத்திற்கான இடம் தேடும் பயணத்தை மேற்கொண்டான்.

 திருமெய்யம் என்ற இந்தக் குறிப்பிட்ட இடம் வந்ததும் நின்றான், நிமிர்ந்தான், பூமியைப் பிளந்துகொண்டு மேலே வந்தான்.

அவ்வாறு அவன் வந்த இடம் பள்ளமாக, அந்தப் பள்ளமே, ஒரு நதிக்கு வழி கொடுத்தது. அந்த நதி, பாம்பாறு எனப்படும் சர்ப்ப நதியாகும். (திருமயம் நகரின் தலை வாசல் இதுவே ஆகும்).
ஆதிசேஷன் வெளிப்பட்ட இந்தத் தலம் சத்திய க்ஷேத்திரம் ஆயிற்று.

பக்கத்தில் இருந்த மலை, சத்திய கிரி ஆயிற்று. இம்மலைக்கு அருகில் உள்ள சத்திய புஷ்கரணியில் நித்தமும் நீராடி, எம்பெருமானைக் குறித்து கடுந்தவம் இயற்றினான், ஆதிசேஷன்.

 இவனுடைய தவத்தை மெச்சிய பரம் பொருள், ஹயக்ரீவ அவதாரம் கொண்டு அவன்முன் தோன்றினார். அவர் தோற்றம் கண்டு பேருவகை கொண்டான் ஆதிசேஷன்.
தான் வழக்கமாகக் காணும் திருமால் இப்போது குதிரை முகத்தினராக, கலை, கல்விகளுக்கெல்லாம் அதிபதியாகத் தோன்றியது அவனுக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது.
அவருக்கு தன் உடலை ஆசனமாக்கினான். தன் ஐந்து தலைகளையே புஷ்பங்களாக்கி அவர் அடி தொழுது பூஜித்தான். வாசம் மிகுந்த வாய்க் காற்றினால் தூபமிட்டான். தன் உடலிலிருந்த ரத்தினங்களால் தீபாராதனை செய்தான். நாக்குகளால் ஆலவட்டம் வீசினான். படங்களால் குடை பிடித்தான். மானசீகமாக நிவேதனம் செய்து ஆராதித்தான். இது கண்டு மகிழ்ந்த திருமால் அவனுக்குள் இனி, எந்தத் தீய எண்ணமும் படம் எடுக்காதபடி அனுக்ரகித்தார்.

கூடவே, வேறு ஏதேனும் அருள வேண்டுமா என்றும் கேட்டார். உடனே பாற்கடலில் தன் மீது பெருமாள் எவ்வாறு சயனம் கொண்டருள்வாரோ, அதே கோலத்தை இந்தத் தலத்திலும் அருளி, பக்தர்களை உய்விக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் ஆதிசேஷன். அவ்வாறே இறைவன் எழிலுரு கொண்டு அவன் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார்.

 தன்னால் திருத்தப்பட்ட ஆதிசேஷனை, பெருமாள் தன் வலது கரத்தால் அணைத்தபடி சயனக் கோலம் கொண்டிருக்கும் காட்சி, அவர் அவன் மீது கொண்டிருக்கும் பேரன்பினை உணர முடிகிறது.

ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனே இந்தப் பெருமாளை அனுதினமும் வழிபடுகின்றான் என்றால், இரண்டே கரங்கள் கொண்ட நாம்தான் எவ்வா றெல்லாம் ஆராதிக்க வேண்டும் என்று வியக்கிறார், திருமங்கையாழ்வார். அவ்வாறு ஆராதிக்காத கையெல்லாம் கையல்ல என்றும் கோபிக்கிறார்:

“மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கை தொழாக் கையல்ல கண்டோமே”.

திருமெய்யம் திவ்யதேசத்தை திருமங்கையாழ்வார் ஒருவர் மட்டும் பத்துப் பாடல்களால் மங்களாசாஸனம் செய்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மெய்யர் என்றும் சத்திய மூர்த்தி என்றும் போற்றப்படும் இந்தப் பெருமாள், இரு கோலங்களில் நம்மை ஈர்க்கிறார். ஒன்று கிழக்கு நோக்கி நின்ற கோலம்; இன்னொன்று ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலம். இரண்டாவதான சயனக் கோலம் 28 சயன கோலபெருமாளிலேயே மிக பிரமாண்டமானது.

இந்தக் கருவறைக்குள் பிரம்மா முதலான அனைத்து தேவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். படுத்திருக்கும் பெருமாளுக்குச் சற்று மேலாக தீஜ்வாலைகள் செல்கின்றன. இந்த தீஜ்வாலை, ஆதிசேஷன் கக்கியவை. ஆமாம், இந்தப் பெருமாளுக்குப் பாதுகாவலனாகப் பணி மேற்கொண்டிருக்கிறான் ஆதிசேஷன்.

ஒருசமயம், சில அரக்கர்கள் பெருமாளைத் துன்புறுத்த எண்ணம்கொண்டு வர, அவர்களைத் தன் தீஜ்வாலையால் விரட்டி அடித்தானாம் ஆதிசேஷன். அந்தக் காட்சி இங்கே தத்ரூபமாக அமைந்திருக்கிறது. இந்த ஜ்வாலை தன் மீது படாதபடி சற்றே விலகி அமர்ந்திருக்கும் பூமாதேவியும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சாட்சியாக விளங்குகிறாள்.

ஒரு நேர்பார்வையால் இந்தப் பெருமாளை முழுமையாக தரிசித்துவிட முடியாது. அர்ச்சகர் தீபஒளி வழிகாட்டலில் பார்வையைத் தொடரவிட்டால், பெருமாளின் சிரம் முதல் பாதம் வரையிலான சுமார் 33 அடி திருமேனியைப் பகுதி பகுதியாக தரிசித்து மகிழலாம்.

முதலாவதான நின்ற கோலம், ( சத்தியமூர்த்தி)
சயனப் பெருமாள் சந்நதிக்கு வலதுபுறத்தில் சேவை சாதிக்கிறது. இதற்கு நாம் கருடனுக்குதான் நன்றி சொல்லவேண்டும்.

பின்னாளில் பெரிய திருவடி என்று போற்றப்பட்ட கருடன், தன் தாயான வினதையின் அடிமைத் தளையை உடைத்தெறிய திருமாலின் அருள் வேண்டி, இத்தலத்துக்கு வந்து அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து கடுந்தவம் இயற்றினான்.

இந்த தவத்தின் நோக்கம், தன் தாயாரின் சக்களத்தியான கத்ருவிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தாயைக் காப்பாற்ற, கத்ரு ஆணையிட்டபடி தேவலோகத்து அமிர்தத்தைக் கொண்டுவருவதுதான்.

தன் தவப்பயனாக, திருமாலின் திருவருளால் அமிர்த கலசம் பெற்று அதனை கத்ருவிடம் சமர்ப்பித்துத் தன் தாயை மீட்டான், கருடன். இந்த சம்பவத்தில் தனக்கு அருட்காட்சியளித்த சத்தியமூர்த்தியாகிய திருமாலை, அதே கோலத்தில் இதே தலத்தில் அர்ச்சாவதார மூர்த்தியாக நிலை கொண்டு, அனைத்து பக்தர்களுக்கும் அமிர்த அருள் பொழிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

 அந்தப் பெருமாளைத் தான் நாம் இப்போது தரிசித்து மகிழ்கிறோம். இந்த இரு பெருமாள்களுக்கு முன்னாலேயே நம்மை தன் கருணைக் கண்களால் வரவேற்று அந்த பார்வையாலேயே பெரும் பாக்கியம் அருள்கிறார், உய்யவந்த தாயார். ஆமாம், நம்மை உய்விக்க வந்த தாயார்.

உஜ்ஜீவனத் தாயார் என்று வடமொழியில் போற்றப்படும் இந்த அன்னை, நம் ஜீவனை மட்டுமல்லாது நம் ஆத்மாவையும் உய்விக்கவல்லவர் என்பதை அந்த சந்நதிமுன் நிற்கும்போது, சிலிர்ப்புடன் உணரமுடிகிறது. லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சந்நதிகளும் நம் உள்ளுணர்வுகளுக்குள் ஊடுருவிச் செல்லும் தரிசனம் அருள்கின்றன;

 மனதுக்கு இதம் அளித்து நன்மைகளைப் பெருக்குகின்றன. அநுசூயா தேவியின் வேண்டுகோளின்படி, அவளுக்கும், கணவர் அத்ரி முனிவருக்கும், சந்திரன், தத்தாத்ரேயர், துர்வாச முனிவர் ஆகிய மூவரும் புதல்வர்களாக அவதரித்தார்கள். உரிய வயதில் அவர்களுக்கு மந்திரோபதேசம் செய்த அத்ரி முனிவர் அவர்களை வெவ்வேறு திக்குகளுக்கு தவம் செய்ய அனுப்பி வைத்தார்.அவர்களில் சந்திரன், இந்த சத்திய கிரிக்கு வந்து திருமாலை நோக்கி தவம் மேற்கொண்டார். தவத்தின் சிறப்பால் திருமால் அவன் முன் தோன்றினார்.

அவரது ஒரு கரத்தில் தயிர் அன்னம், இன்னொரு கரத்தில் அமிர்த கலசம். வாமன உருவம். இப்படி ‘ததிவாமனன்’ என்ற திருப்பெயருடன் காட்சி தந்த அவரை, அதே கோலத்தில் நிரந்தரமாகத் தன் சந்திரமண்டலத்தில் காட்சியளிக்கும்படி கேட்டுக்கொண்டான். இப்போது பூரண சந்திரனில் நாம் காணும் ‘நிழல்’, இந்தக் கோலம்தான் என்றும் வர்ணிப்பார்கள். இந்த ததிவாமனரின் சந்நதியை சத்திய தீர்த்தத்துக்கு தெற்கே காணலாம். இந்த சன்னிதி முற்றிலும் சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். சந்திரன் முயற்சியால் எழுந்ததல்லவா இந்த சன்னிதி!

இந்த திருக்கோவிலுடன் சேர்ந்தார் போல உள்ளது ஸ்ரீ வேணுவனேஸ்வரி சமேத ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ஸ்ரீ வேணுவனேஷ்வரி - மூங்கில் காட்டு அரசி ஆவாள்
. ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் சன்னிதி மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளதால் தனி விமானம் கிடையாது. இவரை பார்த்து உள்ள நந்தி புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய நந்தி சிலை ஆகும். இத்திருத்தலத்தில் தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர் வீற்றிருக்கிறார்.

இரு திருக்கோவில்களின் காவல் தெய்வங்களாக வடக்கு திசையை - ஸ்ரீ கோட்டை பைரவர் ( விசாகம் நட்சத்திரம் பைரவர் - வடக்கு திசை பார்த்தவர் இவர் ஒருவரே) கிழக்கு திசையை ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ கணபதியும் தெற்கு திசையை ஸ்ரீ கோட்டை முனீஸ்வரரும் மேற்கு திசையை ஸ்ரீ கோட்டை கருப்பரும் காவல் காத்து வருகிறார்கள்.

ஓர் உயர்ந்த கோட்டையின் பின்னணியில் பொலிகிறது ராஜகோபுரம். கோட்டை அடிவாரத்தில் ஒரு பைரவர் கோயில். பொதுவாக சிவன் கோயில்களில், அந்தக் கோயிலின் பாதுகாவலராக பைரவர், கோயிலுக்குள்ளேயே இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.

இங்கே, சத்யமூர்த்திப் பெருமாள் கோயிலுக்கு வெளியே இவர் கோயில் கொண்டிருப்பது, கோயிலோடு, முழு கோட்டையையுமே தன் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கி றார் என்பதைப் புரியவைக்கிறது. அதாவது கோயிலுக்குள் ஆதிசேஷன் பாதுகாவலன், வெளியே பைரவர்! இது திருமெய்யம் கோட்டை பைரவர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவ-வைணவ ஒற்றுமையை, திருமங்கையாழ்வாரும் ஒரு பாசுரம் இயற்றி சான்றளித்துள்ளார்:
“சுடலையில் சுடுநீறன் அமர்ந்ததோர்.

நடலை தீர்த்தவனை நறையூர்கண்டு என்
உடலை உள்புகுந்து உள்ளம் உருக்கி உண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துளே”

-என்கிறார். அதாவது, சுடுகாட்டில் படர்ந்திருக்கும் சாம்பலை எடுத்துப் பூசிக்கொள்ளும் சிவபெருமானின் துன்பத்தை நீக்கிய இந்த எம்பிரானை முத லில் திருநறையூரில் கண்டு உளம் குளிர்ந்தேன்; பின்பு தன் அழகாலும் பண்பாலும் என்னைக் கவர்ந்ததோடல்லாமல், என்னை அப்படியே உருக்கி உண்ணக்கூடிய பேரெழிலுடன் பெருமாளை இந்த திருமெய்யத்திலும் தரிசித்து மகிழ்கிறேன் என்று பாடிப் பரவசமடைகிறார்.

தான் நினைக்கும்போதெல்லாம் திருமால் தனக்குத் தரிசனம் அருளவேண்டும் என்ற பேராசையை தன் தவம் மூலமாகத் தெரிவித்தார் சத்தியத்தவர் என்ற முனிவர். அதை அவ்வாறே ஏற்றுக்கொண்ட திருமால் அப்படி ஒரு பாக்கியத்தை அவர் திருமெய்யம் தலத்திற்குச் சென்றால் அடையலாம் என்று ஒரு சிறு நிபந்தனையையும் கூறினார்.

முனிவர், இமயமலை அடிவாரத்தில் ஆசிரமம் கொண்டு வாழ்ந்து வந்தவர். அங்கே ஓடும் புஷ்பத்திரை என்ற நதியில் நீராடி, பத்ரவடம் என்ற ஆலமரத்தின் அடியில் சித்ரசிலை என்ற பாறை மீதமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்துபோவார்.

இவரை இப்படி திருமெய்யத்துக்கு வரச்சொன்னால் வருவாரா என்று சோதித்துப் பார்க்க பரந்தாமன் உளங்கொண்டார் போலிருக்கிறது. ‘‘நான் மட்டும் தங்களது திவ்ய தரிசனத்தை நித்தியம் அனுபவிக்க என் மனம் இடம் தரவில்லை. என் வாழ்வோடு ஒன்றிப்போய்விட்ட புஷ்பத்திரை, பத்ரவடம் மற்றும் சித்ரசிலை ஆகிய மூன்றுக்கும்கூட இந்தப் பேறு கிட்டவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். பெருமாளும் அப்படியே அருள, அவை இங்கே சத்திய தீர்த்தமாகவும் அரசமர மாகவும் மெய்ய மலையாகவும் இன்றளவும் காட்சியளிக்கின்றன.

திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்
திருச்சி To இராமேஸ்வரம்
மதுரை To தஞ்சாவூர் இரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்திடும் மத்தியில் உள்ள முக்கியமான ஊர்
திருமயம் To புதுக்கோட்டை - 20 கி.மீ
திருமயம் To காரைக்குடி  - 25 கி.மீ
திருமயம் To மதுரை 80 கி.மீ
திருமயம் To தஞ்சாவூர் 80 கி.மீ
திருமயம் To மதுரை 80 கி.மீ
திருமயம் To திருச்சி  75 கி.மீ

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.