Breaking News :

Thursday, November 21
.

மனதுக்கு பிடித்த ஸ்டோரி: பரிசு


ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும் போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

ஆர்வமுடன் அதை கேட்ட மன்னன், அவனுக்கு நன்றி கூறி அதை வாங்கி குடித்தான். ஒரு வாய் குடித்தவன் சற்று நிறுத்த அந்த இளைஞன் ஆர்வமுடன் அவரது ரீயாக்ஷனை கவனித்துக் கொண்டிருந்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தியதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு, ராணி அரசனை கோபித்துக் கொள்கிறாள்.

“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்? நான் கேட்க கேட்க காதில் வாங்கிக் கொள்ளாமல் மொத்தம் நீரையும் குடித்து விட்டீர்களே…”

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”

அரசன் சொல்ல, அந்த தோல் பையை எடுத்து பார்க்கிறாள். ஆம்… அதில் இன்னும் கொஞ்சம் நீர் இருக்கிறது.

ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“இந்த தண்ணீரையா நீங்கள் உலகிலேயே சிறந்த நீர் என்று மெச்சிக்கொண்டீர்கள்? என்ன ஆயிற்று உங்களுக்கு??”

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறி விட்டது. அவன் இருக்கும் போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப்பட்டிருக்கும். அன்பை விட சுவையானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நானே முழு நீரையும் குடித்தேன்” என்று விளக்கமளிக்கிறான்.

ராணி வெட்கி தலை குனிகிறாள்.

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல.  அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் அதுவே பெரிய புண்ணியம்தான். மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தர வேண்டும். இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும் போது அவை வெறும் வார்த்தையாக நின்று விடாமல் செயலிலும் நன்றியை காட்ட வேண்டும். அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள். யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.