அந்த காலத்தில் இராஜாக்கள் சித்தர்களின்/மகான்களின் அருளாசியோடு ஆலோசனைப்படி ஆட்சி செய்து வந்ததுடன் அவர்கள் சொன்ன முறைப்படி அவர்களுக்கேற்ற சக்தி கூட்டும் ஸ்வாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து அந்த இறைவனை உளமார வணங்கி வெற்றி வாகை சூடி வந்தனர். அதனால் அந்த ஆலயங்கள் சக்தி நிறைந்தவைகளாய் விளங்கின. இன்னும் பல ஆலயங்கள் சித்தர்கள் ஜீவ சமாதிகளோடு விளங்குவதால் அவைகளும் அபரிமிதமான சக்தி நிறைந்தவையாய் விளங்கின.
சாதாரண மனிதன் எழுப்பும் ஆலயங்களை விட சித்தர்கள் தாங்கள் வணங்கி வந்த உபாசனை தெய்வத்திற்கு எழுப்பியுள்ள ஆலயங்கள் அவர்கள் இறைவனுக்கு தினசரி மூலிகைகளால், வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து அதற்கான சக்தி நிறைந்த மந்திரங்கள் சொல்லி உரு ஏற்றி வைத்திருக்கும் சக்தி மற்றும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவர்கள் செய்த தியானம், மந்திர உச்சாடனம், செய்யும் தான தர்மங்கள், செய்து வரும் நற்காரியங்கள் இவைகளால் அவர்கள் பெற்று வைத்து இருக்கும் சக்தி ஆகிய இரண்டும் சேர்ந்து மிகவும் சக்தி நிறைந்தவையாய் திகழ்கின்றன.
அதனால் அங்கு சென்று வழிபடும் போது அங்கு நிறைந்துள்ள அபரிமிதமான அதிர்வலைகளால் (நிரம்பப் பெற்று இருப்பதால்) அங்கு தொடர்ந்து சென்று வழிபட்டு வரும் போது அவர்களுக்கே தெரியாமல் நிறைய நல்லது நடக்க ஆரம்பிக்கும். அதனால் தான் சித்தர்களை, சித்தர்கள் கட்டிய ஆலயங்களை தரிசித்து விட்டு நேராக வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்வது. இது தான் அந்த ரகசியம். வேறு ஒன்றும் இல்லை.