இராஜவம்சத்து இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே! ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும். மாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே. அதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படு. அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர்.
பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், "உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்" என்று வேண்டினார். சிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். முன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே! நல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது. அதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார்.
உயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, "அவரது குலம் என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை சொல்லவே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ?" என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர். சபையில் அமர்ந்திருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார். மீண்டும் அதே ஸ்வரத்தை 'டொயிங்... டொயிங்... டொயிங்' என வாசித்துக் கொண்டேயிருந்தார். இதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டைசெய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது? இந்தப் பிரச்சனை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும்வண்ணம்சப்தத்தை ஏனெழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்? இதுதான் உங்கள் பதிலா?"
நாரதர் சொன்னார்,"அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை, முன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும், கோத்திரமும் இல்லை, நட்சத்திரம். அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை. அவர் அனைத்தையும் கடந்து இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே - அது சப்தம். இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன் முதலில் உருவானது சப்தம். அதன் பிறகே படைப்புகள் நிகழ்ந்தது. இவரும் அதேபோல் ஒன்றுமற்ற வெறுமையிலிருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார். இதை வெளிப்படுத்தும் வகையில்தான் நான் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்." என்றார்.