மார்கழி திருவாதிரையும், ஆருத்ரா தரிசனமும்...!
இந்த வருடம் ஆருத்ரா தரிசனம் 13.01.2025 அன்று வருகிறது. மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும்.
இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது மட்டுமின்றி இதே நாளில் தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார். இதே நாளில் தான் ஈசன் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.
இந்நாளிலேயே பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி இதனைக் கடைபிடிக்கின்றனர்.
திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். மார்கழி மாதம் என்பதே சிறப்பான மாதம்தான். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.
ஆருத்ரா தரிசனம் :
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும். நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான படைத்தல், அழித்தல், அருளல், மறைத்தல், காத்தல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு நாள் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடிய படி இருந்த திருமால் திடீரென்று, ஆஹா! அற்புதம்! அற்புதமான காட்சி! என்று மனமுருகி சத்தம் போட்டார்.
அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தேவியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். சுவாமி! என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன? என்றனர்.
திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன் என்றார் மகாவிஷ்ணு. மேலும் அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது.
நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா! என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு. ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார்.
அவருடைய உடல் அமைப்பு இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பல காலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒருநாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.