சிவஸ்தலம் பெயர்
திருக்கருகாவூர்
இறைவன் பெயர்
முல்லைவன நாதர்
இறைவி பெயர்
கர்ப்ப ரக்ஷாம்பிகை
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
முத்தி லங்குமுறு வல்லுமை
அப்பர்
குருகாம் வயிரமாங் கூறு
எப்படிப் போவது
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையிலுள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து தெற்கே சுமார் 7 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 20 கி.மி. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து வடகிழக்கே 20 கி.மி. தொலைவிலும, இத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கருகாவூர் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள், இதர வாகனங்கள் மூலமாக இத்தலத்தை சுலபமாக அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில்
திருக்கருகாவூர்
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 614302
தொடர்புக்கு : 04374 - 273502 , 273423.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 5-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
நிருத்துவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் இத்தலத்தில் வசித்து வந்தனர். ஒரு முறை நிருத்துவ முனிவர் ஒரு முக்கிய காரணமாக் வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் மனைவி வேதிகை அப்போது கர்ப்பமுற்று இருந்தாள். அக்காலம் நல்ல வெய்யில் காலமாதலால் வேதிகை மிகவும் களைப்புற்று வீட்டில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். ஊர்த்துவ முனிவர் என்ற மற்றொரு தவசீலர் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். வெய்யில் காலம் காரணமாக் அவரும் மிகவும் களைப்புற்று வீட்டில் இருப்பவர்களால் உணவும் தண்ணீரும் கிடைக்கும் என்று கருதி குரல் கொடுத்து கூப்பிட்டார். ஆனால் யாரும் வெளி வராதது கண்டு உள்ளே எட்டிப் பார்க்க வேதிகை அவருக்கு எதிர்புறமாக திரும்பிப் படுத்து உறங்கக் கண்டார். வேதிகை கர்ப்பமுற்று களைப்பால் படுத்து இருப்பதை அறியாத அவர் கோபமுற்று அவளை சபித்துவிட்டு சென்று விட்டார். விழித்து எழுந்த வேதிகை பார்ப்பதற்குள் அவர் வெகு தூரம் சென்று விட்டார். முனிவரின் கோபத்திற்கு ஆளாகி விட்ட அச்சத்தில் அவள் முல்லைவன நாதரையும் இறைவியையும் வணங்கி தன் கர்ப்பத்தைக் காப்பாற்றச் சொல்லி வழிபட்டாள். இறைவியும் வேதிகை பக்திக்கு மெச்சி அவள் கருவைக் காப்பாற்றி அருள் புரிந்தாள். ஊர் திரும்பிய நிருத்துவ முனிவர் நடந்தவற்றைப் பற்றி கேள்விப்பட்டு இறைவியை வணங்கி இத்தலத்திற்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள் யாவருக்கும் சுகப்பிரசவம் ஆகும்படியும், அவர்கள் கருவை காத்து ரட்சிக்கும் படியும் வரம் வேண்டினார். அவ்வாறே இறைவியும் வரம் அளித்து அருள் புரிந்தாள். அன்று முதல் இத்தலத்து இறைவி கரு காத்த நாயகி என்றும் கர்ப்ப ரட்சாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள்.
பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள்: பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள் என்று குறிப்பிடப்படும் 5 சிவஸ்தலங்களை ஒரே நாளில் 5 கால பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தால் இப்பிறவியில் செய்த சகல பாபங்களும் நீங்கி மறு பிறவி இல்லா நல்வாழ்வு கிட்டும் என்று அகஸ்திய முனிவர் கூறியுள்ளார். அந்த வகையில் திருக்கருகாவூர் ஸ்தலம் விடியற்காலை உஷத்காலம் (காலை 5-30 மணி முதல் 6 மணி வரை) வழிபாடு செய்ய வேண்டிய தலமாகும்.
சிவபெருமான் உமாதேவியுடனும் முருகனுடனும் இருக்கும் திருக்கோலம் சோமஸ்கந்தர் அருட்கோலம். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும். இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பு சில சிவாலயங்களில் தான் காணப்படுகிறது. இம்மூன்று சந்நிதிகளையும் ஒருசேர வலம் வர சுற்றுப் பிரகாரமும் உண்டு.
தலத்தின் சிறப்பு: 460 அடி நீளமும், 285 அடி அகலமும் உள்ள இக்கோவிலுக்கு கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரமும் தென் திசையில் மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது. கிழக்கு கோபுர வாயிலுக்கு வெளியே தேவலோகப் பசுவான காமதேனுவால உருவாக்கப்பட்ட ஷீரகுண்டம் என்ற தீர்த்தம் உள்ளது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் 3 நிலைகளை உடைய 2-ம் கோபுரம் வாயில் வரை நீண்ட மண்டபம் காணலாம். 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், இரட்டை நந்திகள் ஆகியவற்றைக் காணலாம். இங்கிருந்து உட்பிரகாரத்தை வலம் வரத் தொடங்கினால் நாம் 63 மூவர் சந்நிதி, நால்வர் சந்நிதி, நிருதி விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானை உடனாய ஆறுமுகர் சந்நிதி மற்றும் மகாலட்சுமி சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். கருவறைக்குள் கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாகத் தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக் கொடிகளின் தழும்பு இருக்கக் காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. இப்படி வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் தீராத வியாதிகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்டு அறிந்த உண்மை. வெளியில் இருந்து கொண்டுவரும் புனுகு சுவாமிக்கு சாத்த அனுமதி இல்லை. தேவஸ்தானமே அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு புனுகு சாத்துகிறது.
இறைவியின் சந்நிதி சுவாமி சந்ந்நிதிக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்து இறைவி கருகாத்த நாயகி என்றும் கர்ப்ப ரட்சாம்பிகை என்றும் அழைக்கபடுகிறாள். குழந்தைப் பேறு கிட்டவும், திருமணம் நடைபெறவும் இங்கு அம்பாள் கருகாத்த நாயகியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.
தலத்தின் சிறப்பு: திருமணம் கூடிவர படிக்கு நெய் மெழுகுதல்: திருமணம் கூடிவராத கன்னியரும், குழந்தை இல்லாத பெண்களும் இக்கோவிலுக்கு நேரில் வந்து அம்பாள் சந்நிதி படியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். குழந்தை பாக்கியம் பெற நெய் மந்திரித்தல்: திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு கர்ப்ப ரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை தம்பதிகள் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர விரைவில் கருத்தரிக்கும். சுகப்பிரசவம் ஆக: கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகபிரசவம் ஆவதற்காக கர்ப்ப ரட்சாம்பிகை திருப்பாதத்தில் வைத்துக் கொடுக்கப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி ஏற்படும் போது வயிற்றில் தடவினால் எந்தவித கோளாறுகளோ பேறுகால ஆபத்துக்களோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகபிரசவம் ஆகும்.
சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மூலவரைத் தவிர இங்குள்ள நந்தியும், தலவிநாயகரான கற்பக விநாயகரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள். பராந்த சோழன் மற்றும் ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன. பங்குனி மாத பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி சிவலிங்கத் திருமேனியில் படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
சிறப்புகள்
இங்கு தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.
முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.
காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று; அவை:- 1. கருகாவூர் - முல்லைவனம், 2. அவளிவணல்லூர் - பாதிரிவணம், 3. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம், 4. இரும்பூளை - பூளைவனம், 5. கொள்ளம்புதூர் - வில்வவனம் என்பனவாம். (இவ்வைந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கமும் வழக்கில் உள்ளது.)
ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது.
மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.
இங்குள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு, ஸ்ரீ கர்ப்பரக்ஷ£ம்பிகையின் திருவடியில் வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, சுகப்பிரசவமாகும்.
சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.
K.S.BALAMURUGAN.