Breaking News :

Thursday, November 21
.

ஸ்ரீராம தூத ஹனூமான் பிறந்த கதை


ஆஞ்சநேயர் என்றால் பிடிக்காத வரும் உண்டோ !!

ஸ்ரீராம நாமத்தின் மகிமையை நன்கு உணர்ந்தவர் ஹனுமன், எதற்கும் அஞ்சாதவர் வானர ஸ்ரேஷ்டர்

புத்திமான் பலவான் ஞானவான்  சொல்லின் செல்வர் என ஹனுமனை புகழ்ந்து கொண்டே போகலாம்.
ஸ்ரீராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஹனுமான் கண்டிப்பாக இருப்பார்.

ஒரு 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் எங்கு ஸ்ரீமத் ராமாயணம் உபந்யாசம் நடந்தாலும் அங்கு ஒரு சிறு பலகையோ அல்லது ஒரு ஆசனமோ வைப்பார்கள்.

காரணம் அந்த ஆசனத்தில் சூஷ்ம ரூபத்தில் ஸ்ரீ ராம தூத ஹனுமன் அமர்ந்து அழகாக ரசித்து கேட்பார். இப்போதும் கூட ஒரு சில இடங்களிலும் நான் பார்த்ததுண்டு.

கைலாயத்தில் பார்வதியும் சிவனும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

தேவீ காக்கும் கடவுளான ஸ்ரீமஹா விஷ்ணு என்னை ஒவ்வொரு யுகத்திலும் என்னை மறக்காமல் பூஜிக்கிறார் அதுவும் அவருடைய ஸ்ரீபரசுராம அவதாரத்தில் என்னுடைய ஆத்மார்த்தமான பக்தனாக என்னையே பூஜித்து என் நாமாவை இடைவிடாது கூறி வந்தார்.

அவர் இப்படி என்னை பூஜிக்க அவசியமே இல்லை அவரே பரம்பொருள் என்றாலும் என் மீது வைத்திருந்த அபரிமிதமான பிரியத்தால் தான் இதை செய்கிறார்.  

அதற்கு கைமாறாக த்ரேதா யுகத்தில் ஒரு குரங்கு வடிவத்தில் ஸ்ரீமஹா விஷ்ணுவின் பக்தனாக ஒரு சேவகனாக அவதரித்து அவரின் ஆசியை பெறப்போகிறேன் என்றார்.

இதிலிருந்தே ஸ்ரீமஹா விஷ்ணுவும் நானும் ஒன்றே என உலகத்தார் புரிந்து கொள்ளட்டும் என்றார் சிவ பெருமான்.

வாயு பகவானின் புத்திரரான ஆஞ்சநேயர், அவரது தாயார் அஞ்சனாவின் கதையுடன் தொடர்புடையது.

அஞ்சனா கிரி (அஞ்சனாத்ரி) மலைப் பிரதேசத்தில் அதாவது இப்போது இருக்கும் திருப்பதி மலை த்ரேதா யுகத்தில் அஞ்சனாத்ரி.

அஞ்சனா என்ற பெண் குரங்கிற்கும், கேசரி என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் ஹனுமன் அவதரித்தார்.

அதற்கு முன், பிரம்மாவின் சபையில் அஞ்சனா தேவி ஒரு அப்ஸரஸாக இருந்தாள்.
ஒரு முனிவரின் தவத்தை கலைத்ததற்காக அவள் சாபம் பெற்றாள்.


சிறிய வயதில் அஞ்சனை, ஒரு குரங்கு காலை ஆசனமிட்டு தவம் செய்து கொண்டிருப்பதை கண்டாள், அதை பார்த்தவுடன் குதூகலத்தில் அந்த குரங்கின் மீது பழங்களை தூக்கி எறிந்தாள்.

சட்டென்று அந்த குரங்கு முனிவராக மாறி தவம் கலைந்து எழுந்தது.

கடும் சினம் கொண்ட அந்த முனிவர், அஞ்சனா யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறி விடுவாள் என சாபமிட்டார்.  உடனே மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் அஞ்சனை.

மனமிறங்கிய முனிவரிடம் தனக்கு குரங்கு முகம் இருந்த போதிலும் தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும் அவள் கேட்டுக் கொண்டாள்.

சிவபெருமானின் அவதாரமே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்றும், அப்படி பிறந்தவுடன், தான் சாப விமோசனம் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள் முனிவரும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டார்.

பூமியில் அவதரித்த அஞ்சனை சாபம் பெற்ற அஞ்சனை பூமியில் பிறந்தாள்.

ஒரு காட்டில் வாழ்ந்த அஞ்சனை, ஒரு நாள் ஒரு ஆடவனை சந்தித்து அவன் மீது காதலில் விழுந்தாள்.
காதலில் விழுந்த அந்த தருணமே அவள் குரங்காக மாறினாள்.

அவள் அருகில் வந்த அந்த ஆண், தன்னை கேசரி என்றும், தான் குரங்குகளின் அரசன் என்றும் கூறினான்.

குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும் உரு மாற முடியும்,

குரங்காகவும் உரு மாற முடியும்.  இதை கண்டு ஆச்சரியமடைந்தாள் அஞ்சனை.
தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அஞ்சனாவிடம் அவன் கோரினான்.
அந்த காட்டிலேயே அஞ்சனாவும் கேசரியும் திருமணம் செய்து கொண்டனர்.

சிவபெருமானை நினைத்து ஆழ்ந்த தவத்தில் இருந்தாள் அஞ்சனை.  இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவளுக்கு வரம் ஒன்றினை வழங்கினார்.

முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, தாங்களே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள்.

மறுபக்கம், அயோத்யாவின் அரசனான தசரத சக்கரவர்த்தியும் கூட பிள்ளை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தார்.

இதனால் மனம் குளிர்ந்த அக்னி தேவன், அரசனிடம் புனிதமான பாயாசத்தை கொடுத்து, அதனை அவருடைய மனைவிகளுக்கு கொடுத்து தெய்வீக தன்மையுள்ள பிள்ளைகளை பெற்றுக் கொள்ளும் படி கூறினார்.

தன் மூத்த மனைவியான கௌசல்யாவிற்கு அந்த பிரசாதத்தை கொடுக்கும் போது,
அதில் சிறிதளவை கருடன் எடுத்துச் சென்றது. அஞ்சனா தவம் புரிந்த இடத்தருகே அந்த பாயாசத்தை அந்த கருடன் விட்டுச் சென்றது.
 
காற்றின் கடவுளான வாயுவிடம், அந்த பாயாசத்தை அஞ்சனாவின் கைகளில் இடுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை விழுங்கினாள்.
அதனை உண்ணும் போது சிவபெருமானின் ஸ்பரிசத்தை அவள் உணர்ந்தாள்.

அதன் பின் குரங்கின் முகத்தை கொண்ட ஒரு அழகான மகனை அவள் பெற்றெடுத்தாள்.
அக்குழந்தை சிவபெருமானின் ருத்ர அவதாரமாகும்.

அந்த குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது - ஆஞ்சநேயா (அஞ்சனாவின் மகன் என பொருள் தரும்), கேசரி நந்தனா (கேசரியின் மகன் என பொருள் தரும்), வாயுபுத்திரா அல்லது பவன் புத்திரா (காற்றின் கடவுளான வாயு தேவனின் மகன் என பொருள் தரும்). தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் ஹனுமான்.

தன் தந்தை கேசரி மற்றும் தாய் அப்சரஸ் அஞ்சனாவின் சக்திகளை அவர் பெற்றார்.
வாயு தேவனின் மகன் என்பதால் காற்றை போல் மிக வேகமாக செயல்பட்டார்.
ஒருநாள் கீழ்வானத்தில் தகதகவென உதயமான இளம்சூரியனைக் கண்டு ஏதோ சிவப்பு பழம் என நினைத்து அதைப் பறித்துவர காற்றின் வேகத்தில்  புறப்பட்டு விட்டார்.

அன்று சூரிய கிரகணமாகையால் ராகு சூரியனைப் பிடிக்க வந்துகொண்டு இருந்தான்.
வழியிலே ஆஞ்சநேயர் செல்லும் வேகத்தைக் கண்டு, பயந்து நடுக்கமுற்று, தன் கடமையைச் செய்யமுடியாது போய்விட்டதே என இந்திரனை நினைத்து முறையிட்டான்.

இந்திரன் தன் கையிலிருந்த வஜ்ஜிராயுதத்தை வீசினான்.
இமைக்கும் நேரத்தில் ஆஞ்சநேயர் இடியென முழங்கி பூமியில் மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட வாயு பகவானுக்கு கோபம் வந்தது.
குகைக்குள் சென்று தன் முச்சை நிறுத்திக் கொண்டார்.
இதனால் உலகமே சுவாசம் இல்லாமல் தவித்தனர்.

இதனை அறிந்த அஞ்சனையும் கேசரியும் “ஹே பரந்தாமா! உன் அனுக்கிரகத்தால் பிறந்த குழந்தைக்கு இந்நிலை உண்டானதே! உன் சக்திதான் என்ன” எனப்புலம்பி வருந்தினாள்.
இதையறிந்த தேவர்கள் அஞ்சனையிடம் சென்று உன் மகன் மகேஸ்வரனுடைய அருள்பெற்றவன் என்பதால் அவனுக்கு மரணமே இல்லை.

சிரஞ்சீவியாக வாழப் பிறந்தவன்.

வஜ்ஜிராயுதம் ஒன்றுதான் அவனை தடுத்து நிறுத்த முடியுமா என்ன என்றனர்.

ஸ்ரீமன் நாராயணனின் தோழனாக அழியாப் புகழை அடைவான் எனக்கூறி தேவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக அஷ்ட மா சித்திகளை ஹனுமனுக்கு வழங்கினார்கள்.

எந்த அஸ்திரமும் ஹனுமனை ஒன்றும் செய்துவிட முடியாது.  அதனால் தான் மாயக் கண்ணன் மஹாபாரதத்தில் காண்டீபனின் தேரின் கொடியில் ஹனுமனை நிறுத்தினார்.

அதனால் தான் மஹா பாரதத்தில் பார்த்தனுக்கு வெற்றி உண்டானது.

வஜ்ஜிராயுதம் தாக்கி தாடை நீண்டுவிட்டதால் ‌ஹனுமன் என அழைக்கப்பட்டார்.

பெரிய மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து அடுத்த மலை உச்சியில் சென்று விழச்செய்யும் வல்லமை பெற்று விளங்கினார்.

அவ்வாறு எறியும் மரங்களும் அதன் வேர்ப்பகுதியில் ஒட்டியிருக்கும் மண்ணும், கல்லும் தவம் செய்யும் முனிவர்களின் ஆசிரமங்களில் சென்று விழுந்து இடையூறு செய்யவே ஒரு கட்டத்தில் முனிவர்கள் கோபமுற்று அவர் வலிமையை அவனால் உணரமுடியாது போகட்டும் என சாபமிட்டனர்.

ஹனுமன் வலிமையை பிறர் எடுத்துக்கூறினால் மட்டுமே உணரமுடியும்.

ஆஞ்சநேயரின் பிறப்பால், அஞ்சனா தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார்.

ஆஞ்சநேயர் பிறந்தவுடன், சாபத்தில் இருந்து விமோசனம் பெற்ற அஞ்சனை, வான் உலகுக்கு திரும்பினாள்.

ராம பிரானின் தீவிர பக்தனான ஆஞ்சநேயர் செய்த சாகசங்கள் பல ஆயிரம்.
இலங்கையின் அரசனான ராவணனின் கையில் இருந்து சீதா தேவியை மீட்க ஸ்ரீராமருக்கு உதவினார்.
ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை முதன்முதலில் ஆஞ்சநேயர் தான் கூறினார்.

தாய் சீதா தேவியின் ஆசிர்வாதத்தால் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவராகவும்,
ஸ்ரீராமபிரானின் தீவிர பக்தனாகவும் விளங்கினார்.

ப்ராண தேவரின் மூன்று அவதாரம்
த்ரேதா யுகத்தில் ஸ்ரீஹனுமனாக அவதரித்து ஸ்ரீ ராம சேவை செய்தார்.

துவாபர யுகத்தில் ஸ்ரீபீமனாக ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்தார்
கலியுகத்தில் ஸ்ரீமத்வாச்சார்யாராக அவதரித்து ஸ்ரீ வேதவியாச சேவை செய்தார்.  

துவாபர யுகத்தில் ஹனுமனும் பீமனும் சந்திக்கும் தருணம் வந்தது இருவரும் வாயுவின் அம்சம் அது எப்படி ஸ்வாமி என்று நீங்கள் கேட்கலாம்,

ஆம் தேவ புருஷர்கள் பல வடிவங்களில் இருப்பார்கள் உதாரணம்
த்ரேதா யுகத்தில் ஸ்ரீராமாரும் பரசுராமரும் மஹா விஷ்ணுவின் அம்சமே.
அதேபோல் துவாபர யுகத்தில் கண்ணனும் வேதவ்வியாசரும் தான் இருவரும் சாக்ஷாத் மஹா விஷ்ணுவின் அம்சமாவர்.

இப்போதும் ராமாயணம் படிக்கும் பக்தர்களிடமும் ஸ்ரீராம நாமம் சொல்பவர்களிடமும் ஆஞ்சநேயரின் கிருபா கடாக்ஷம் இருந்து கொண்டே இருக்கும்.

ஹனுமன் கதையை சுருக்கமாக கூறியுள்ளேன்.

ஹனுமனின் கதையை படிப்பவர்களுக்கு புத்தி பலம் ஞானம் பொறுமை செல்வம் எல்லாம் ஸ்ரீராமரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

ஸ்ரீராம நாமமே ஹனுமனை பரம சந்தோஷத்தில் ஆழ்த்தும்.
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வத
ஸ்ரீ ராமதூத க்ருபா சிந்தோ
மத்கார்யம் ஸாதய ப்ரபோ
ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்சநேயம் நமாம்யஹம்
புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம்ச
ஹனுமந் ஸ்மரணா பவேத்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனும ப்ரசோதயாத்
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.