Breaking News :

Monday, April 14
.

ஏழு அதிசயங்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதப் பெருமாள்?


எல்லாமே 7 என்ற பெருமையைக் கொண்ட தலம் ஶ்ரீரங்கம்.

7 பிராகாரம், 7 மதில்கள், ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என ஏழு தாயார்கள், 7 உற்சவம், 7 திருவடி சேவை, 7 கண்டுகளிக்கும் சேவை என ஏகப்பட்ட 7 அதிசயங்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ளன. அதில் முக்கியமான 7 அதிசயங்கள் இன்றும் ஆச்சர்யத்தைக் கொடுப்பவை. அவை…

1. வளரும் நெற்குதிர்கள்
2. அசையும் கொடிமரம்
3. ஸ்ரீராமாநுஜரின் திருமேனி
4. தேயும் அரங்கனின் செருப்புகள்
5. அரங்கனின் ஜொலிக்கும் திருக்கண்கள்
6. ஐந்து குழி மூன்று வாசல்
7. ரங்க விமானம்

வளரும் நெற்குதிர்கள்

20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நெல் சேமிப்பு கிடங்கிகள் வட்டவடிவமாக அமைந்தவை. மொத்தமாக 1500 டன் அளவுக்கு இந்த கிடங்கியில் நெல் சேமிக்க முடியுமாம். எந்தக் காலத்திலும் இந்த குதிர்களில் நெல் இல்லாமல் போனதே இல்லை என்ற பெருமையைக் கொண்டதாம் இவை. அதுபோல எத்தனை நெல் கொட்டினாலும் விரிவடைந்து ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்றும் அதிசயமாக இந்தக் குதிர்களைச் சொல்கிறார்கள்.

அசையும் கொடிமரம்

ரெங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தின் முன்பு விழுந்து வணங்கி உயர்ந்து நோக்கினால் அசையும் தோற்றத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் என்கிறார்கள். அப்படி அசையும் விதமாக காட்சி அளித்தால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீராமாநுஜரின் திருமேனி

ஸ்ரீராமாநுஜர் தமது 120-வது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள ஆண்டு மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் பகவத் சாயுஜ்யம் அடைந்தார். இவரது திருமேனி அரங்கனுடைய வசந்த மண்டபத்தில் அப்படியே பிரதிஷ்டை செய்யப்பட்டது. 884 ஆண்டுகள் கடந்தும் ஸ்ரீராமாநுஜரின் திருமேனி அப்படியே காட்சி தருவது திருவரங்கத்து அதிசயங்களில் ஒன்று. தானான திருமேனியில் இன்றும் தலைமுடி, கைநகம் போன்றவை இருப்பதையும் வளர்ந்திருப்பதையும் காணலாம்.

தேயும் காலணிகள்

திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம்.
இந்த காலணிகளைச் செய்வதற்காக காலம் காலமாக தனித்த தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்றுபோலவே இருக்கும் என்பதும் அதிசயம்.
6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப்பட்டவை போல தேய்மானம் கொண்டிருக்கும் என்பதும் அதிசயம்.

ஸ்ரீரங்கனின் ஜொலிக்கும் திருக்கண்கள்

ரங்கனின் திருக்கண்கள் விலை மதிப்பில்லாத வைரங்களால் உருவானவை என்றும், அவை விபீஷணானால் வழங்கப்பட்டவை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவை அயலார் காலத்தில் திருடு போய்விட்டன என்றும், இப்போது அவை ரங்கனின் திருக்கண்களில் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

ஐந்து குழி மூன்று வாசல்

ஸ்ரீரங்கம் கோயிலின் தாயார் சந்நிதிக்கு வெளியே இருக்கும், ஐந்து குழி மூன்று வாசல் அற்புதமானது.
இங்குள்ள ஐந்து குழிகள் வழியே, ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கம் பார்த்தால் பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதே ஐந்து குழி என்றும் மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் வழி என்பதும் பெரியோர்கள் வாக்கு.

ரங்க விமானம்

ஸ்ரீரங்கத்தின் பெருமைகளில் ஒன்றான ரங்க விமானம் சுயம்புவாக உருவானது. இந்த விமானத்தைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கிருந்து வழிபட்டாலும் முக்தி நிச்சயம் என்கிறது ஸ்ரீரங்கத் தலவரலாறு.

இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ஓம் என்கிற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் அமுதக் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்த அமுதக் கிண்ணம் மெல்ல அவர் வாயை நோக்கி நகர்ந்து போவதாகவும், அது வாயருகில் சென்று சேர்க்கையில் இந்த உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

ரங்கா ரங்கா ரங்கா ஸ்ரீ ரங்கநாதா உன் திருவடிகளே சரணம்
ஓம் நமோ நாராயணாய

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.